விக்ன விநாயகா!

எந்த வேலையை ஆரம்பித்தாலும் விநாயகப்பெருமானைக் கும்பிட்டுவிட்டுத் தொடங்க அது வெற்றிதான்! இது கணபதியின் தந்தையான அந்த ஈசனுக்கும் பொருந்தும். ஈசனும் தன் மகன் கணபதியின் மகத்துவத்தை உலகுக்கு எடுத்துச்சொல்லச் சில நாடகங்களை நிகழ்த்தியிருக்கிறார். அதில் ஒன்றுதான் திருபுராதிகளை அழித்தது.

வித்யுன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் மூவரும் தாருகாசுரனின் மகன்கள்.வழக்கம்போல் தங்கள் சக்தியைப் பெருக்கிக் கொள்ளச் சிவனைக் குறித்துக் கடும் தவம் இருந்தனர். சிவனும் அவர்கள் முன் பிரத்யட்சமானார்.

"யான் உங்கள் தவத்தை மெச்சுகிறேன். என்ன வரம் வேண்டும் கேளுங்கள்!" என்றார். "பரமேசா! எங்கள் மூவரையும் ஒரே கணையால் ஒருங்கே ஒருவனே அழிக்க வேண்டும். வேறு ஒருவிதத்திலும் எங்களுக்குச் சாவு ஏற்படக்கூடாது!" என்று வரம் கேட்டார்கள் அவர்கள்.

"அப்படியே ஆகட்டும்!" என்றார் சிவனும்.

சிவனின் இந்த வரத்தினால் அரக்கர்களுக்குத் துளிர் விட்டுப்போனது. எல்லா உயிரினங்களையும் வருத்தினர். மூன்று பெரும் கோட்டைகளைக் கட்டினர். இதனால் இவர்கள் திரிபுராதிகள் என்ற பெயரும் பெற்றனர்.

தேவர்கள் யாவரும் சிவபெருமானிடம் இந்த அரக்கர்களின் குரூரச் செயல்களையும் இம்சைகளையும் எடுத்துச் சொல்லி இவர்களை வதம் செய்யுமாறு வேண்டிக்கொண்டனர். அந்த ஈசன் தானேதிரிபுராதிகளை அழிக்க ஓர் இடம் தேர்ந்தெடுத்தார்.

அந்தத் தலமே இன்று கூவம் என்ற பெயரில் உள்ளது! சென்னையிலிருந்து அரக்கோணம் போகும் வழியில் வரும் பஸ் நிலையத்தில் கூவம் என்ற இடத்திலிருந்து ஒரு கி.மீ தூரத்தில் உள்ளது.

சிவன் போருக்குப் புறப்பட்டார். ஆனால் விநாயகரை நினைக்காமல் போனதினால் வந்தது ஆபத்து. சிவன் ஏறிவந்த தேரின் அச்சைக் கணபதி முறித்து எறிந்தார். போருக்குச் செல்லும் தேர் ஓட முடியாமல் நடக்கப்போகும் செயலுக்குப் பங்கம் ஏற்பட்டது. சிவன் முக்காலமும் அறிந்த ஈசனாயிற்றே! "நான் விக்ன விநாயகரை நினைக்காமல் கிளம்பிவிட்டேன். இது என் தவறுதான். நாம் எல்லோரும் அந்த விக்னேசனைப் பூஜிப்போம்!" என்றார். அவருடன் பார்வதி, முருகன், வீரபத்திரன், ஐயனார், வயிரவன், இந்திரன் எல்லோரும் சேர்ந்து அந்த விநாயகனை வணங்கினர்.

பின் என்ன! திருபுராதிகள் ஈசனின் புன்னகையினாலேயே தங்கள் முடிவைப்பெற்று அழிந்தனர்.

இந்த ஊரில் அச்சு முறிந்ததால் {அச்சு இற்ற பாக்கம்} அச்சிற்றபாக்கம் என்று முதலில் பெயர் இருந்தது. இப்போது அச்சிறுபாக்கம் என்னும் பெயரில் அழைக்கப்படுகிறது. கூவம் என்னும் பெயரும் உண்டு. ஏன் என்றால்
தேரின் அச்சைக் கூவரம் என்று சொல்வார்கள். கூவரம் முறிந்த இடமென்பதால் இந்த இடம் கூவரம் என்ற பெயர் பெற்று நாளாக நாளாக கூவம் என்று மாறியதாம்!

இங்குள்ள கோயில் மிகப்பழமை வாய்ந்த கோயில்! மதுராந்தகச்சோழன் ஆட்சியில் இந்த இடத்தை மதுராந்தக நல்லூர் என்று அழைத்தனராம். இந்தக் கோயிலில் அருள் பாலிக்கும் சிவன் ஸ்வயம்புவாக எழுந்தருளியுள்ளார். கருவறையில் மூலவர் லிங்கமாக அமர்ந்திருக்கிறார். அம்பாள் திருபுராந்தகி என்ற பெயரில் அருள் புரிகிறாள். இவள் நின்ற கோலத்தில் காட்சி தந்து அருள் புரிவதைக் காண மனதில் ஓர் இனம் புரியாத பரவசம் ஏற்படுகிறது! மேற்கு மூலையில் தனிச் சன்நிதியில் மூன்று பிள்ளையார்கள் உள்ளனர். அதில் ஒருவர்தான் அச்சை முறித்த வினாயகர். ஈசன் சுயம்புவாக உள்ளதால் அர்ச்சகர்கள் லிங்கத்தைத் தொடாதபடி அபிஷேகம் அலங்காரம் செய்கின்றனராம். எந்தத் தடையையும் முறித்துக் காரியத்தை முடித்துக் கொடுக்கிறார் இந்த விநாயகர். அத்துடன் சிவன் பார்வதியையும் பார்க்கப் பக்தர்கள் வந்து போகின்றனர்.

கருவறைக்கு முன் நடராஜரும் சிவகாமியும் செப்புச்சிலை வடிவம் கொண்டு அருள் பாலிக்கின்றனர். மேலும் நவக்கிரகங்களுக்கும் தனிச்சன்நிதி அமைந்திருக்கிறது. மிகப்பழங்காலக் கோயில்தான். உள்ளே நுழைந்தாலே அதன் சக்தி வெளிப்படுகிறது!

About The Author