வானச் சூத்திரங்கள்

உன் வானவில் கனவுகளில்
நீ எப்போதும் வேற்றுக்கிரகத்தில்…

செவ்வாயில் சோறுண்டு
வியாழனில் கை கழுவும் உன் கனவுகளின் ஒலி வேகத்திற்கு
நீ எத்தனை அவஸ்தைப்படுவாய்!…

உன் கனவுகளை விவரிக்கையில்
வானத்திலேயே நீ பயணிக்கிறாய்
ஒரு கொத்து நட்சத்திரங்களை வலக்கையால் நகர்த்தி
முன்னேறிப்போகும் உன் அழகிய கற்பனைகளை
ரசிப்பதற்காக நானும் வானேறுவேன்
நீ சொல்வாய் ஒவ்வொரு நட்சத்திரத்தையும்
எப்படியேனும் புரிந்து கொள்ள வேண்டுமென
அதற்குக்கோடி ஒலியாண்டுகள் தேவைப்படும்

இதற்குள்ளே
படிக்கவும் தேர்வெழுதவும் தேவைப்படும் உன் காலத்திற்கு
என்ன செய்வாய்?…

நீ சொல்வாய்
நட்சத்திரங்கள் பற்றி மட்டும்
படித்தால் போதாதா?

அட ஆமாம்!
ஏன் இப்படியில்லை கல்வி?…

நட்சத்திரங்களைக் கிள்ளிச் சோறூட்டிய உன்
அம்மாவைக் கேட்கவேண்டும்!

About The Author