வெற்றிக்கலை இரண்டாம் பாகம்: ( 4)

மஹாத்மா காந்திஜியின் அறிவுரை: நேரத்தைக் கடைப்பிடியுங்கள்!

நொடிகளினால் ஆனது வாழ்க்கை

சிறிய சிறிய மணித்துளிகளினால் ஆனது ஒருவனின் வாழ்க்கை. இதில் ஒவ்வொன்றும் சிறந்ததே. ஒரு வினாடியையும் கூட வீணாக்கக் கூடாது என்பதே ஆன்றோரின் அறிவுரை. எடித் வார்டன் (Edith Wharton) என்ற கவிஞரின் ‘வாழ்க்கை’ என்னும் ஒரு கவிதை வாழ்வு பற்றி அழகுறச் சித்தரிக்கிறது. உங்கள் கையில் உள்ள உளியால் உங்களை நீங்களே அழகுறச் செதுக்கி, காலமெல்லாம் போற்றும் பதுமையாக ஆக்கிக் கொள்ளலாம் என்பது கவிதையின் கருத்து. கவிதை இதோ:

Life

LIFE, like a marble block, is given to all,
A blank, inchoate mass of years and days,
Whence one with ardent chisel swift essays
Some shape of strength or symmetry to call;
One shatters it in bits to mend a wall;
One in a craftier hand the chisel lays,
And one, to wake the mirth in Lesbia’s gaze,
Carves it apace in toys fantastical.

But least is he who, with enchanted eyes
Filled with high visions of fair shapes to be,
Muses which god he shall immortalize
In the proud Parian’s perpetuity,
Till twilight warns him from the punctual skies
That the night cometh wherein none shall see.

அழகுற உங்களை ஆக்கிக் கொள்ள நேரத்தைக் கடைப்பிடித்தல் என்கிற அரும் குணத்தைக் கொண்டிருத்தல் வேண்டும்! எந்த ஒரு கணத்தையும் வீணாக்கக் கூடாது!

காந்திஜியின் வாழ்வில்

ஒரு நிமிடம் கூட நேரத்தை வீணாக்காது வாழ்ந்தவர் மஹாத்மா காந்திஜி. அவர் வாழ்க்கையில் நடந்த சம்பவம் இது. சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்திருந்தார் காந்திஜி. அவரை ஒருமுறை தரிசிக்க உயிரையும் விடத் தயாரான பெரும் கூட்டம் அங்கு கரை புரண்ட காட்டாற்று வெள்ளமெனத் திரண்டது. பெரும் கூட்டத்தினிடையே மாப்பிள்ளை ஊர்வலக் கார் போல காந்திஜியின் கார் மெதுவாக ஊர்ந்தது. இன்னும் அரை மைல் தூரம் போக வேண்டும். டி.எஸ்.எஸ்.ராஜன் அவர் அருகில் அமர்ந்திருந்தார். திடீரெனக் கார் வழி மறித்து நிறுத்தப்பட்டது. காந்திஜி கூட்டத்தினரை நோக்கி “என்ன விஷயம்?” என்று கேட்டார். அதில் இருந்தவரில் ஒருவர் தாங்கள் ஒரு விருந்திற்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும், அதில் அந்தணர்களும் ஹரிஜன்களும் சரிசமமாக அமர்ந்து விருந்துண்ணப் போவதாகவும், ஒரு நிமிடம் மட்டும் அங்கு வந்து அவர்களுடன் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கெஞ்சினார்.

காந்திஜி ராஜனை நோக்கி, "இன்னும் எவ்வளவு நிமிடத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்குப் போக வேண்டும்" என்று கேட்டார். "பத்து நிமிடம்தான் இருக்கிறது. இப்போது போனால் சரியான நிமிடத்தில் உள்ளே நுழையலாம்" என்றார் அவர். "இந்த நிகழ்ச்சி நம்முடைய திட்டத்தில் ஏற்கெனவே உள்ளதா" என்று அடுத்த கேள்வியைக் கேட்டார் மஹாத்மா. "இல்லை" என்றார் ராஜன். அவரிடம் காந்திஜி, இப்போது கிளம்பினால்தான் கூட்டத்தில் குறித்த நேரத்தில் கலந்து கொள்ள முடியும் என்பதை விளக்குமாறு கூறினார். தொடர்ந்து அங்கு ராஜனுடன் சூடான விவாதம் நிகழ ஆரம்பித்தது. மெதுவாக காந்திஜி கார்க் கதவைத் திறந்து வெளியே வந்தார். பின்னால் வந்து கொண்டிருந்த கார்களில் ஒன்று அவர் அருகில் வர, அதில் ஏறிக் கொண்டு பல்கலைக்கழகம் நோக்கிச் சென்றார்.

கூட்டத்தினருக்குத் தங்கள் ‘பறவை’ தப்பித்துச் சென்றதை அறியவே சிறிது நேரமானது. அஹிம்சை வழி வந்த காவலரின் முக்கிய சிஷ்யரான ராஜனுக்கு அங்கு எந்த விதமான அர்ச்சனை நிகழ்ந்தது என்பதைச் சொல்லவும் வேண்டுமா, என்ன?
காந்திஜி ஒரு நிமிடம் தாமதமாக வந்ததற்கு முதலில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு தன் உரையை ஆரம்பித்தார். இதே போல இன்னொரு முறை சைக்கிள் ஒன்றில் அவர் ஏறிச் சென்று சரியான நேரத்தில் தன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சம்பவமும் புகழ் பெற்ற ஒன்று!

நெல்ஸனின் கூற்று

ஆங்கில வீரரான நெல்ஸன் தன் வெற்றிக்கெல்லாம், ஒரு நிமிடம் கூட நேரம் தவறாமல் வேலை செய்ததுதான் காரணம் என்றார். அவரது புகழ் பெற்ற வார்த்தைகள்: I owe my success to being always 15 minutes before the time.
எந்த நிகழ்ச்சியிலும் அவர் முன்னதாகவேதான் சென்றிருப்பாரே தவிர, தாமதமாக அல்ல.

வாஷிங்டனின் பரபரப்பான பதில்

ஜார்ஜ் வாஷிங்டனின் செகரட்டரியாக இருந்த ஹாமில்டன் எப்போதுமே சிறிது தாமதமாகவே வரும் பழக்கம் உடையவர். அவர் ஒரு முறை தாமதமாக வந்ததற்குத் தன் கடிகாரத்தைக் காரணம் காட்டினார். உடனே வாஷிங்டன், "நல்லது! நீங்கள் உடனே உங்கள் கடிகாரத்தை மாற்றிக் கொள்ளுங்கள்; அல்லது நான் எனது செகரட்டரியை மாற்ற வேண்டி வரும்" என்றார்.

ஸ்டீவ் ஜாப்ஸின் அனுபவ அறிவுரை

ஆப்பிள் நிறுவனத்தை நிறுவியவர்களுள் ஒருவரான ஸ்டீவ் ஜாப்ஸ், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் தனது புகழ்பெற்ற உரையை நிகழ்த்தினார். அதில் தனது வாழ்க்கையை மூன்று கதைகளாகக் கூறினார். அவர் அங்கு அளித்த அறிவுரை: "உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் குறைவு. அதை வீணாக்காதீர்கள்" என்பதுதான்!

மூன்று திரைப்படங்களும் ஒரு நாவலும்

ஒரு நிமிடத்திற்குள் ஒருவனின் வாழ்க்கையில் பெரும் மாறுதல் ஏற்பட்டு விட முடியுமா என்ன?

இதற்கு உதாரணமாக மூன்று திரைப்படங்களைக் கூறலாம். ஆங்கிலப் படமான ‘Run Lola Run’; தமிழ்ப் படங்களான ’12 B’, ‘ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்’ ஆகிய படங்கள் ஒரு நிமிட நேரத்தில் ஏற்படும் சுவையான மாறுதல்களையும் மனித மனப்போக்கையும் நிகழ்வுகளையும் அருமையாகச் சித்தரிக்கின்றன.

அன்றாட வாழ்க்கையில் ‘மிஸ்ஸிங் தி ட்ரெயின்’ என்று இதைச் சொல்வோம். ஒரு நிமிடம் தாமதமாக வந்து பிளாட்பாரத்தில் தான் செல்ல வேண்டிய புகைவண்டியின் கடைசிப் பெட்டி சிறிது தூரத்தில் செல்வதைப் பார்த்தவர் எத்தனையோ பேர்கள் உண்டு, இல்லையா!

இறுதியாக, நேரத்தைக் கடைப்பிடித்தல் என்பதை நன்கு மனதில் இருத்திக் கொள்ளச் சிறந்த வழி ஜூல்ஸ் வெர்ன் எழுதிய ‘அரவுண்ட் தி வோர்ல்ட் இன் 80 டேஸ்’ என்ற புகழ் பெற்ற நாவலில் வரும் பிலியாஸ் பாக்கை நினைவில் கொள்வதுதான். நேரம் பற்றிய ஒரு அருமையான சஸ்பென்ஸை நாவல் கடைசி அத்தியாயத்தில் கொண்டிருப்பதால் அதை இங்கு சொல்லி விடக் கூடாது; ஒரு முறை அனைவரும் படிக்க வேண்டிய நாவல் இது!

வாழ்க்கையை வெற்றிகரமாக ஆக்க, நேரத்தைக் கடைப்பிடியுங்கள் என்ற காந்திஜியின் வாக்கை நினைவில் கொண்டு பின்பற்றினால் வெற்றி நிச்சயம்!

–வெல்வோம்…

About The Author