மேற்கு ஆஸ்திரேலியாவின் சுற்றுலாத்தலங்கள் (4)

கிம்பர்லி

‘கிம்பர்லி’ என்பது ஆஸ்திரேலியாவின் வடமேற்கு எல்லையில் ஏறத்தாழ 4,23,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள பகுதி. பசுமையான வயல்வெளிகளும், கொட்டும் அருவிகளும், ஓடும் நதிகளும், நீரோடைகளும், குகைகளும், வனமிருகங்களும் நிறைந்த இயற்கை எழில் சொட்டும் இந்தப் பகுதி இங்கிலாந்து நாட்டை விட மூன்று மடங்கு பெரியது! அதே நேரம், பரப்பளவு விகிதப்படி உலகிலேயே மிகக் குறைந்த அளவு மக்கள் வசிக்கும் இடம் இது. மொத்தமே 25,000 பேர்தான் இங்கு வசிக்கிறார்கள்.

மர்மக் குகைகளும், வனங்களும் பிரம்மாண்டமான ஆமைகளும், உப்பு நீர் வாழ், நன்னீர் வாழ் மிகப் பெரும் முதலைகளும், ஆஸ்திரேலியாவின் தனிப்பட்ட விலங்கான கங்காருகளும் பற்பல பறவைகளும், இன்ன பிற அபூர்வமான வனவிலங்குகளும், வண்ண வண்ணக் காட்டு மலர்ச் செடிகளும், விசிறிப் பனைமரங்களும், போப் மரங்களும் கொண்ட இந்தப் பழம்பெரும் வனப் பகுதி, பார்ப்போருக்கு வாழ்வில் மறக்க முடியாத அனுபவத்தைத் தர வல்லது!

மனதைப் பக்குவப்படுத்திக் கொண்டு, தக்க முறையில் திட்டமிட்டுக் கொண்டு, எதையும் எதிர்நோக்கும் திட மனதுடன் செல்பவர்களுக்குக் கிம்பர்லி ஓர் அற்புத அதிசய உலகிற்கு வழி திறக்கும் என்பது உறுதி!

பில்பாரா

‘பில்பாரா’ என்பது பல கோடி வருடங்களுக்கு முந்தைய, உலகின் பழம்பெரும் பகுதியாகும். இங்கு இயற்கை அன்னை கைதேர்ந்த சிற்பியைப் போல் செதில் செதிலாக உருவாக்கி இருக்கும் நில அமைப்பு காணவேண்டிய காட்சியாகும்! ஆஸ்திரேலியாவில், ஒரு லட்சம் கிலோமீட்டர் (38,610 சதுர மைல்கள்) பரப்பளவில் அமைந்துள்ள "கரிஞ்சினி தேசியப் பூங்கா" சுற்றுலாப் பயணிகள் தவறாமல் கண்டு மகிழ வேண்டிய ஒன்று.

வனப் பிரதேசத்தின் ஊடே பாறைகளிடையே தெளிவான சுனைகளும், நீரூற்றுகளும், அருவிகளும் காண்பவர்களுக்குப் புத்துணர்வை ஊட்டுகின்றன. மில்ஸ்டிரீம் – சிசெஸ்டர் தேசியப் பூங்கா (Millstream – Chichester National Park) இங்கு பனைமரங்களுக்கிடையே ஒரு பாலைவனச் சோலையை உருவாக்குகிறது.

இவ்வளவு இயற்கை எழில் சூழ்ந்த பகுதியாக இருந்தாலும் இந்த இடம் புகழ் பெற்றதென்னவோ இங்கிருக்கும் பழங்குடியினருக்காக. ஆஸ்திரேலியாவின் உண்மையான மண்ணின் மைந்தர்களான பழங்குடிகள் இங்கு இன்றும் வசிக்கின்றனர்.

42 தீவுகளைக் கொண்ட இப்பகுதியில் கண்ணுக்கும் ஆராய்ச்சிக்கும் விருந்தளித்து வரும் 1,00,000க்கும் மேற்பட்ட பாறைச் சிற்பங்கள் 4,00,000 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிருந்த மக்கள் வாழ்ந்த வாழ்க்கையை, அவர்கள் வரலாற்றை, பண்பாட்டை நம் கண்முன் கொண்டு வருகின்றன. இயற்கை எரிவாயு, இரும்புத் தாது வெட்டியெடுத்தல் போன்றவையும் இங்கு சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன

About The Author