வெற்றிக்கலை (9) : கற்பனை வளம், மூளையின் நுட்பம் (2)

எதிர்காலம் நம் கையில்

எதிர்காலத்தைப் பற்றி அறிய விரும்பாதவர் யார்? வாழ்க்கை என்னும் வளைவுகள் நிறைந்த பாதையில் அடுத்த வளைவு எப்போது வரும், அதில் என்ன நிகழும் என்பதை அறிய விரும்புவது இயல்பே! அந்த எதிர் காலத்தை ஆக்குவது உன் செயலே என்று காரணகாரிய (CAUSE AND EFFECT – THEORY) மூலமாக மதங்களும், மனசித்திரம் மூலமாக நவீன விஞ்ஞானமும் கூறுகின்றன.

லெகியின் கூற்று

பிரபல கல்வி நிபுணர் ப்ரெஸ்காட் லெகி, தோல்வி சித்திரத்தை தனது கற்பனையில் காண்பதாலேயே மனிதன் தோல்வி அடைகிறான் என்கிறார். இவை மனத்தடைகளை ஏற்படுத்தி நிச்சயம் தோலிவிக்கு வழி வகுக்கின்றன என்கிறார் அவர். மத நூல்களோ காரண-காரிய விளைவை – வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான் – என்று கூறுகின்றன.

‘இதோ உதவி’ என்ற நூலை எழுதிய பிரபல வெற்றியாளர் கோப்மேயர் அந்த நூலிலேயே முக்கியமான அத்தியாயம் கற்பனை பற்றியது தான் என அழுத்தம் திருத்தமாக வலியுறுத்துகிறார். வெல்வதாகக் கற்பனை செய்யுங்கள், மன சித்திரங்களை – உயிருள்ள மனச் சித்திரங்களை – உருவாக்குங்கள். கண்ணார அகக் கண்ணில் காணுங்கள் தினந்தோறும். திருப்பித் திருப்பி, வெற்றியைப் பற்றி, செல்வந்தராக வேண்டுமெனில் செல்வத்தைப் பற்றி, புகழ் பெற வேண்டுமெனில் புகழ் பற்றி மனச் சித்திரங்களை படையுங்கள் என்கிறார் அவர்.

உளவியல் உண்மை

நவீன உளவியலும் "தன் கற்பனைச் சித்திரத்தில் எதாக விரும்புகிறார்களோ அதாகவே ஆகமுடியும்" என்கிறது. (YOU BECOME WHAT YOU ENVISION YOURSELF TO BE!) உலக பிரசித்தி பெற்ற ஹார்வர்டு புகழ் உளவியலாளர் வில்லியம் ஜேம்ஸ் BELIEF CREATES THE ACTUAL FACT என்று இதை உறுதிப்படுத்துகிறார். உலகின் சரித்திர நிகழ்வுகள் இதை நிரூபித்துக் கொண்டே இருக்கின்றன.

கின்னஸ் சாதனைகள் மனிதன் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை எடுத்துக் காட்டுகின்றன.

வியப்பு மிகு ஆற்றல்

ஜெர்மனியை சேர்ந்த ஜோஹன் டேஸ் என்பவர் மேஜையின் மீது கொட்டப்பட்ட நாணயங்களை ஒரு முறை பார்த்தவுடனேயே சரியான எண்ணிக்கையைக் கூறி விடுவார். அது போலவே புத்தக அலமாரியை ஒரு வினாடி உற்றுப் பார்த்த மாத்திரத்தில் அதில் எண்ணிக்கையைச் சரியாக கூறிவிடுவார்.

நமது நாட்டிலேயே சகுந்தலா தேவி கம்ப்யூட்டர்கள் வேகத்தை விஞ்சி மிக பெரிய பெருக்கல் கணக்கின் விடையைக் கூறிவருவது நாம் அறிந்த ஒன்றே. தனது, குறிக்கோளை நிர்ணயித்த உடன், அதை அடைய கற்பனை வளத்தையும் உறுதியான முடிவையும் எடுப்பவர் வெற்றி பெறுவது உறுதி.

மாக்ஸ்வெல் மால்ட்ஸ்

இந்த நூற்றாண்டின் இணையற்ற பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணரான மாக்ஸ்வெல் மால்ட்ஸ் தனது அனுபவங்களை (PSYCHO CYBERNETICS என்ற நூலில்) பகிர்ந்து கொள்ளுகையில் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் தன் முகத்தையோ மற்ற குறைகளையோ மாற்றிக் கொண்ட பலர், சர்ஜரி முடிந்த அடுத்த வினாடியே புதுப் பிறவி எடுத்தது போல மாறிவிடுகின்றனர். இன்னும் சிலர் அறுவைச் சிகிச்சை முடிந்த பின்னரும் மாறாதிருப்பர். இதை ஆய்வு செயத பின் நான் கண்ட உண்மை பிளாஸ்டிக் சர்ஜரி முடிந்த பின்னர் அவர்கள் மனச்சித்திரம் மாறினாலேயே அவர்கள் புதுப்பிறவி எடுக்கின்றனர். சர்ஜரி மூலம் புதிய வெற்றிச் சித்திரத்தை உருவாக்கிக் கொள்பவர்கள் வெற்றி பெற்றார்கள். அதை அடைய முடியாமல் மன ஊனமாகவே இருந்தவர்கள் பழையபடியே தான் இருந்தார்கள் என்கிறார். 21 நாட்களில் நம் மனச் சித்திரத்தை மாற்றி வெற்றி அடைய முடியும்" என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார் மால்ட்ஸ்.

நமக்கு அருகே உள்ள ஒரு சிறுகடையை, நிறுவனத்தையே உதாரணமாக பார்க்கலாம். தேவை இருப்பதை உணர்ந்த ஒருவரின் மனதில் எழுந்த எண்ணமே கடையை உருவாக்கி அது வளர உதவுகிறது.

கலைத்துறையில் சிறந்து விளங்கும் குணச்சித்திர நடிகர், நடிகையர் உயர்வது கற்பனை வளத்தாலேயே! ஒரு காந்தி, ஒரு மோஸஸ், ஒரு வீரபாண்டிய கட்டபொம்மனை உணர்ச்சி பூர்வமாக நம் முன்னே நிறுத்தி அந்தப் பாத்திரத்தை உயிருடன் நடமாட விடுவது சாதாரணமாக சாத்தியமாகக் கூடிய செயலா? இல்லை. கற்பனையின் அற்புத விளைவே அது!

மேலே உயர்ந்து பாருங்கள்

தரை மட்டத்தில் இருக்கும்போது நாம் பார்ப்பதில் ஒரு பகுதியே நமக்குத் தெளிவாகப் புலனாகும். முதல் மாடியில் நின்று பார்த்தால் காட்சி சற்று தெளிவுபடும். பத்தாம் மாடியில் நின்று பார்த்தால் காட்சி விரிவுபடும். நமது மனவள் மட்டத்தையும் உயர்த்த வேண்டும். கற்பனைக்கும் உண்டோ தடை? எவ்வளவுக்கெவ்வளவு அது விரிகிறதோ, உயர்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு சிறப்பு உண்டு.

கற்பனையின் சிறப்புகளை மட்டுமே சிந்தித்த நாம், அதன் மோசமான ஒரு பகுதியையும் நினைவிலிருத்தி எச்சரிக்கை அடைய வேண்டும்.

இயற்கைக்கு ஒவ்வாத கற்பனைகளை அளவுக்கு மீறி சுமந்தவர்கள் இருக்கும் இடம் பைத்தியக்கார விடுதி என்பதை மறந்து விடக்கூடாது!

ஆக்கபூர்வமான கற்பனை வளத்தை யார் விரிவுபடுத்துகிறார்களோ, அவர்கள், "என் எதிர்காலம் என் கையில்" என தைரியமாகக் கூறமுடியும். வெற்றிடையத் துடிக்கும் ஒவ்வொருவரும் அடைய வேண்டிய ஏழாவது குணாதிசயம் கற்பனைவளமே!

About The Author