மேற்கு ஆஸ்திரேலியாவின் சுற்றுலாத் தலங்கள் (6)

கரீஜினி தேசியப் பூங்கா

மேற்கு ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய தேசியப் பூங்காவான "கரீஜினி தேசியப் பூங்கா" 1861ஆம் ஆண்டில் ஆய்வாளர் எஃப்.டி.கிரிகோரி (F.T.Gregory) அவர்களால் வெளியுலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அவர் இப்பூங்காவை நடுநாயகமாகக் கொண்டிருந்த மலைத்தொடருக்குத் தன் நண்பர் எட்வர்ட் ஹேமர்ஸ்லியின் (Edward Hamersley) பெயரைச் சூட்ட, இப்பூங்காவும் அந்த மலையின் பெயரால் ஹேமர்ஸ்லி பூங்கா என அறியப்பட்டது.

Lizads"கரீஜினி தேசியப் பூங்காவில் பல்வேறு வகையான காட்டு விலங்குகளும், நில அமைப்புகளும், மரம் செடி கொடிகளும் இருக்கின்றன. கால மாறுபாடுகளுக்கு ஏற்பக் காட்டுப் பூக்களும் இங்கு பூக்கின்றன. குளிர்காலத்தில் நிலப்பரப்பு முழுவதும் கேசியா, வாட்டில் (cassias and wattles), வடக்கு நீலமணி (northern bluebells), ஊதா முல்லா முல்லா (purple mulla mulla) போன்ற மலர்களாலும், மழைக்காலத்தில் வேறு வகை மலர்களாலும் பூத்துக் குலுங்குவது கண்கொள்ளாக் காட்சியாகும். இப்பூங்காவில் பெரும் பல்லிகள் (goannas), காலில்லாப் பல்லிகள், பைத்தான் முதலான பல்வகை மலைப்பாம்புகள், வகை வகையான பறவைகள், பல்வகை வௌவால்கள் போன்றவையும் சிகப்புக் கங்காரு, யூரோ (euros), பாறை வல்லபி (rock-wallabies), எகிட்னா எனப்படும் குஞ்சு பொரித்துப் பாலூட்டும் எறும்புத் தின்னி (echidnas) போன்ற ஆஸ்திரேலியாவுக்கேயுரிய சிறப்புயிரினங்களும் ஏராளமாக இருக்கின்றன.

கானுயிர்களான பெரும்பல்லிகள் அதிகபட்சம் எவ்வளவு பெரிது வளரக்கூடும் என்பதற்கு இங்குள்ள படமே சாட்சி. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மாநகரில் உள்ள அருங்காட்சியகத்திலிருக்கும் ஒரு பெரும் பல்லி எலும்புக்கூடு இது!

பூங்காவின் வட பகுதியில் அமைந்துள்ள ஸ்பினிஃபெக்ஸ் பகுதியில் (spinifex country) அபூர்வக் கூழாங்கற்கள் குவியல் குவியலாகக் கிடைக்கின்றன. கரீஜினியின் வடக்குப் பகுதியில் நூறு மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்குகள் இயற்கையின் அபூர்வ அழகை அள்ளிப் பொழிகின்றன. இந்தப் பள்ளத்தாக்குகளுக்கிடையில் ஓடும் உறைய வைக்கும் குளிர் ஓடைகளில் நீந்தி மகிழ மிகவும் உடலுறுதி தேவை!

இந்தப் பூங்கா பல நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பனிஜிமா (Banyjima), குராமா (Kurrama) இன்னவோங்கா (Innawonga) எனும் பழங்குடி இனத்தவர் பலரின் உறைவிடமாக இருந்து வந்துள்ளது.. அப்பழங்குடி மக்கள் தீக்குச்சி வேளாண்மை (fire stick farming) என்ற முறையில் பல்வேறு செடி கொடிகளையும் பயிரிட்டு, வகை வகையான உயிரினங்களையும் வளர்த்து இன்று நாம் கண்டு களிக்கும் இந்தப் பூங்காவை உருவாக்கி வைத்துள்ளனர்.

சுறா வளைகுடா

இந்தத் தொடரின் முதல் பகுதியாக நாம் பார்த்த மங்கி மியா கடற்கரையின் முக்கியமானதொரு பகுதி இந்தச் சுறா வளைகுடா (Shark Bay). இங்கு ஓட்டுக் கடற்கரை (Shell Beach) எனப்படும் வெள்ளை முத்துச் சிப்பிகளால் ஆன 6 கிலோமீட்டர் (4 மைல்கள்) நீளமும், 10 மீட்டர் (33 அடி) ஆழமும் உள்ள கடற்கரையைக் காணக் கண் கோடி வேண்டும். இங்கு, உங்களுக்கு அதிர்ஷ்டமிருந்தால் உலகில் பத்தாயிரம் மட்டுமே எஞ்சியுள்ள, கடற்கன்னி, அவில்லியா எனவெல்லாம் தமிழில் அழைக்கப்படுகிற கடற்பசுக்களை (Dugong) நீங்கள் காணலாம். மேலும், கடல் ஆமைகள், திமிங்கிலங்கள், இறால்கள், நத்தைகள், கடற் பாம்புகள் போன்றவற்றையும் காணலாம்.

— படம்: நன்றி – Wikipedia.

About The Author