யாவுமாய் நீ

என்னுள்ளிருந்த மிருகம்
வெளிப்பட்டது இதுவே
முதல் முறையாயிருக்கலாம்.

உன் மனதில்
ஊசலாடிய கேள்விகள்
கண்கள் வழியே
கண்ணீர் கயிறுகளில்
ஆடின.

தெரிந்தோ தெரியாமலோ
நீ உடைத்து விட்ட
புகைப்படத்தின்
கண்ணாடிக் கூடு
காட்டியது என்
நடுங்கும் விரல்களையும்
உடைந்த என் மனதையும்.

என் அணுக்கள்
எல்லாம் பரவிக்கிடக்கும்
என்னவள் இப்பொழுது
ஒரே ஒரு புகைப்படத்தில்தான்
உயிர் வாழ்கிறாள்.

கண்கள் கடந்து
விழுந்த கண்ணீர்
வழியே உன் தாய்
மீதான எனது பாசம்.

உன் பிஞ்சுக்
கரங்களால் என்
கன்னத்தில் கைவைத்து
"அழாதே அப்பா"
என்றாய்.

உடைந்த கண்ணாடியில்
உன் தாய் முகம் மேல்
உன் பிம்பம்!

About The Author