வீரத்துறவி விவேகானந்தர் (17)

குருதேவருக்கு நரேந்திரன்பால் விவரிக்க ஒண்ணாத வாஞ்சை என்று குறிப்பிட்டிருந்தோம். நரேந்திரன் வந்து விட்டால் அவருக்குத் தலைகால் புரியாது. இனிப்பை எடுத்துச் சின்னக் குழந்தைக்கு ஊட்டுவது போல ஊட்டி விடுவார். சேர்ந்தாற்போல் கொஞ்ச நாள் நரேந்திரன் வரவில்லை என்றால் தவியாய்த் தவிப்பார். ஈரத்துணியை முறுக்கிப் பிழிவது போல் இதயத்தைப் பிசைகிறது என்பார். நரேனை வரச்சொல்லு; வரச் சொல்லு என்று சேதி சொல்லி அனுப்புவார். இவை எல்லாம் நரேந்திரனுக்கு சங்கடமாகத்தான் இருந்தன.

ஒரு நாள். வீட்டின் மாடிப்படி இடைகழியில் நரேந்திரன் படிக்க உட்கார்ந்தார். நண்பர்கள் சிலர் வந்து விட்டார்கள். ஒரு பாட்டுப் பாடு என்று அவர்கள் கேட்டுக்கொள்ள, பாடத் தொடங்கினார் நரேந்திரன்.

நரேன்! நரேன்! என்று வாசலில் இருந்து ஒரு தீனக் குரல் கேட்டது. இறங்கி வந்து பார்த்தால் குருதேவர்! நரேந்திரன் அவரை மாடிக்கு அழைத்து வந்தார். கைக்குட்டையில் முடிச்சுப் போட்டு வைத்திருந்த இனிப்பை எடுத்து நரேனுக்கு ஊட்டி விடுகிறார் குருதேவர்.

பக்கத்தில் நண்பர்கள் இருக்கிறார்களே, என்ன நினைத்துக் கொள்வார்கள் என்று கொஞ்சமாவது யோசிக்க மாட்டாரோ? ஊஹூம்! நரேந்திரனைப் பாடப் பணித்தார். அவர் பாட ஆரம்பித்ததும், குருதேவர் சமாதியில் ஆழ்ந்து விட்டார். நண்பர்களுக்கு பயம் வந்து விட்டது. முகத்தில் தண்ணீர் தெளித்தார்கள். நரேந்திரன் அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் என்று சொல்லி அவர்களை வீட்டுக்கு அனுப்பி விட்டு குருதேவருடன் தக்ஷிணேசுவரத்துகுப் புறப்பட்டதும் சுவையான நாடகம் போல் நடந்த அந்தக் காட்சி நிறைவு பெற்றது.

இதே போல இன்னொரு நிகழ்ச்சி. நரேந்திரனைத் தேடி பிரம்ம சமாஜக் கூட்டத்துக்கே வந்து மேடையில் உட்கார்ந்து விட்டார் குருதேவர். அங்கு அவர் வேண்டாத விருந்தாளி. யாரும் அவருக்கு முகம் கொடுத்துப் பேசக்கூட இல்லை. அப்படியே சமாதியில் ஆழ்ந்து விட்ட குருதேவர், அவமானப் படுவது நரேந்திரனுக்குப் பொறுக்கவில்லை. சமாதி கலைந்ததும் கைத்தாங்கலாக, வண்டியிலேற்றி கூடப் போய் தக்ஷிணேசுவரத்தில் கொண்டு போய்ச் சேர்த்தார்.

நரேந்திரனுக்கும் குருதேவருக்கும் ஆத்மார்த்தமான, அதிசயிக்கத் தக்க விதத்தில் ஒரு தொடர்புப் பிணைப்பு இருந்திருக்கிறது. இதை பாரா சைக்காலஜி கொண்டு எல்லாம் விளக்குவது கொச்சைப் படுத்துவது ஆகும். நரேந்திரன் மனத்தில் எள்ளளவு தூய்மையற்ற எண்ணம் எழுந்தால் கூட குருதேவருக்குத் தெரிந்து விடும்.

ஆனந்த குஹா என்ற நண்பருடன் நரேந்திரன் தொடர்பு கொண்டிருந்த போது, ஒரு சமயம் சில கெட்ட நண்பர்களுடன் நரேந்திரன் பழக வேண்டி நேர்ந்து விட்டது. அன்று, குருதேவரைச் சந்தித்தபோது நரேந்திரன் கொடுத்த உணவை அவர் வாயில் போட்டுக் கொள்ளப்போகிறார். சட்டென்று கை வாய் அருகில் வந்து நின்றது. இழுத்துக் கொண்டு விட்டார். நீ இன்னும் தயாராகவில்லை என்று சொல்லி அகன்று விட்டார்.

குருதேவர் நரேந்திரனைச் சோதித்துப் பார்த்த நிகழ்ச்சியும் உண்டு. கொஞ்சம் கடினமான பரிசோதனைதான்.

ஒரு முறை நரேந்திரன் தக்ஷிணேசுவரம் சென்ற போது குருதேவர் அவரைக் கண்டு கொள்ளவே இல்லை. இதை நரேந்திரன் கவனித்து விட்டார். கவலைப் படாமல் மற்ற நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்து விட்டுத் திரும்பி விட்டார். அடுத்த முறை வந்த போதும் இப்படியே நடந்தது. பின்னொரு முறை, அவரோடு பேசாதது மட்டும் அல்ல, அவரைப் பார்த்து முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு வேறு புறம் திரும்பிக் கொண்டு விட்டார்.

இப்படி வாரா வாரம் நடந்தது. நரேந்திரனும் வருவதை நிறுத்தவில்லை.

ஒரு நாள் குருதேவர் நரேந்திரனை நேரடியாகக் கேட்டே விட்டார், நீ ஏன் இங்கு வருகிறாய், நான்தான் உன் கூடப் பேசுவது கூட இல்லையே?

இளம் நரேந்திரன் பதில் சொன்னார். உங்கள் பேச்சைக் கேட்பதற்கா நான் வருகிறேன்? உங்களை நான் நேசிக்கிறேன். பார்க்க விரும்புகிறேன். அதுதான் வருகிறேன். (முன்பு ஒரு முறை கூட நரேந்திரன் இது போலச் சொல்லியிருக்கிறார்.)

உன்னை நான் சோதித்துப் பார்த்தேன். நீ தேறி விட்டாய். உன் ஒருவனால்தான் இப்படி நடந்து கொள்ள முடியும். என்று வாய் மலர்ந்தார் குருதேவர்.

ஒருமுறை குருதேவர் நரேந்திரனிடம், தவ வலிமையால் எனக்கு பல அற்புத சித்திகள் கை வந்திருக்கின்றன. எனக்கு அவற்றால் எந்தப் பிரயோசனமும் இல்லை. அவற்றை உனக்குத் தந்து விடுகிறேன். என்றார்.

நரேந்திரன் கேட்டார், அந்த சித்திகள் எனக்குக் கடவுளை அறிந்து கொள்ள உதவுமா?

குருதேவர் சொன்னார், அதற்கு இவை பயன்படாது. ஆனால் நீ கடவுளை அறிந்த பின் உன் குறிக்கோள்களை நிறைவேற்றிக் கொள்ள அவை உதவும் என்றார்.

வேண்டாம். வேண்டாம். முதலில் எனக்குக் கடவுளின் அருள் கிடைக்கட்டும். அதற்குப் பிறகு அந்த சித்திகள் எனக்குத் தேவையா என்பது பற்றி யோசிக்கிறேன் என்று விட்டார் நரேந்திரன்.

இந்த சித்திகள் அனைத்துமே ஆன்மிக சாதனைகள் காரணமாகப் பிற்காலத்தில் நரேந்திரனுக்குக் கிட்டின. அவர் அவற்றைப் பயன்படுத்தவில்லை என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

அமெரிக்காவில் அவர் கலந்து கொண்ட கூட்டங்களில் இந்தியத் துறவிகளின் சித்து வேலைகள் பற்றிக் கேள்விகள் கேட்கப்பட்டன. அவற்றுக்கும் ஆன்மிகத்துக்கும் சம்பந்தம் இல்லை. ஆன்மிக சாதனைகளுக்கு அவை இடைஞ்சலே செய்யும் என்று கூறிவிட்டார் அவர்.

(தொடரும்)

About The Author