யாரோ இல்லை எவரும் -கல்யாணச் சந்தை

கல்யாணச் சந்தை

கல்யாணச் சந்தையிலே
காசு கொடுத்து வாங்கியில்லே
மாப்பிளை புடிச்சு வந்தார்
மகளுக்குக் கட்டித் தந்தார்.

மகபடும் பாட்டைப் பார்த்து
மனம் மிக நொந்துகிட்டு
பகல் இரவா புலம்பிக்கிட்டு
பரிதவிச்சார் இதை சொல்லிப்புட்டு

கணவனுக்கு பதிலா நாலு
கறவை வாங்கிப் போட்டிருந்தா
கவலையில்லாம என் கண்ணம்மா
கஞ்சி குடிச்சு பொழைப்பாளே

***

நாற்காலியொன்று வேண்டும்

குருவிக்கூட்டைப் பிரித்துவிட்டு
புதிதாக
கம்பிக்கூடு பரிசாம்
மலரின் இதழ்களைப்
பிரித்துவிட்டு
மாற்றிதழ்கள்
பரிசாம்.

நாங்கள் நாங்களாக
இல்லாமல்
நசுக்கி விட்டபின்
நல விசாரிப்புகள்.

மனத்தடியின்
மர்மம்தான்
என்ன
மௌனமாய் மனிதம்
மடிந்து கொண்டிருக்கிறது.

பாலையை
பாழாக்கி விடாமல்
பால் வார்ப்பவர்கள்
இல்லையே.

நலிந்து போய்
நின்றிருக்கிறோம்.
நாட்டிற்குவேண்டும்
நல்லதாய் ஒரு நாற்காலி.

***

(யாரோ இல்லை எவரும் – மின்னூலில் இருந்து.)

To buy the EBook, Please click here

About The Author