ஸ்வர்ண லோகம் (26)-மேலும் சில ஜென் கதைகள் – 4

நீ அடுத்த பக்கத்தில்தான் இருக்கிறாய்!

புத்த மதத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன் தனது பயணத்தின்போது ஒரு நதிக்கரையை வந்து அடைந்தான். நதியோ பிரவாகமாகப் பொங்கி ஓடியது. திகைத்துப் போன அவன், எப்படி இந்த வெள்ளத்தைக் கடப்பது என்று சிந்திக்க ஆரம்பித்தான். சரி, இனி மேற்கொண்டு பயணம் செய்ய வேண்டாம் என்ற முடிவுக்கு அவன் வந்தபோது எதிர்க் கரையைப் பார்த்தான். அங்கு ஒரு பெரிய ஆசார்யர் நின்று கொண்டிருந்தார். அவரைப் பார்த்துப் பெரும் குரலில், "ஆசார்யரே! ஆற்றின் அடுத்த பக்கத்திற்கு நான் எப்படி வருவது என்பதைத் தயவுசெய்து சொல்ல முடியுமா?" என்று கேட்டான்.

ஒரு நிமிடம் யோசித்த ஆசார்யர் அவனை நோக்கி உரத்த குரலில், "நீ அடுத்த பக்கத்தில்தான் இருக்கிறாய்!" என்று சொன்னார்.

ஒரு துளி தண்ணீர்

ஜிஸான் என்ற ஜென் மாஸ்டர் தன் சீடனைக் குளிப்பதற்காகத் தண்ணீர் கொண்டு வருமாறு பணித்தார். சீடனும் நீரைக் கொண்டு வந்தான். அதை இதமாக இருக்கும்படி வெந்நீருடன் கலந்தான். மீதம் இருந்த சிறிது குளிர்ந்த நீரை வெளியே கொட்டினான். இதைப் பார்த்த மாஸ்டர், "முட்டாள்! மீதமுள்ள நீரை நீ ஏன் செடிகளுக்கு ஊற்றக் கூடாது? இந்த ஆலயத்தில் இருக்கும் நீரில் ஒரு துளியைக் கூட எப்படி நீ வீணடிக்கலாம்?" என்று கேட்டார்.

அந்த க்ஷணமே சீடனுக்கு ஞானோதயம் ஏற்பட்டு விட்டது. அவன் தன் பெயரை டெகிசுயி என்று வைத்துக் கொண்டான். டெகிசுயி என்றால் ஒரு துளி தண்ணீர் என்று அர்த்தம்!

மிகப் பெரிய போதனை!

மிகப் பெரிய ஜென் மாஸ்டர் ஒருவர் தன் சீடனை நோக்கித் தனது போதனைகளிலேயே சிறந்த போதனை, ‘புத்தர் என்பது உன் சொந்த மனம்தான் என்பதுதான்’ என்றார். இந்தப் போதனையால் வெகுவாகக் கவரப்பட்ட சீடன் இதையே தியானம் செய்ய எண்ணி அவரிடம் அனுமதி பெற்றுக் காட்டிற்குச் சென்றான். இருபது ஆண்டுகள் இதையே தியானம் செய்தான். ஒரு நாள் அந்தக் காட்டின் வழியே ஒரு துறவி செல்வதைக் கண்டு அவருடன் பேசலானான். அவரும் தன் மாஸ்டரின் கீழே போதனை பெற்றவர்தான் என்பதை அறிந்து மகிழ்ச்சி கொண்ட அவன், "தயவு செய்து எனக்கு நமது மாஸ்டரின் மிகப் பெரிய போதனை எது என்று சொல்லுங்கள்" என்று வினவினான். அந்தத் துறவியின் கண்கள் மின்னின. "ஆஹா! மாஸ்டர் தனது அருமையான சிறந்த போதனையை எனக்குத் தந்துள்ளார். புத்தர் என்பது உன் சொந்த மனம் இல்லை என்பதுதான் அது" என்றார் அவர்!
புனிதமானவர்!

மிகப் பெரிய புனிதர் ஒருவர் மலை உச்சியில் உள்ள சிறிய குடிசை ஒன்றில் வசித்து வருவதாகப் பரபரப்பான செய்தி எங்கும் பரவியது. கிராமத்தில் உள்ள ஒருவன் அவரைத் தரிசிக்கக் கருதி கஷ்டமான பயணத்தை மேற்கொண்டு செங்குத்தான மலை மீது ஏறிக் குடிசையை அடைந்தான்.

வாயிலில் ஒரு வயதான வேலைக்காரனைச் சந்தித்தான். அவனை நோக்கி, “நான் புனிதரைத் தரிசிக்க வேண்டும்” என்றான் அவன்.

புன்முறுவல் பூத்த வேலைக்காரன் அவனை உள்ளே அழைத்துச் சென்றான். சிறிய குடிசையில் நுழைந்தவுடன் எதிர்ப்புறம் ஒரு வாசல் இருந்தது. அதன் வழியே அவனை வேலைக்காரன் இட்டுச் சென்றான். வேலைக்காரனை நோக்கிய அவன், "நான் புனிதரைப் பார்க்க வேண்டுமே!" என்றான்.

"நீ ஏற்கெனவே அவரை இங்கு பார்த்து விட்டாய். வாழ்க்கையில் நீ சந்திக்கும் ஒவ்வொருவரையும், அவர் எவ்வளவு எளிமையாக, படாடோபம் இல்லாமல் இருந்தாலும் சரி, அவரைப் புனிதர் என்று பார்க்கக் கற்றுக் கொள்! இதைப் பின்பற்றினால் நீ எந்த பிரச்சினைகளுக்காக இங்கு புனிதரை தரிசிக்க வந்தாயோ அவை தானே தீர்ந்து போகும்" என்றான் அந்த வயதான வேலைக்காரன்!

உன் பொக்கிஷத்தைத் திற!

டாஜு என்ற சீடர் சீனாவில் பாஸோ என்ற மாஸ்டரைச் சந்திக்கச் சென்றார். மாஸ்டர் டாஜுவை நோக்கி, "உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார்.

"ஞானம்" என்று பதிலிறுத்தார் டாஜு.

"உன்னிடமே பொக்கிஷம் இருக்கிறதே! அதன் கதவைத் திற" என்றார் மாஸ்டர்.

"எனது பொக்கிஷம் எங்கே இருக்கிறது?" என்று கேட்டார் டாஜு.

"நீ கேட்பதுதான் உனது பொக்கிஷம்" என்றார் பாஸோ.

டாஜு மகிழ்ச்சி அடைந்தார். ஞானமும் பெற்றார். அன்றிலிருந்து அவர் தனது நண்பர்களிடம், "உனது பொக்கிஷத்தைத் திற! அந்தப் பொக்கிஷத்தைப் பயன்படுத்து" என்று சொல்ல ஆரம்பித்தார்!

சின்ன உண்மை

ஜென் பொன்மொழிகள்:

ஒருவர் நூறு வருடம் ஜீவித்திருக்கலாம், ஒரு நிமிடம் கூட நிஜமாக வாழாமலேயே! (People can live one hundred years without really living a minute.)

புயல் வரப் போகிறது என்று வாழ்க்கை முழுவதையும் கழித்தால், நீ ஒருபோதும் சூரிய ஒளியை அனுபவிக்க மாட்டாய்! (If you spend your whole life waiting for the storm, you will never enjoy the sunshine.)

–அடுத்த இதழில் நிறைவடையும்…

About The Author