விரல் தொட்ட வானம் (36)

மண் செடிகள்

பராமரிக்கும்
வாடிவிடாமல்
தண்ணீர் ஊற்றும்
எல்லை மீறி வளர்ந்தாலும்
கத்தரிப்பு செய்து
தன் கட்டுக்குள் வளர்க்கும்
பூந்தொட்டியில் வைத்து
அழகு பார்க்கும்
பால்கனிகள்
தரையிறங்கி வேரூன்ற
விடுவதேயில்லை என்றும்.
பாவம்
சுதந்திரமில்லாத
மண் செடிகள்!

உனக்குத் தெரியாமல்

எனக்குத் தெரியாமல்
எடுத்துச் சென்று விட்டாய்
அந்தரங்கம் அடங்கிய
என்
படச்சுருள் பெட்டியை.
என்னைத்
தோலுரித்துக் காட்டுவதாய்
கொக்கரிக்கும்
உன் பற்களின் இடுக்குகளில் கசிகிறது
வக்ரமும்
வன்மமும்.
ஊருக்கு
திரையிடும் முன்
ஒருமுறை நீ பார்த்துவிடு
படச்சுருளில்
நீயும் இருக்கக்கூடும்
காட்டிக் கொடுப்பதாகவும்
கூட்டிக் கொடுப்பதாகவும்!

என்னை நனைத்த ஈரம்

என் இரவின் மீது
விழும் கற்களை
தடுக்கவோ
புறக்கணிக்கவோ
அல்லது
வெறுக்கவோ
இயலவில்லை
விழும் கற்கள் உருவாக்கும்
வளையங்களில் பிறக்கின்றன
புதுப்புது அலைகள்
நீச்சல் தெரிந்தும்
மூழ்கி விடுகிறேன்
பல தருணங்களில்
மூழ்கடிக்கப்படுகிறேன்
பகலின் விரல் பிடித்து
கரையேறுகிற நேரங்களில்
சொட்டுச் சொட்டாய்
தரை இறங்குகிறது
மனதில் இருந்தோ
உள்ளாடையில் இருந்தோ
என்னை நனைத்த ஈரம்!

–தொட்டுத் தொடரும்…

About The Author