ரிஷபன் கவிதைகள்

எந்த அகராதியும்
வார்த்தைகளின் தொகுப்புதான்..
என் கவிதைகளுக்கான
வார்த்தைகள்
நிரம்பியே இருக்கின்றன..
சேகரித்து தொகுக்கும்
வேளையும் புத்தியும்
வாய்த்துவிட்டால்
என் கவிதை
உருப் பெற்று விடும்..
அதுவரை
அகராதியை எத்தனை முறை
புரட்டினாலும்
கண்ணில் படும் வார்த்தைகள்
வெற்று சொற்களே..

தெருமுனை வரை
விரட்டிக் கொண்டு வந்தன
நாய்கள்.
எல்லை முடிந்து விட்டதாய்
அப்படியே
நின்று குலைத்துப் போயின..
வீடு திரும்பிய பின்னும்
விடாமல் ஒலிக்கிறது
மனசுக்குள்
குரைப்பொலி.

‘நீ அவன் தானே’
என்று ஆர்வமாய்க்
கேட்டார் அவர்.
கேட்டபோது
அவர் கண்களைப் பார்த்தேன்.
‘இல்லை’ என்று சொல்ல
மனதில்லை..
‘ஆமாம்’ என்று சொல்ல
வழியில்லை..
அவர் கையின் ஜில்லிட்ட
ஸ்பரிசம்
ஏன் அவரைத்
தெரியாமல் போனது என்று
உள்ளூர புலம்பத் தோன்றியது
எனக்கு.

அவள் கண்களில்
தெரிந்த காதலை
என் வார்த்தைகளால்
அங்க்கீகரித்த போது
என் வாழ்வில்
ஒரு புது அத்தியாயம்
தெரிந்தது.
மணமான மறு வருடம்
பிறந்த மழலை
அதையே
பழைய புத்தகமாக்கி விட்டது
இப்போது..
இன்னொரு புது அத்தியாயம்
துவங்கி.

About The Author