ராஜராஜேஸ்வரம் – 1000 (5)

கட்டடக்கலையில் ஓர் அற்புதம்!

ஒரு பழங்காலக் கோவிலை, அது கட்டப்பட்ட காலம் என்ன என்று நாம் துல்லியமாகக் கணக்கிட உதவுபவை கல்வெட்டுக்களும் அந்தக் கோவில் கட்டப்பட்டிருக்கும் கட்டடக்கலைப் பாணியும்தான்.
காலத்திற்குக் காலம் கட்டடம் கட்டும் நுணுக்கங்கள் வேறுபட்டிருக்கின்றன. முதலில், பல்லவர் காலத்தில்தான் கற்களால் கோவில்கள் கட்டப்பட்டன என அறிகிறோம். அவை அனேகமாகக் குடைவரைக் கோவில்கள். பின்னர் வந்த சோழ மன்னர் காலத்தில் கட்டடக்கலை மிகவும் மேன்மையான நிலையில் இருந்தது. அந்தக் கால சோழர் கட்டடக்கலைக்குத் தஞ்சைப் பெரிய கோவில் சிறந்த எடுத்துக்காட்டு.

"ஒரு கட்டம் ஆயிரம் ஆண்டுகள் நிலைத்து நிற்பது என்ன அதிசயம்? எகிப்துப் பிரமிடுகள் இல்லையா? உலகத்தில் பழங்கால நினைவுச் சின்னங்கள் வேறு இல்லையா?" என்று கேட்கலாம். ஆனால், அவற்றுக்கும் பெரிய கோவிலுக்கும் உள்ள வேறுபாடு, இன்றும் அது வாழும் கோவில்! அன்று என்ன என்ன பூஜைகள், விழாக்கள் கொண்டாடப்பட்டு வந்தனவோ அவை இன்றும் தொடர்கின்றன. இன்றும் மக்கள் சிவபெருமானின் அருள் பெறக் கோவிலுக்கு வருகிறார்கள். முதன் முதலாக முழுவதும் கற்களைக் கொண்டே கட்டப்பட்ட கோவில் இது என்பது சிறப்பு. இந்தக் காலத்தில் நாம் காண இயலாத, பெரும்பாலும் வழக்கொழிந்துவிட்ட தொழில்நுட்பத்தையும் நுணுக்கத்தையும் கொண்டு கட்டப்பட்டிருக்கும் இந்தக் கோவில், இதைக் கட்டுவதில் ராஜராஜன் எடுத்துக் கொண்ட கவனத்தைக் காட்டுகிறது.

கட்டடக்கலை, கட்டடத்தின் காலத்தை அறிய மட்டுமல்ல; அந்தக் கலை குறித்து நம் மூதாதையர்கள் பெற்றிருந்த நுண்ணறிவினை அறியவும் உதவுகிறது. நமக்கு இருப்பதைப் போலவே கோவில்களுக்கும் உடல் உறுப்புக்கள் இருக்கின்றன. கட்டடக்கலைக்கு ‘மயமதம்’ என்ற சிற்பநூல் இருக்கிறது. கட்டட உறுப்புக்களும் மாறிவரும் காலத்திற்கும் கட்டடக்கலை அறிவிற்கும் ஏற்றாற்போல வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு வடிவங்கள் கொண்டு விளங்கியிருக்கின்றன.
ராஜராஜ சோழன் நிறுவிய பெரிய கோவிலின் கட்டடக்கலையைச் சுருக்கமாகக் காணலாம்.
ஆயிரம் ஆண்டுகளில், இந்தக் கோவிலில் பெரிய அளவில் பழுது ஏதும் ஏற்படவில்லை என்பதே சோழர் காலத்தின் கட்டுமானத் திறமைக்கு முதற்பெரும் சான்று. முந்தைய காலங்களில், கோவில் கட்டுவதில் என்னென்ன குறைகள் ஏற்பட்டிருக்கின்றன என்பதை ஆய்ந்து, அந்தத் தவறுகள் நிகழாமல் கவனமாகச் செதுக்கப்பட்டதுதான் ராஜராஜேஸ்வரம்! சோழர் ஆட்சி பற்றி, கட்டடக்கலை நுட்பம் பற்றி அனைத்தையும் விவரிக்கின்றன அங்குள்ள கல்வெட்டுக்கள். இந்தக் கோவில் கட்டுவதற்கு ஐம்பது வருடங்களுக்கு முன்னதாக ஸ்ரீனிவாச நல்லூரில் இதே பாணியில் இதன் முன்னோடியாக இரண்டு தளங்களுடன் கோவில் கட்டப்பட்டது. கோவில்களிலேயே முதன் முதலாக கர்ப்பக்கிரகத்தைச் சுற்றி இரண்டு சுவர்கள் அமைக்கப்பட்டது தஞ்சைப் பெரிய கோவிலில்தான். இந்த சுவர்களுக்கு இடையில் பக்தர்கள் கர்ப்பக் கிரகத்தைச் சுற்றி வர முடியும். மேலும், இரண்டு சுவர்கள் வைத்த தாங்குதளம் கட்டடத்திற்கும் இரு மடங்கு வலிமை சேர்க்கிறது. இதனை ‘சாந்தாரா’ வகையைச் சேர்ந்தது என்று கூறுவார்கள். பல்லவர்கள் காலத்தில் இந்தத் தொழில்நுட்பம் கிடையாது. கற்களை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிக் கட்டினார்கள். ஆனால், பெரியகோவிலில் வெளியே ஒரு கல் உள்ளே ஒரு கல் என்று இரண்டு கற்களையும் இணைத்துக் கட்டியுள்ளார்கள். வெளியிலுள்ள கல்லில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், அவற்றில் நிறைய வடிவ வார்ப்புக்கள், வேலைப்பாடுகள் இருக்கும். இவற்றில் உபானா, ஜகதி, குமுதப்பட்டு எனப் பலவகை உண்டு. வெளியே வைக்கும் கல் மாதிரி உள்ளேயும் ஒரு கல் இருக்கும். ஆனால், அதில் வேலைப்பாடு இருக்காது. நடுவில் செங்கல், சுண்ணாம்பு வைத்த கரைசலை ஊற்றி இணைப்பார்கள். மேலே கோவில் கட்டடம் எழும்பும்போது இந்தக் கட்டுமானம் அதனைத் தாங்க உதவுகிறது. இரண்டு தளம் வரை இதே மாதிரி அமைக்கப்பட்டதால் கோவில் இன்றும் நிலையாக பலமாக நிற்கிறது.

கோவில் கட்டடத்திற்கு அடித்தளமாக மணல் படுகையும் சிறுபாறைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. நில நடுக்கம், பூமியிலிருந்து அதிகமாகத் தண்ணீர் உறிஞ்சப்படுவதால் ஏற்படும் அதிர்வுகள் ஆகியவற்றினால் அசைவுகள் ஏற்படும்போது கீழே அடித்தளத்தில் உள்ள பாறைகள் அதிர்வுகளுக்கு ஏற்றாற்போல் அசைந்து, மேலே இருக்கிற சுவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க இத்தகைய கட்டுமானம் உதவும். அறிவியல்பூர்வமான கட்டடக்கலை முறை சோழ மன்னன் காலத்தில் எவ்வளவு உச்சத்தில் இருந்தது என்பதை இதன் மூலம் இந்தக் கால விஞ்ஞானிகளும் அறியலாம். இரண்டு தளங்களுக்கு மேலே மற்ற தளங்களைக் கல் அடுக்குகளை எழுப்பி ஒன்றோடொன்று மரக்குமிழ்களால் இணைத்துக் கட்டியிருக்கிறார்கள்.

இதே முறையைப் பின்பற்றிப் பெரிய கோவிலை விட அதிக உயரமாகக் ‘கொனாரக்’ கோவில் கட்டப்பட்டது. ஆனால், மேல் தளங்களை இணைக்க அவர்கள் இரும்புக் கம்பிகளைப் பயன்படுத்தினார்கள். அவை காலம் செல்லச் செல்லத் துருப் பிடித்துக் கட்டடத்தின் நிலையான தன்மையே மாறியது.

இந்தக் கட்டடக்கலை அதிசயத்தால்தான் ஆயிரம் ஆண்டுகளைத் தாண்டியும் கம்பீரமாகத் தஞ்சைக் கோவில் தமிழர்தம் பெருமையை உலகுக்குப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

இந்தக் காலக் கட்டடப் பொறியாளர்கள் நமது பழைய பாரம்பரியச் சின்னங்கள் எவ்வாறு கட்டப்பட்டன என்பது பற்றியெல்லாம் தெரிந்து கொள்ள விழைவதில்லை. சமீபத்தில் நூறாண்டுகள் ஆன கட்டடங்களை நிலநடுக்கம், கடற்கோள் (சுனாமி) போன்றவற்றிலிருந்து எப்படிப் பாதுகாப்பது என்ற ஆய்வரங்கம் ‘ரீச் பவுண்டேஷ’னின் டாக்டர் தியாக சத்தியமூர்த்தி அவர்களால் நடத்தப்பட்டது. இதில் அதிசயம், அந்த அரங்கில் சொல்லப்பட்ட ஆலோசனைகள், ஏற்கெனவே இந்த ஆயிரம் ஆண்டுப் பழமையான கோவிலில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்ததுதான். எனவே, நம் கட்டடக்கலை நிபுணர்கள் பழங்காலப் பாரம்பரிய நினைவுச் சின்னங்களுக்குச் சென்று அந்த நுணுக்கங்களைக் கண்டறிதல் இன்றியமையாதது.

இவ்வாறு, ‘காலத்தால் அழியாதது’ என்ற பாராட்டுக்குச் சாலப் பொருத்தமாகத் திகழ்வதால்தான் யுனெஸ்கோ (UNESCO) நிறுவனம் ‘உலகப் பாரம்பரிய நினைவுச் சின்ன’மாக நம் தஞ்சைப் பெரிய கோவிலை அறிவித்திருக்கிறது.

–வரும்…

தகவல்கள் உதவி: பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பேரவை, வரலாற்று ஆசிரியர்கள் – நீலகண்ட சாஸ்திரியார், நாகசாமி, கலைக்கோவன், குடவாயில் பாலசுப்ரமணியன், வரலாறு.காம், ரீச் பவுண்டேஷன்.

புகைப்படங்கள் உதவி: திரு.சந்திரசேகர்.

About The Author