வாழ்வதற்கு ஏற்ற வழி எது?

பூம்பொழில் என்ற கிராமத்தில் இரு நண்பர்கள் இருந்தார்கள். ஒருவன் முத்து, மற்றவன் கந்தன். ஒருநாள் இருவரும் வழியில் சந்திக்க நேர்ந்தபோது ஏதோ பேசத் தொடங்கி, விரைவில் பேச்சு, வாக்குவாதமாய் மாறி விட்டது.

"வாழ்க்கையில் எவ்வளவுதான் கஷ்டங்கள் ஏற்பட்டாலும், எப்பொழுதும் நல்லது செய்வதுதான் சிறந்தது!" என்றான் கந்தன்.

உடனே முத்து, "நீ சொல்வது வாழ்க்கைக்கு ஒவ்வாத கருத்து" என்றான். மேலும், "உலகில் தற்போது நல்லதுக்குக் காலம் இல்லை; எல்லாமே கெட்டதாய்த்தான் நடக்கிறது. நல்லது செய்கிறவனுக்கு வாழ்வு இல்லை" என்றும் அவன் கூறினான்.

ஆனால் கந்தன், "முத்து! நீ சொல்வது சரியல்ல! நல்லது செய்தால் எப்படியும் ஒருநாள் நன்மை விளையும்" என்று தொடர்ந்து வலியுறுத்தினான். விவாதம் முற்ற, இறுதியில்,"அப்படியானால் பந்தயம் கட்டுவோம் வா!" என்றான் முத்து. "வழியில் நாம் சந்திக்கும் முதல் மூவரும் என்ன நினைக்கிறார்கள் என்று கேட்டுப் பார்ப்போம். நீ சொல்வது சரி என்று சொன்னார்களானால், என்னிடம் உள்ளதையெல்லாம் உனக்குக் கொடுத்து விடுகிறேன், நான் சொல்வது சரி என்று சொன்னார்களானால். உன்னிடம் உள்ளதை எல்லாம் நான் எடுத்துக் கொண்டு விடுவேன்" என்றும் கூறினான்.

"சரி பார்ப்போம்" என்று கந்தன் ஒத்துக்கொண்டான்.

அவர்கள் சாலையில் நடந்து சென்றனர். அறுவடைக்காலம் முழுவதும் வேலை செய்து விட்டுச் சொந்த ஊருக்குத் திரும்பி வந்து கொண்டிருந்த ஒருவரை அவர்கள் பார்த்தனர்.

"நண்பனே! வணக்கம்" என்று அவரை அணுகினர்.

"வணக்கம்!" என்றார் அந்தக் குடியானவர்.

"நாங்கள் ஒன்று கேட்க விரும்புகிறோம்!"

"கேளுங்கள்!"

"வாழ்வதற்கு ஏற்ற வழி எது நல்லது செய்வதா, கெட்டது செய்வதா?" என்று கேட்டான் முத்து.

"நண்பர்களே! இந்நாட்களில் நல்லது செய்கிறவனுக்கு வாழ்வு ஏது?" என்றார் அவர். "என்னையே எடுத்துக் கொள்ளுங்கள்! நெடுநாட்களாய் உழைத்தேன். கடுமையாகப் பாடுபட்டேன். ஆனால், எனக்குக் கிடைத்த ஊதியம் மிகச் சொற்பம். அதிலும் ஒரு பகுதியை என் எஜமானன் ஏதேதோ சொல்லிப் பிடுங்கிக் கொண்டு விட்டான். நேர்மையாய் வாழ்கிறவன் பிழைக்க முடியாதவன்! நல்லது செய்வதை விடக் கெட்டது செய்வதே மேல்!" என்று அவர் வருத்தப்பட்டுக் கொண்டார்.

முத்துவுக்கு மிகவும் மகிழ்ச்சியாகி விட்டது. அவன் கந்தனைப் பார்த்து, "பார்த்தாயா… பார்த்தாயா? நான் சொன்னதே சரி. நீ சொல்வது தப்பு" என்றான்.

கந்தனுக்கு முகம் உற்சாகம் இழந்து விட்டது. ஆனால் என்ன செய்வது? பேசாமல் நடந்தான். பிறகு, இருவரும் வழியில் ஒரு வியாபாரியைச் சந்தித்தனர். அவரிடமும் தங்கள் கேள்வியை முன்வைத்தனர்.

அவரோ, "நண்பர்களே! என்ன கேள்வி இது! நல்லது செய்தால் லாபம் ஏது? எதையும் விற்க வேண்டுமாயின் நூறு பொய் சொல்லி ஏமாற்றாமல் முடியுமா? லாபம்தான் கிடைக்குமா? முடியாத காரியமாயிற்றே!" என்று சொல்லிச் சென்றார்.

"பார்த்தாயா? இரண்டாம் முறையும் நானே வெற்றி பெற்றேன்!" என்றான் முத்து.

கந்தன் முன்னிலும் அதிகமாய்ச் சோர்வடைந்தான். மேலும் சிறிது தூரம் சென்றதும் ஒரு பணக்காரரைச் சந்தித்தனர். இவர்களின் கேள்வியைக் கேட்ட அவரும்,"அன்பர்களே! உலகில் நல்லது எதுவும் இல்லையே! நல்லவனாய் இருந்தால் வாழ முடியாது. நான் நேர்மையான வழிகளில்தான் செல்வதென்று ஆரம்பித்தால், பிறகு என் கதி…?" என்று அதற்கு மேல் ஒன்றும் சொல்லாமல் சென்று விட்டார் பணக்காரர்.

உடனே கந்தனை நோக்கிய முத்து, "மூன்று பேரும் என்னுடைய கருத்தையே ஆமோதித்ததால் நீ தோற்று விட்டாய். அதனால் உன்னிடம் உள்ளதையெல்லாம் என்னிடம் ஒப்படைக்க வேண்டும்!" என்றான்.

கந்தன் சோர்வாக வீடு வந்து சேர்ந்தான். அவனிடமிருந்த உடைமைகள் அத்தனையையும் முத்து எடுத்துக் கொண்டான்.
"விரைவில் வேறு இடம் தேடிக் கொண்டாக வேண்டும் நீ!" என்று கண்டிப்புடன் சொல்லி, வெறும் வீட்டை மட்டும் கந்தனிடம் விட்டுச் சென்றான்.

கந்தன் தன் குடும்பத்தாருடன் திகைத்துப் போய் உட்கார்ந்திருந்தான். சாப்பிடுவதற்கு அவர்களிடம் ஒரு மணி அரிசி இல்லை. வேறு எதுவும் இல்லை. எங்கேயும் சென்று வேலை செய்து சம்பாதிப்பதற்கும் வழியில்லை. ஏனெனில், அவ்வாண்டு பயிர்கள் விளைச்சலின்றி வீணாகிவிட்டன. கந்தன் தன் அவல நிலைமையைப் பொறுத்துக் கொள்ள முயன்றாலும், அவன் குழந்தைகள் பசி தாங்காமல் அழத் தொடங்கின. கந்தனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. பக்கத்துக் காட்டுக்குச் சென்று விறகு வெட்டி, விற்றாவது பிழைக்கலாம் என்று எண்ணிச் சென்றான்.

அங்கு முனிவர் ஒருவர் அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்தார். அவர் கால்களில் விழுந்து கதறினான் கந்தன். முனிவர் விழித்துப் பார்த்து, "ஏன் அப்பா அழுகிறாய்?" என்று அன்புடன் கேட்டார். கந்தன் நடந்ததை விவரித்தான். நல்லதுக்காக வாதாடித் தான் எல்லாவற்றையும் இழந்ததையும், தன் குழந்தைகள் பசியால் வாடுவதையும் கூறினான்.

முனிவர் கந்தனைப் பார்த்து, "அப்பா! நீ கவலைப்படாதே! இந்தக் காட்டைத் தாண்டி உள்ள கிராமத்தில் மழை பொய்த்து விட்டது. தண்ணீர் ஒரு சொட்டு கூடக் கிடைக்காமல் மக்கள் மிகவும் அல்லல்படுகிறார்கள். இப்பொழுது அந்தக் கிராமத்தினர் நாற்பது காதத் தூரம் அப்பால் சென்று தண்ணீர் கொண்டு வர வேண்டியதாகி இருக்கிறது. பலர் வழியில் மடிந்து விழுகிறார்கள். அந்தக் கிராமத்துக்குத் தண்ணீர் கிடைக்க ஒரு வழி உள்ளது. கிராமத்தின் எல்லையில் இருக்கும் பெரிய பாறையை அகற்றி வைத்தால் போதும். எல்லோருக்கும் வேண்டிய அளவு தண்ணீர் அதற்கு அடியிலிருந்து பீறிட்டுப் பாயும்.

மேலும், அந்த ஊர்ப் பெரிய ஜமீன்தாரின் மகளுக்குத் திடீரென்று கண் பார்வை மங்கி விட்டது. எத்தனையோ வைத்தியம் பார்த்தும் பலனளிக்கவில்லை. நான் கொடுக்கும் இந்த மந்திர நீரை அவள் கண்களின் மேல் தடவினால் அவள் மீண்டும் பார்வை கிடைக்கப் பெறுவாள். இந்த இரண்டு நற்செயல்களையும் நீ செய்! உனக்கும் பல சன்மானங்கள் கிடைக்கும். உன் வாழ்ககையும் வளம் பெறும்!” என்று வாழ்த்தி அனுப்பினார்.

கந்தனும் மிகவும் மனம் மகிழ்ந்து, அவர் கால்களில் விழுந்து வணங்கி, அவர் கொடுத்த மந்திர நீர்க் குடுவையுடன் புறப்பட்டான். தண்ணீரே இல்லாத அந்தக் கிராமத்தை வந்தடைந்தான்.

அப்பொழுது, ஒரு கிழவி இரு வாளிகளில் நீர் நிரப்பிக் கம்பு நுனிகளில் கட்டித் தொங்கவிட்டுக் காவடி போலக் கழுத்தில் தூக்கி வருவதைக் கண்டான்.

கிழவிக்கு வணக்கம் தெரிவித்து, "பாட்டி! குடிப்பதற்கு எனக்குக் கொஞ்சம் தண்ணீர் கொடேன்" என்று கேட்டான்.

"மகனே! நாற்பது காதம் தொலைவிற்கு அப்பாலிருந்து இந்தத் தண்ணீரை எடுத்து வருகிறேன். வழியில் ஒரு பாதியைச் சிந்தி வீணாக்கி விட்டேன். என் குடும்பமோ மிகப் பெரியது. இதையும் உனக்குக் கொடுத்துவிட்டால், தண்ணீர் இல்லாமல் அவர்கள் சாக வேண்டி வரும்" என்று கிழவி வருத்தத்துடன் பதிலளித்தார்.

"பாட்டி! கவலைப்படாதீர்கள்! நான் உங்கள் கிராமத்துக்கு வந்ததும் எல்லோருக்கும் நிறையத் தண்ணீர் கிடைக்கும். அதற்கான வழியும் எனக்குத் தெரியும்" என்றான் கந்தன்.

கிழவி இந்த நற்செய்தியைக் கேட்டு மகிழ்ச்சி கொண்டு, அவனுக்குத் தண்ணீர் கொடுத்து விட்டு, விரைந்து போய்க் கிராமத்திலுள்ள எல்லோருக்கும் அவனைப் பற்றிச் சொன்னார். கிழவி சொல்வதை நம்புவதா, இல்லையா என்று கிராமத்தவர்களுக்குப் புரியவில்லை. இருந்த போதிலும், அவர்கள் அவனிடம் ஓடி வந்து வணக்கம் கூறிவிட்டு, "அன்புமிக்கவனே! கொடுஞ்சாவிலிருந்து நீதான் எங்களைக் காப்பாற்ற வேண்டும்" என்றனர்.

கந்தனும், "அப்படியே செய்கிறேன். அதற்கு, உங்கள் கிராமத்து எல்லைக்கு நீங்கள் என்னை அழைத்துச் செல்ல வேண்டும்" என்று அவர்களை அவன் கேட்டுக் கொண்டான்.

கிராம எல்லைக்கு, அவர்கள் அவனை அழைத்துச் சென்றனர். அவன் அங்கும் இங்கும் தேடிப் பார்த்தான். கடைசியில், முனிவர் கூறிய பெரிய பாறை இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்தான்.

அவனுடன் வந்தவர்கள் எல்லோருமாய்ச் சேர்ந்து வேலை செய்து அந்தப் பாறையை அங்கிருந்து நகர்த்தினர். அதே கணத்தில், அதற்கு அடியிலிருந்து தண்ணீர் பீறிட்டு பாய்ந்தது. பெரிய ஓடை போல் ஓடி எல்லா ஊற்றுகளிலும் பாய்ந்தது. அங்கு ஒரு பெரிய குளமே உருவாகிவிட்டது. மக்கள் அளவில்லா ஆனந்தமடைந்தார்கள். கந்தனுக்கு நன்றி தெரிவித்து நிறையச் சன்மானங்கள் அளித்தனர். அவற்றை ஏற்றிச் செல்லக் குதிரை வண்டியையும் பரிசாக அளித்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்த கந்தன், அந்த நகர ஜமீன்தார் மகளுக்குப் பார்வை போய்விட்டதா என்று விசாரித்தான்.

அதைக் கேட்ட மக்கள் மிகவும் வியப்படைந்தனர். ‘இவன் என்ன மந்திரவாதியா?’ என்று நினைத்தனர்.

அவர்களில் ஒருவன் கந்தனை நோக்கி, "உன்னால் ஒருநாளும் அவளைக் குணப்படுத்த முடியாது! சிறந்த வைத்தியர்கள் எல்லாரும் எவ்வளவோ செய்து பார்த்துவிட்டனர்; முடியவில்லை. ஆகவே, நீ முயற்சி கூடச் செய்து பார்க்க வேண்டியதில்லை" என்று கூறினான்.

"பரவாயில்லை. இருப்பினும் ஜமீன்தாரிடம் போய் என்னைப் பற்றி நீங்கள் கூற வேண்டும்" என்றான். மக்களும் ஜமீன்தாரிடம் போய்ச் சொன்னார்கள். ஜமீன்தார் உடனே தனது வீட்டிற்கு வருமாறு அவனை அழைத்தார்.

அவர் கந்தனை நோக்கி, "உண்மையாகவே என் மகளை உன்னால் குணப்படுத்த முடியுமா?" என்று கேட்டார்.

"முடியும்!" என்று கந்தன் உறுதிபடப் பதிலளித்தான்.

"நீ மட்டும் அவளைக் குணப்படுத்தி விட்டால் நீ என்ன கேட்டாலும் தருவேன்!" என்றார் ஜமீன்தார்.

கந்தனை மகள் படுத்திருந்த அறைக்கு அழைத்துச் சென்றார். கந்தன் தான் கொண்டு வந்த மந்திர நீரை அவள் கண்கள் மேல் தடவினான். என்ன அதிசயம்! இழந்த பார்வையை உடனே அவள் திரும்பவும் பெற்றாள்.

ஜமீன்தார் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. வரிசையாக வண்டிகளில் எடுத்துச் செல்லும் அளவிற்குப் பொன்னும், பொருளும் நிறையத் தந்தார்.

இதற்கிடையில், அவன் மனைவி தன் கணவனைக் காணவில்லையே என்று வருந்திக் கொண்டிருந்தாள். "காட்டுக்கு விறகு வெட்டச் சென்றவன் கொடுவிலங்குகளால் கொல்லப்பட்டு விட்டானோ?" என்று நினைத்து அழுது புலம்பிக் கொண்டிருந்தாள். அப்பொழுதுதான் கந்தன் வண்டி வண்டியாய்ச் செல்வங்களுடன் வந்து கொண்டிருந்தான். அழுது புலம்பிக் கொண்டிருக்கும் தன் மனைவியைப் பார்த்ததும் கூவி அழைத்தான். கணவன் குரல் கேட்டு மகிழ்ச்சியுடன் ஓடி வந்தாள் அவள். குழந்தைகளும் ஓடி வந்தன. அவனைக் கண்டதும் மிகவும் மகிழ்ச்சியடைந்து "தெய்வமே! நன்றி! நன்றி!" என்று போற்றினாள்.

கந்தன் தன் மனைவியையும் குழந்தைகளையும் நோக்கி, "வாருங்கள்! நான் கொண்டு வந்திருப்பவை யாவற்றையும் முதலில் உள்ளே எடுத்து வைப்போம்" என்றான்.

அவற்றைப் பார்த்த அவன் மனைவி, "எப்படி நடந்தது இந்த அதிசயம்?" என்று வினவினாள்.

கந்தன் தான் முனிவரைச் சந்தித்ததிலிருந்து எல்லாவற்றையும் விவரமாகக் கூறினான். அவன் குடும்பத்தினர் வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தனர். இப்பொழுது முத்துவினுடைய செல்வமும் ஒரு செல்வமா என்று சொல்லும்படிக் கந்தனுடைய செல்வம் குவிந்திருந்தது. அவர்களுடைய வீடு நிரம்பி வழிந்தது. எந்தக் குறையுமின்றிப் பெருவாழ்வு வாழ்ந்தனர். இதைப் பற்றிக் கேள்விப்பட்ட முத்து அவர்களிடம் ஓடோடி வந்தான்.

"கந்தா! எப்படி இதெல்லாம் நடந்தது? எங்கிருந்து இவ்வளவு செல்வங்களைப் பெற்றாய்?" என்று கேட்டான்.

கந்தன் எதையும் இரகசியமாய் வைத்துக் கொள்ளவில்லை. ஒளிக்காமல் யாவற்றையும் அவனிடமும் சொன்னான்.
முத்துவுக்கு, கந்தனைவிட மேலும் தான் பணக்காரனாக வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது. அதனால் உடனே காட்டுக்குச் சென்று முனிவரைத் தேடலானான். ஆனால், அவன் கண்களுக்கு முனிவர் தென்படவே இல்லை. விடாமல் தேடித் தேடிக் கடைசியில் காட்டு விலங்குகளுக்கே தன் பேராசையினால் பலியானான்.

About The Author