அறிவியல் முத்துக்கள் (4)

விதைகள் முளை விடுதல்

Sproutsஉகந்த வெப்பநிலை (15.38o), போதுமான உயிர்வளி மற்றும் ஈரப்பதம் ஆகியன கிடைக்கும்போது விதைகள் முளைவிடுகின்றன. விதைகள் பெருமளவு நீரை உறிஞ்சுவதால் உப்பிப் பெருக்கின்றன. உயிரணுக்களின் (cells) ஈரப்பதம் 10%இல் இருந்து 90% அல்லது அதற்கும் மேலாக உயர்ந்து விடுகிறது. தாவர வளர்ச்சிக்கான ஹார்மோன், வளர்ச்சியின் பல்வேறு நிலைகளைக் கட்டுப்படுத்தி ஊக்குவிக்கும் இண்டோல் அசிடிக் அமிலம் ஆகியவை தாவர உயிர்த்தன்மையின் பல்வேறு செயல்களை நடைமுறைப்படுத்துகின்றன. விதையின் உள்ளே வளர்ந்து வரும் கருமுனையின் உயிரணுக்கள் விரைவாகப் பிளவுண்டு, விதையின் மென்மையான மேற்புறத்தோலின் வழியே முதல் வேர் வெளிவருகிறது; தொடர்ந்து தண்டுப்பகுதி வெளிவருவதற்கான மாற்றங்களும் நிகழ்கின்றன. விதைகள் முளைப்பதற்கு எப்போதும் மண் மட்டுமே தேவை என்பதில்லை. தகுதியான நிலைமை உண்டானால் ஈர மணல், மரத்தூள், குப்பை கூளங்கள், துணி, ஏன் காகிதத் தாளில் கூட விதைகள் முளைவிடும்.

காய் கனியாதல்

காய்கள் தமது நிலையில் கடினமானவை, பசுமையானவை, துவர்ப்பு அல்லது புளிப்புச் சுவையுடையவை. இவற்றிற்குக் காரணம் காய்களில் பொதிந்துள்ள கரிம அமிலங்களான மாலிக், சிட்ரிக் மற்றும் டார்டாரிக் அமிலங்களேயாகும். இவற்றில் பெருமளவுக்கான பாலிசாக்கரைடுகள் எனும் மாவுச்சத்துகளும், குறைந்த அளவிலான புரதச்சத்துகளும் அடங்கியுள்ளன. பழுக்கும் செயல்முறைக்குக் காரணமாக அமைவது எதிலின் வாயுவாகும். இவ்வாயு காயைக் கனிவிக்கும் செயல்பாட்டை ஊக்குவித்து மிகுதிப்படுத்துவதோடு பல்வேறு மாற்றங்களையும் உண்டாக்குகிறது. காயாக இருக்கும்போது இருந்த பசுமை நிறம் மறைந்து சிகப்பு அல்லது மஞ்சள் நிறம் தோன்றுகிறது; பாலிசாக்கரைடுகள் சின்னஞ்சிறு சக்கரைத் துகள்களாக மாறி கனிகளில் இனிப்புச் சுவை உண்டாகிறது; பழங்கள் அவற்றிற்கே உரிய மென்மைத் தன்மையை அடைகின்றன. பழுக்கும்போது ஆவியாகும் பொருட்கள் உற்பத்தியாகி, குறிப்பிடத்தகுந்த நறுமணமும் உண்டாகிறது.

About The Author