அறிவியல் முத்துக்கள் (14)

உயிரியல் சீரழிவு (Biodegradation)

Biodegradationஉயிர்வாழும் உயிரிகள் (living organism), பொருளை அதன் ஆக்கக் கூறுகளாகச் சிதைத்து ஊட்டச்சத்துகளாக (nutrients) மறு சுழற்சி (recycle) செய்யும் செயல் முறையே உயிரியல் சீரழிவாகும். மரம் அழுகிச் சிதைவது போன்ற இயற்கையாகச் சீரழியும் அனைத்தும் உயிரியல் சீரழிவுக்கு எடுத்துக் காட்டுகளாகும். இத்தகைய செயல் முறைக்குப் பொறுப்பான உயிர் வடிவங்கள் சிதை மாற்றம் செய்பவை (decomposers) எனப்படும்; பூஞ்சைகள், நுண்ணுயிரிகள் போன்ற மண்ணில் வாழும், சிக்கல் நிறைந்த, உயிரினங்கள் பெருமளவுக்கு உள்ளன. இத்தகைய உயிரினங்கள் செயல்படக்கூடிய எல்லாப் பொருட்களும் உயிரியல் சீரழிவுக்குட்படுபவையே (biodegradable); உயிரி வடிவங்களால் சிதைக்கப்பட இயலாதவற்றை உயிரியல் சீரழிவுக்குட்படாதவை (Non-biodegradable) எனக்கூறுவார்.

எல்லாக் கரிமப் பொருட்களும் (organic matter) உயிரியல் சீரழிவுக்கு உட்படுபவை; ஆனால் சிதைமாற்றம் செய்பவை, உலோகம், கண்ணாடி மற்றும் பிளாஸ்டிச் போன்றவற்றையும் கூடத் தாக்குவதுண்டு. உயிரியல் சீரழிவுக்கு உட்படாத பல்வகைப்பட்ட பிளாஸ்டிக்குகளை மிகுதியாகப் பயன்படுத்துவது அபாயமானதாகும்; ஏனெனில் பயன்படுத்திய பின்னர் அவற்றைத் தூக்கி எறியும்போது அவை எளிதாக சிதைமாற்றம் செய்யப்படாமல் சுற்றுச் சூழல் மாசு படுத்திகளாக அமைந்து விடுகின்றன. இருப்பினும் உயிரியல் சீரழிவுக்கு உட்படும் பிளாஸ்டிக்குகளை உருவாக்கும் முயற்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன; இவை சுற்றுச் சூழலுக்கு உகந்தவையாக விளங்கும்.

உயிரினப் பல்வகைமை (Biodiversity)

Biodiversityதாவரங்கள், விலங்குகள் மற்றும் நுண்ணுயிரிகள் உட்பட எல்லாவகை உயிரினங்களும் உயிரினப் பல்வகைமையுள் அடங்கும். ஏராளமான உயிரினங்கள் அழிந்து, மாறுபட்டு பெருமளவுக்கு மறைந்து போவதால் உயிரினப் பல்வகைமை என்னும் தொடர் முக்கியத்துவம் பெறுகிறது. ஓர் உயிரியல் வல்லுநரைப் (biologist) பொறுத்தவரை, புவியில் வாழும் எல்லா உயிரினங்களின் வேறுபாட்டுப் பண்பு (variety) மற்றும் மாறுபடும் பண்பு (Variability) ஆகியவற்றையே உயிரினப் பல்வகைமை குறிப்பிடுகின்றது. சில பல்வகைமைகள் மிகவும் முக்கியமானவை; ஏனெனில் உயிரியல் கோளப் (biosphere) பராமரிப்புக்கும், உணவு போன்ற அடிப்படைத் தேவைகட்கும் மனித இனம் பிற உயிரினங்களையே சார்ந்துள்ளது.

பல்வகைமையின் விவரங்கள் அளவிட முடியாத அளவுக்கு மிக அதிகமானதாகும். தோராயமான மதிப்பீட்டின் படி 5 முதல் 30 மில்லியன் உயிரினங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவற்றுள் 1.4 மில்லியன் உயிரினங்களைப் பற்றி மட்டுமே விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. மேலும் ஆண்டு தோறும் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் உயிரினங்கள் அழிந்து போவதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

இப்பல்வகைமையைப் பாதுகாப்பது உடனடியான முக்கியத்துவம் வாய்ந்ததாகும்; ஏனெனில் தாவரங்கள், விலங்குகள், பிற உயிரினங்கள் ஆகியன நோய்களையும் மரபணுக்களையும் குணப்படுத்துதல், உணவுப் பொருட்கள் உற்பத்தி ஆகியவற்றில் அளவிட்டுக் கூற முடியாத பெரும் பங்கு வகிக்கின்றன.

பல்வகைமையின் உயரளவு நிலைமைகள் வெப்ப மண்டல நாடுகளில்தான் மிகுதியாகக் காணப்படுகின்றன. உயிரினங்களின் கலவைகள் வெப்ப மண்டலக் காடுகள் மற்றும் கடற் பகுதிகள் ஆகியவற்றில்தான் ஏராளமாகப் பொதிந்துள்ளன.

About The Author