ராஜராஜேஸ்வரர் திருக்கோயில்

‘ராஜராஜேஸ்வரி’ என்ற பெயரைக் கேட்டிருக்கிறோம். லலிதா சஹஸ்ரநாமத்திலும் இந்தப் பெயர் வருகிறது. ஆனால், ஈசனை ‘ராஜராஜேஸ்வரர்’ என்று அழைக்கும் இடம் ஒன்று உள்ளது என்றால், அது கேரளாவில் உள்ள தனிப்பரம்பு என்னும் ஸ்தலம்தான்.

கேரளத்தில் இருக்கும் கனூரிலிருந்து சுமார் 25 கி.மீ சென்றால் இந்த இடம் வந்து விடும். இங்குள்ள சிவன் மூன்று யுகங்களாக மூன்று தடவைகள் லிங்கரூபமாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார். ஆகையால் இந்த லிங்கத்தின் சக்தி மிக அதிகம்!

ஒரு தடவை சிவபெருமான் சூரியனது பிரகாசமான கதிர்களைக் கடைந்து மூன்று லிங்கங்களை உருவாக்கினார். பின்னர் அவற்றைப் பார்வதி தேவியிடம் கொடுத்தார். பார்வதி தேவியும் அவற்றைப் பெற்றுக்கொண்டு பூஜிக்க ஆரம்பித்தார்.

திரேதா யுகம் வந்தது. அந்த யுகத்தில் மாந்தாதா என்ற முனிவர் பரமேஸ்வரனைக் குறித்து கடும் தவம் இயற்றினார். சிவபெருமானும் அவர் முன் தோன்றி அவரை வாழ்த்தினார். பின்னர், பார்வதி தேவியிடம் அவருக்கு ஒரு லிங்கத்தைத் தரும்படி கூறினார். பார்வதிதேவியும் தான் வழிபட்டு வந்த மூன்று லிங்களுள் ஒன்றை முனிவருக்கு வழங்கினார். பின்னர் அவரிடம்,

"முனிவரே! நீங்கள் இதை ஜாக்கிரதையாகப் பிரதிஷ்டை செய்ய வேண்டும். அந்த இடத்தில் மரணம் நிகழ்ந்திருக்கக்கூடாது. தவிர சுடுகாடு ஏதும் இல்லாத இடமாக இருக்க வேண்டும்" என்றார்.

முனிவரும் அதை வாங்கிக்கொண்டு அதைப் பிரதிஷ்டை செய்ய மிகப் பாடுபட்டார். மரணமில்லாத இடமே கிடைக்கவில்லை. பின், தனிப்பரம்பு எனும் இடத்தில் உலோகத்தினால் ஆன வட்டவடிவில் உள்ள இடமே அதற்கு தகுந்த இடம் என்று கண்டுபிடித்தார். அங்கேயே பிரதிஷ்டை செய்து அவர் காலமாகும் வரை தொடர்ந்து பூஜித்தார். அவர் இறந்தவுடன் ஒரு பராமரிப்புமில்லாமல் அந்த தெய்வம் மறைந்து போனது.

பின், துவாபர யுகம் வந்தது. மாந்தாதாவின் மகன் பரமேஸ்வரன் மேல் தவசு இருந்து அவரும் பரமேஸ்வரனிடமிருந்து இன்னொரு லிங்கம் பெற்றார். அந்த லிங்கத்தைத் தன் தந்தை பிரதிஷ்டை செய்த லிங்கத்தின் இடத்திலேயே பிரதிஷ்டை செய்தார். காலம் உருள இதுவும் மறைந்து போனது.

பின், கலியுகம் தோன்றியது. மூட்சுக வம்சத்தைச் சேர்ந்த சதா சோமன் என்னும் மன்னன் சிவனைக் குறித்து தவம் செய்தான். சிவனும் அவனுக்கு மூன்றாவதாக இருந்த லிங்கத்தை அளித்தார். அதைப் பிரதிஷ்டை செய்யப் பல இடங்கள் இருந்தாலும் சதா சோமன் அதைப் பிரதிஷ்டை செய்யவில்லை. அம்பாளையும் பூஜித்து அவளுடைய அனுமதியும் பெற்று, பின் அகஸ்திய முனிவரையும் பார்த்து நமஸ்கரித்து விட்டு பிறகு பழைய இரண்டு லிங்கங்களைப் பிரதிஷ்டை செய்த இடத்திலேயே இதையும் ஸ்தாபனம் செய்தார். அந்த லிங்கத்தின் நேர் எதிரே அகஸ்திய மகா முனிவர் நெய் விளக்கு ஏற்றி வைக்க, அது இன்றும் எரிந்து வருகிறது.

இந்தக் கோயில் மற்ற கோயில்களை விடச் சற்று வித்தியாசமானது. இங்கு பெண்களைக் காலை நேரத்தில் உள்ளே அனுமதிப்பதில்லை. இரவு எட்டு மணிக்கு வரும் அத்தாழ பூஜைக்குப் பிறகுதான் பெண்கள் உள்ளே நுழைய முடியும். எட்டு மணிக்குப் பின் கருவறையில் பெண்கள் ராஜராஜேஸ்வரரைத் தங்கள் கரங்களினாலேயே பூஜை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். உள்ளே போகாமல் இருக்கும் நேரத்தில் வெளிப்பிரகாரத்தில் நின்றபடியே சேவிக்கிறார்கள். இதைப் பற்றிக் காரணம் கேட்டபோது.

"சிவன் தட்சிணாமூர்த்தியாகி ஞானக்கோலத்தில் தவம் செய்வதாகவும், அந்த நேரம் அவர் சன்யாசி கோலத்தில் இருப்பதால், பெண்கள் உள்ளே வந்தால் கவனம் சிதற வாய்ப்பு உண்டு ஆகையால் பெண்களை அந்நேரத்தில் உள்ளே அனுமதிப்பதில்லை" என்கிறார்கள்.

பார்வதி தேவி கூட அத்தாழ பூஜைக்குப் பிறகே ராஜராஜேஸ்வரரிடம் அழைத்து வரப்படுகிறாள். பின், இருவரையும் சேர்த்து மக்கள் பூஜிக்கின்றனர். அப்போது பெண்களும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

கருவறை எதிரில் ஒரு மண்டபம் இருக்கிறது. அதில் ஒருவரும் நமஸ்கரிப்பதில்லை. ஏனென்றால், ஸ்ரீ ராமன் ராவணனை வதம் புரிந்த பின் அங்கு நடந்து வந்து அந்த மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்தாராம். ஸ்ரீ ராமன் நடந்த மண்டபம் ஆனதால், அந்த ராமர் பாதம் புனித பாதமானதால், அதன் மேல் வேறு ஒருவரும் நடக்கக் கூடாது என்பதால் அங்கு நடக்க அனுமதியில்லை. ராமர் இங்கு இருந்த லிங்கத்தையும் பூஜித்தாராம்.

இங்கு பல சரும வியாதிகள் குணமாகின்றதாம். தவிர, இங்கு வந்து பூஜை, அபிஷேகம் செய்து வேண்டிக்கொள்ள மழலைச்செல்வம் உண்டாகிறதாம். எனவே, நீங்களும் சென்று ராஜராஜேஸ்வரியின் நாதர் ராஜராஜேஸ்வரை தரிசித்து வாருங்கள்!

About The Author