அறிவியல் முத்துக்கள் (7)

வானிலை முன்னறிவிப்பு

ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நேரத்தின் வானிலை என்பது வெப்பநிலை, காற்றின் அழுத்தம், ஈரப்பதம், வேகம் மற்றும் வீசும் திசை போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்து அமைவது. எனவே வானிலையை முன்கூட்டியே அறிவிப்பதற்கு, ஒரு இடத்தில் மட்டுமின்றி பல்வேறு இடங்களில், வெவேறு உயரங்களில் மேற்கூறிய காரணிகளைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டியது இன்றியமையாததாகும்.

வானிலையை முன்கூட்டியே அறிவிக்கும் வானிலை அறிஞர்கள் வளிமண்டலத்தின் பல்வேறு உயரங்களில் பல்வகைக் கருவிகளின் மற்றும் வானிலை செயற்கைக் கோள்களின் துணையுடன் வெப்பநிலை, காற்றின் அழுத்தம், காற்று வீசும் திசை மற்றும் வேகம், காற்றின் ஈரப்பதம் ஆகிய தரவுகளைச் சேமித்துக்கொள்வர். தரை நிலையங்கள், வானிலைப் பலூன்கள் மற்றும் செயற்கைக் கோள்கள் ஆகியவற்றிலிருந்து பெறப்படும் தகவல்கள் கணினிகளில் உள்ளிடப்படும்; தகவல்களுக்கேற்ப வானிலைப் படங்களைக் கணினி தயாரிக்கும். பின்னர் வானிலை அறிஞர்கள் இப்படங்களை ஆய்வு செய்து வானிலையை முன்கூட்டியே அறிவிப்பர்.

உலோகத் துப்பறிகருவி (metal detector)

காந்தப் புலத்தினருகே உலோகங்களை வைக்கும்போது அப்புலத்தில் இடையூறு ஏற்படும். நீரில் கல்லெறிந்தால், அக்கல்லைச் சுற்றி அலைகள் உண்டாவதைப் போன்றது இந்நிகழ்வு. உலோகத் துப்பறி கருவியில் நுண்ணுணர்வு கொண்ட மின்னணுச் சுற்றுகள் (electronic circuitry) பொருத்தப்பட்டுள்ளன. உலோகப் பொருட்களால் காந்தப்புலத்தில் ஏற்படும் இடையூறுகளை இம்மின்னணுச் சுற்றுகள் கண்டுபிடித்துவிடும். கையால் பிடித்துக்கொள்ளக் கூடிய உலோகத் துப்பறி கருவியில், சம வலிமையுடைய இரண்டு காந்தப்புலங்களை உருவாக்கும், இரு சுருள்கள் (coils) அமைந்திருக்கின்றன. இவ்விரு காந்தப்புலங்களுள் எதனருகிலாவது, உலோகப் பொருட்கள் வந்தால், உடனே அக்காந்தப் புலத்தில் இடையூறு விளையும். இதனால் இரு புலங்களுக்கிடையே சமச்சீர்மை குலைந்து மின்னணுச் சுற்றுக்கு எச்சரிக்கை தரப்பட்டு, கருவியைப் பிடித்திருப்பவரால் அது உணர்ந்துகொள்ளப்படுகிறது. சில கருவிகளில் சுருள்கள் ஏதும் இருப்பதில்லை; ஆனால் சுற்றுச்சூழலில் உள்ள இயற்கைப் புலத்தில் உலோகப் பொருட்களால் உண்டாகும் இடையூறுகளை உணர்ந்து கொள்ளும் வகையில் அக்கருவிகள் அமைந்திருக்கும். கதவுச்சட்ட வடிவில் அமைந்துள்ள உலோகத் துப்பறி கருவிகள் இம்முறையில் செயல்படுபவை. இதில் தொடர்ச்சியாகப் பல சுருள்கள் பொருத்தப்பட்டிருக்கும்; இவை சுற்றுப்புறக் காந்தப்புலத்தைத் தொடர்ந்து கண்காணிப்பவை. இப்புலத்தில் ஏற்படும் இடையூறுகள் உணரப்பட்டு அதனால் எச்சரிக்கை ஒலி உண்டாகும்.

About The Author