வண்ணச்சிதறல் 2013

சென்னை பெருநகருக்குட்பட்ட பள்ளிகளுக்கிடையிலான வரைகலைப் போட்டி, சென்ற வாரம் 3.2.2013, ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை மியாட் ஹாஸ்பிடல் அருகில் உள்ளகே.கே.நகர் விமலா கான்வென்ட் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் இனிதே நடந்து முடிவுற்றது.

Vannachidharalஸ்டெப்ஸ் ஃபவுண்டேசன் நடத்திய ‘வண்ணச்சிதறல் 2013’ எனும் தலைப்பிலான இந்த படைப்பு ஊக்கப்போட்டியில் 42 பள்ளிகளில் இருந்துமுன்னூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் கலைத்திறனை, கற்பனா சக்தியை வெளிப்படுத்தினர். சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தூரத்தினை பொருட்படுத்தாமல் மாணவ மாணவியர் தங்கள் பெற்றோருடன் வந்து கலந்து கொண்டனர்.

காலை ஒன்பது மணியளவில் தொடங்கிய நிகழ்ச்சியில் ஸ்டெப்ஸ் ஃபவுண்டேசன் நிறுவனர் அகிலன் விழாவுக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றுப் பேசினார். ஸ்டெப்ஸின் இலக்கு மற்றும் செயல்பாடுகளைப் பற்றியும் விளக்கினார். மாணவர்கள் படிப்பில் மட்டுமல்லாது படைப்பாக்கத் திறனில் கைதேர்ந்தவர்களாய் விளங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திக் கூறினார்.

விழாவின் குறிப்பிடத்தக்க அம்சமாக, சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட திரையுலகின் பவர் ஸ்டார் டாக்டர் சீனிவாசன் பங்கேற்று மாணவர்களை வாழ்த்திப் பேசினார். தனது சிறப்புரையின்போது மாணவர்கள் கல்வியுடன் கூடிய பிற கலைகளிலும், அறிவியல் தொழில்நுட்பங்களில் படைப்பாக்க நுணுக்கங்களை வெளிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் குறிப்பிட்டார். வெண்திரையில் தனது நகைச்சுவையால் இளம் பருவத்தினரை கவர்ந்து வரும் பவர் ஸ்டார், தங்களிடையே தோன்றி பேசியது அனைத்து சிறார்களுக்கும் உள மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தம் துணைவியாருடன் விழாவில் கலந்து கொண்ட டாக்டர் சீனிவாசனுடன் மாணவர்கள் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

Vannachidharalதாம்பரம் சுகவனம் ஹெல்த்கேர் ரெசார்ட்டின் நிறுவனர் டாக்டர்.குமரேசன், விமலா கான்வென்ட் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியின் நிறுவனர் முத்துக்குமார், சிவகாசிப் பகுதியின் பஞ்சாயத்துத் தலைவர் அழகர், சிவகாசி ஏ.எம்.கே. டிராவல்ஸ் அதிபர் கே.பி.தர்மராஜன் மற்றும் நிலாச்சாரலின் உதவி ஆசிரியர் ரிஷி ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து கொண்டு உரையாற்றினர்.

துவக்க விழா நிறைவுற்றவுடன், போட்டிகள் தொடங்கின. ஓவியம் (Art) மற்றும் கைத்திறன் (Craft) போட்டிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் பங்கேற்றனர். சப் ஜூனியர், ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் என நான்கு பிரிவுகளில் மாணவர்கள் பிரிக்கப்பட்டு இரண்டு விதப் போட்டிகளிலும் இடம்பெற்றனர். பங்கேற்புக்கு இரண்டு மணி நேரம் வழங்கப்பட்டிருந்தது. இந்திய விழாக்கள், மரங்களைப் பாதுகாத்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மின்சாரம் சேமித்தல், எதிர்கால உலகம் எனப் பற்பல கருக்களில் இளஞ்சிறார்கள் ஓவியங்களை வரைந்தனர். கைத்திறன் போட்டியில் ஓரிகாமி, ஸ்டிக் வொர்க், காகித மலர்கள் பொக்கே, மட்பாண்ட பெயிண்டிங், வாழ்த்து அட்டைகள் என விதவிதமான கைத்திறன் வேலைகளை கலை நுணுக்கத்துடன் படைத்தனர்.

இளஞ்சிறார்களின் ஆர்வமும், படைப்பாக்க ஆற்றலும், அவர்களின் நுணுக்கமான வேலைப்பாடுகளும் தேர்வாளர்களைப் பெரிதும் வியப்பில் ஆழ்த்தின. ஒதுக்கப்பட்ட நேரத்தினை விட கூடுதல் நேரம் எடுத்துக்கொண்ட பின்னரே பரிசுக்குரிய படைப்புகளை தெரிவு செய்ய முடிந்தது.

படைப்புத் தேர்வு முடிந்தவுடன் பரிசளிப்பு மற்றும் நிறைவு விழா இனிதே தொடங்கியது.சென்னை ஏ.வி.கே டயர்ஸ் & டிராவல்ஸ் நிறுவனர்கள் மூர்த்தி மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் நிறைவு விழாவின் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்திப் பேசினர்.

Vannachidhralபங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிழ்கள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பணப்பரிசுகளும், விருதுகளும் வழங்கப்பட்டன.

முதல் பரிசாக விருது மற்றும் ஐந்தாயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக விருது மற்றும் மூவாயிரம் ரூபாய், மூன்றாம் பரிசாக விருது மற்றும் ஆயிரம் ரூபாய் அளிக்கப்பட்டது. ஒவ்வொரு மாணவப் பிரிவினருக்கும், ஒவ்வொரு விதப் போட்டிப் பிரிவுகளுக்கும் இவை தனித்தனியே அளிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. எட்டுப் பிரிவுகளில் மொத்தம் 24 விருதுகள் வழங்கப்பெற்றன. விருதுப் பட்டியல் கட்டுரையின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பரிசுகளை வழங்கிப் பேசும்போது சுகவனம் டாக்டர் குமரேசன், இம்மாணவர்களை நினைத்துப் பெருமை கொள்வதாகவும், அளவற்ற சந்தோசம் அடைவதாகவும் குறிப்பிட்டார். மேலும் அவர் பேசுகையில், பெற்றோருடன் தாம் தனிப்பட்ட வகையில் உரையாடியபோது தம் பிள்ளைகள் விரும்பும் வகையில் சரியான உருவகம் கொடுத்து வருவதை உணர்வதாகவும் கூறினார்.
போட்டி நடைபெற்ற விமலா கான்வென்ட் பள்ளியின் நிறுவனர் முத்துக்குமார் பேசும்போது தற்போதைய இளம் தலைமுறை அறிவாற்றலில் சிறந்து விளங்குவதாகவும், எதிர்காலத்தில் இந்தியாவின் பெருமை உலகெங்கும் பேசப்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

நிலாச்சாரலின் ரிஷி பேசும்போது, இணையம் உலகத்தினை எல்லைகளற்ற ஒரே கிராமமாக சுருக்கியிருப்பதாகவும், மாணவர்களுக்கு வாய்ப்பும் வசதிகளும் பெரிதும் அதிகரித்திருப்பதாகவும், உலகத்தின் பொருளாதார நெருக்கடி நிலை தீர புதிய எண்ணங்களுடன், படைப்பாற்றலுடனும் மாணவ சமுதாயம் எழுச்சி பெற வேண்டும் எனவும் அதற்கு நிலாச்சாரல் தன்னளவில் பெரிதும் துணை நிற்கும் களமாக விளங்கும் எனவும் பேசினார்.

Vannachidharalவிழா நிறைவு உரையின்போது பேசிய அகிலன், மாணவர்கள் தங்களது திறமைகளின் பெருமைகளை உணரும் வகையில் ஸ்டெப்ஸ் செயல்படும் என்றும், வருங்காலத்தில் இன்னும் பல போட்டிகளை தமிழக அளவில் நடத்தி அவர்கள் உன்னத குடிமக்களாக, வலிமையான படைப்பாக்க வல்லுனர்களாக, உருவாவதில் ஸ்டெப்ஸ் ஃபவுண்டேசன் முக்கிய இடம் வகிக்கும் என உறுதியுடன் குறிப்பிட்டார். எத்துறையை எடுத்துக்கொண்டாலும் அதில் அதிசிறந்த விஞ்ஞானிகளை உருவாக்கி, இந்தியக் கண்டுபிடிப்புகளை உலகெங்கிலும் பயன்படுத்தும் வகையினைக் கொண்டு வர ஸ்டெப்ஸ் உறுதுணையாக விளங்கும் எனவும் தெரிவித்தார். அதற்கான வழிவகைகள் கண்டறியப்பட்டு முறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்த அவர் பல்வேறு நிறுவனங்களும் நிதியுதவி அளித்து இதில் பங்கெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். ஸ்டெப்ஸ் மட்டும் தனியே செயல்படாமல் வளமிகு சமுதாய உருவாக்கத்தில் அனைத்து முன்னணி நிறுவனங்களும் இணைந்து செயல்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

விழா ஏற்பாடுகளை மிகவும் சிறப்பாக ஸ்டெப்ஸ் ஃபவுண்டேசனின் தன்னார்வலர்கள் செய்திருந்தனர். இதற்கான வேலைகளை மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே திட்டமிட்டு ஒவ்வொரு படிநிலையாக செயற்படுத்தி அனைவரும் பாராட்டும் வகையில் போட்டிகளும், விழாவினையும் நடத்தினர். ஸ்டெப்ஸ் தன்னார்வலர்கள் பலரும் பொறியாளர்களாய், டிசைனர்களாய், ஆர்க்கிடெக்டுகளாய் பணி செய்து வரும் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தங்களது கடும் வேலைப்பளுவுக்கிடையிலும், மாணவ சமுதாய மேன்மைக்காக சிறப்புற பணியாற்றி வருவது இந்த இளைய தலைமுறையிடம் நமக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

********

விருதுகளை வென்ற மாணவச் செல்வங்களின் பட்டியல் :
 
ஓவியப் போட்டிகள் :
 
சப்ஜூனியர் பிரிவு :

முதல் பரிசு – ஷிரேன், I Std., SBOA ஜூனியர் காலேஜ்
இரண்டாம் பரிசு – நவ்யா, II Std., வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
மூன்றாம் பரிசு – கிரண்குமார், II Std., விக்டரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

ஜூனியர் பிரிவு :

முதல் பரிசு – ரோஷினி, V Std., SBOA ஜூனியர் காலேஜ், அண்ணா நகர்
இரண்டாம் பரிசு – இன்மொழி, IV Std., சென்னை பப்ளிக் ஸ்கூல்
மூன்றாம் பரிசு – சுப்புலக்ஷ்மி, IV Std., பொன் வித்யாஸ்ரம்

சீனியர் பிரிவு :

முதல் பரிசு – சனபர் ஷெரிஃப், VIII Std., தூய இருதய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
இரண்டாம் பரிசு – முகில் எம்.அரசு, VII Std., DAV மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
மூன்றாம் பரிசு – அர்ச்சிதா, VII Std., அமிர்தா வித்யாலயம்

சூப்பர் சீனியர் பிரிவு :

முதல் பரிசு – விக்னேஷ்வரன், XI Std., வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
இரண்டாம் பரிசு – பிருத்விராஜ், IX Std., YMCA மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
மூன்றாம் பரிசு – ஆண்டனி ஃபெனிக்ஸ், XI Std., டாக்டர் விமலா கான்வென்ட்மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

கைத்திறன் போட்டிகள் :

சப்ஜூனியர் பிரிவு :

முதல் பரிசு – சூரிய சித்தார்த், II Std., SBOA ஜூனியர் காலேஜ்
இரண்டாம் பரிசு – நடராஜன், II Std., ஷ்ரம் அகாடமி
மூன்றாம் பரிசு – அசிதா, I Std., ராஜ்குமார் சுலோச்சனா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

ஜூனியர் பிரிவு :

முதல் பரிசு – காவிய தர்ஷினி, IV Std., செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
இரண்டாம் பரிசு – மோனலிஸா, V Std., டாக்டர் விமலா கான்வென்ட்மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
மூன்றாம் பரிசு –ஃபவுஸியா, V Std., கிருபா நர்சரி & ஆரம்பப் பள்ளி, ஆலந்தூர்

சீனியர் பிரிவு :

முதல் பரிசு – ஸ்வாதி, VIII Std., ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
இரண்டாம் பரிசு – அமிர்தா, VII Std., அரும்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி
மூன்றாம் பரிசு – திவ்ய தர்ஷினி, VII Std., விவேகானந்த வித்யாலயா

சூப்பர் சீனியர் பிரிவு :

முதல் பரிசு – ஜெயந்தி, XI Std., டாக்டர் விமலா கான்வென்ட்மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
இரண்டாம் பரிசு – ஸ்ரீசல்சூரியவாணி, IX Std., சதீஷ் பாலாஜி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
மூன்றாம் பரிசு – மேரி நித்யா, XI Std., குட் ஷெஃபர்ட்மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

About The Author

2 Comments

  1. Mamallan

    மிக அருமையான நிகழ்வு. Nice to see children performing with enthusiasm.

Comments are closed.