விராலி மலை முருகன்! – தல வரலாறும் சில சுவையான தகவல்களும்

வேடன் ஒருவன் குரா மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியில் வேட்டையாட வந்தான். வெகு நேரமாகியும் வேட்டைக்கு ஒரு விலங்கும் காணாமல் தவித்தபோது அந்தப் பக்கம் ஒரு வேங்கைப்புலி வந்தது. அதை வேட்டையாட முயன்றால், அது இலேசில் அவன் கையில் கிட்டவில்லை. இங்கும் அங்குமாக ஓடிப் போக்குக் காட்டியது. அவனும் அதைப் பிடித்தே தீருவது என்று துரத்தினான். ஆனால், அது ஒரு குரா மரத்தின் பின் ஒளிந்து கொண்டது. அவன் அருகில் வந்து பார்த்தவுடன் அது மறைந்து போயிற்று. வேடன் பிரமித்துப்போய் நிற்க, அந்த இடத்தில் ஒரே விபூதி வாசனை வீச ஆரம்பித்தது. ஒரு மயிலும் பறந்து வந்து அமர்ந்து கொண்டது.

"ஆஹா! நான் என்ன பாக்கியம் செய்திருக்கிறேன்! இந்த இடத்தில் என் தெய்வமான முருகன் அல்லவா இருக்கிறான்" என்று மன மகிழ்ந்து போனான் வேடன். பின்னர், அவனது முயற்சியால் அங்கு முருகன் சிலை ரூபத்தில் வந்து அமர்ந்தார். அது மிகவும் சக்தி வாய்ந்த முருகன் கோயிலாக மாறியது. அதுதான் திருச்சியிலிருந்து மதுரை போகும் வழியில் வரும் ‘விராலி மலை முருகன் கோயில்’!

இங்கு இருக்கும் முருகன் பெரிய மயிலில் அமர்ந்தபடி ஆறுமுகங்களுடன் மயில்வாகனராக அருள் புரிகிறார். சுமார் 2000 வருடங்கள் ஆன மிகப் பழமையான கோயில். இங்கு போனால் பார்க்கும் இடமெல்லாம் அழகான மயில்கள் சர்வ சாதாரணமாக உலா வருகின்றன. சுமார் 2000 மயில்கள் இங்கு இருக்கலாம் என்று மக்கள் சொல்லுகின்றனர்.

ஒரு சமயம் ஸ்ரீ அருணகிரிநாதர் ஒவ்வொரு தலமாகச் சென்று முருகனைக் கண்டு களித்துப் பல பாடல்கள் பாடினார். பின், அவர் வயலூர் வந்தார். அப்போது முருகன் அவர் முன் தோன்றி, "அருணகிரிநாதா! என்னைப் பார்க்க விராலி மலைக்கு வா" என்று திருவாய்மலர்ந்து மறைந்தார். அருணகிரிநாதருக்கு விராலிமலைக்குச் செல்லச் சரியான வழி தெரியவில்லை. சுற்றிச் சுற்றி வந்து, இடம் தெரியாமல் களைத்துப் போனார். அப்போது முருகன் தன் பக்தனின் தவிப்பைப் பொறுக்க முடியாமல் ஒரு வேடன் போல் வந்து விராலி மலையை அடையாளம் காட்டினாராம். அவர் அங்கு வந்தவுடன் அவருக்கு அஷ்டமாசித்திகளையும் கற்றுக் கொடுத்தாராம்.

விராலி மலை முருகனை எல்லோரும் உடல் நோய் தீர முக்கியமாக வேண்டிக் கொள்கிறார்கள். குழந்தைகளுக்காக அப்படி வேண்டிக் கொள்ளும்போது குழந்தையின் ஆயுள் விருத்திக்காக முருகனுக்கே அந்தக் குழந்தையைத் தத்துக் கொடுக்கும் பழக்கமும் இருக்கிறது. அதே போல், முருகன் திருமுன் குழந்தையின் தாய்மாமன் தவிட்டைக் கொடுத்துக் குழந்தையைப் பெறுவதும் நடக்குமாம். புதிதாக வீடு வாங்கவோ, மனை வாங்கவோ முனைபவர்களும் இந்த விராலி மலை முருகனை வணங்கி வேண்டிக் கொள்கின்றனர்.

இந்தக் கோயிலில் நடக்கும் ஒரு புதுமையான வழக்கத்தை என் நண்பர் சொன்னார். இந்தத் தலத்தில் முருகனுக்குச் சுருட்டை நைவேத்தியமாக வைக்கிறார்களாம். இதன் காரணம்?… கேட்காமல் இருப்பேனா? கேட்டேன்.

ஒரு முறை, இந்தக் கோயிலில் ஒரு பக்தர் தன்னையும் மறந்து கோயில் திருப்பணி செய்து கொண்டிருந்தார். அவர் கோயிலுக்குப் போக நாள்தோறும் ஆற்றைக் கடக்க வேண்டும். ஒரு நாள், திடீரென்று புயல் வீசும் அறிகுறி தென்பட்டது. மழை வேகமாகப் பொழிந்து எங்கும் வெள்ளக்காடானது. இதனால் அவருக்கு ஆற்றைக் கடந்து கோயிலுக்கு வர முடியாத நிலை ஏற்பட்டது. ஓர் ஓரமாக நின்றபடி, "கந்தா! உன்னைப் பார்க்க வர முடியவில்லையே! என்ன செய்வேன்?" என்று மனம் கலங்கியபடி நின்றார். குளிரோ தாங்க முடியவில்லை. ஒரு சுருட்டைப் பற்ற வைத்துக் கொண்டார். அப்போது அந்தப் பக்கமாக ஒரு வயதானவர் வந்தார்.
"என்ன, மனம் கலங்கி நிற்கிறாயா? எனக்கு ஒரு சுருட்டு கொடு! உன்னை நான் ஆற்றைக் கடக்க வைத்து அழைத்துச் செல்கிறேன்" என்றார். பக்தரும் அவரிடம் சுருட்டைக் கொடுத்தார். முதியவரும் அந்த பக்தர் ஆற்றைக் கடக்க உதவி செய்தார். கோயில் வந்தாயிற்று. பக்தர் உள்ளே செல்ல, ஓர் அதிசயம் காத்திருந்தது! முருகன் அருகில் பாதி சுருட்டு ஒன்று கிடந்தது.

மிகவும் ஆனந்தமடைந்த பக்தர் இந்த நிகழ்ச்சியை எல்லோரிடமும் பகிர்ந்து கொண்டார். அதன் பிறகு இந்தக் கோயிலில் முருகப்பெருமானுக்குச் சுருட்டு நைவேத்தியம் ஆரம்பமானது.

ஆனால், இது சரியல்ல என்று புதுக்கோட்டை மஹாராஜா இதற்குத் தடை விதித்தார். அன்றிரவு முருகன் அவரது கனவில் வந்து, "இதற்குத் தடை விதிக்காதே! இது தொடர்ந்து நடக்கட்டும்! பிறருக்கு உதவும் மனப்பான்மை வர வேண்டும்! நம்மிடம் இருப்பதை அடுத்தவருக்குக் கொடுக்கும் நல்ல எண்ணம் வர வேண்டும்! இதை விளக்கவே அந்த நிகழ்ச்சி நடந்தது" என்றார். ஆகையால், இன்றும் இந்தச் சுருட்டு நைவேத்தியம் தங்கு தடையின்றி நடந்து வருகிறது.

தில்லியில் கால பைரவர் கோயிலில் விஸ்கியைப் பிரசாதமாக வைத்துப் பார்த்திருக்கிறேன். அது போல் இதுவும் ஒரு நைவேத்தியம்தான்!

விராலி மலை முருகனுக்கு அரஹரோஹரா!

About The Author