ஏற்றம் தரும் ஏலாதி! (2)

குபேர பட்டம் பெற வழி!

குபேர பட்டமும் கை கூடும் என்று ஒரு பாடல் வலியுறுத்தும் போது அது எப்படி கை கூடும் என்ற கேள்வி நமக்கு இயல்பாகவே எழும்!. 49ம் பாடல் பதில் கூறுகிறது!
யானை குதிரை பொன் கன்னியே ஆநிரையோடு
ஏனை ஒழிந்த இவை எல்லாம் – ஆன் நெய்யால்
எண்ணன் ஆய் மாதவர்க்கு ஊண் ஈந்தான் வைசிர
வண்ணன் ஆய் வாழ்வான் வகுத்து
வகையறிந்து யானை, குதிரை, பொன், கன்னி, பசு இவற்றையும் தவம் புரிவோர்க்கு பசு நெய்யோடு உணவளிப்பவர் வைசிரவண்ணன் எனும் குபேரனது வாழ்க்கையை அடைவர் என்று கூறுகிறது இந்தப் பாடல். தானம் புரிவோருக்கு தனம் தானே வந்து சேரும் என்பது பொருள்!

ஆறு மனமே ஆறு; நூல் கூறும் கட்டளைகள் ஆறு

பாடல்களில் ஆறு ஆறாகக் கூறும் பல உண்மைகள் சுவை பயப்பதோடு அரிய நீதிகளையும் உணர்த்துகிறது.

போகக்கூடாத இடங்கள் ஆறு:

கொலைக்களம் வார் குத்துச் சூதாடும் எல்லை,
அலைக்களம் போர்யானை ஆக்கும், – நிலைக்களம்,
முச்சாரிகை ஒதுங்கும் ஓரிடத்தும் இன்னவை,
நச்சாமை நோக்காமை நன்று (பாடல் 12)

கொலை செய்யும் இடம், வெள்ளச் சூழல் உள்ள நீர் நிலை, சூதாடும் கழகம், சிறைச்சாலை, யானைகளைப் பழக்குகின்ற இடம், தேர்,குதிரை, யானை ஆகிய முப்படைகள் செல்லும் இடத்திற்குப் போகாதே!
இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப இப்பாடலைப் பார்த்தால் ஏவுகணைகள் ஏவும் இடம், துப்பாக்கிப் பயிற்சி பெறும் இடம், தரை, விமானப் படைகள் இயங்கிக் கொண்டிருக்கும் இடங்களில் ‘இந்த எல்லையில் வரக் கூடாது’ என்ற அறிவிப்புப் பலகைகளை சாதாரணமாகக் காண்கிறோம். உயிரைப் போக்க வைக்கும் அபாயங்கள் நிறைந்த இடத்திற்கு வலியப் போகாதே என்று கூறி ஆயுளை நீட்டிக்கும் வழிகளை கணி மேதாவியார் காட்டுகிறார்!

பெரியவன் யார்?

கொல்லான்கொலை புரியான்,பொய்யான் பிறர் மனை மேல்
செல்லான் சிறியார் இனம் சேரான் – சொல்லும்
மறையில் செவி இலன்,தீச்சொற்கண் மூங்கை,
இறையில் பெரியாற்கு இவை (பாடல் 19)
கொலை செய்யாதவன், பிறர் கொலை செய்வதையும் விரும்பாதவன், பொய் சொல்லாதவன், பிறர் மனைவியிடம் செல்லாதவன், தீயவர்களிடம் செல்லாதவன், தீய சொற்களைப் பேசாதவன், கேளாதவன் ஆகிய குணங்களை உடையவனே பெரியோன்!

தேவாதி தேவன் யார்?

உரையான் குலன் குடிமை: ஊனம் பிறரை
உரையான்:பொருளொடு வாழ்வு ஆயு உரையானாய்-
பூ ஆதி வண்டு தேர்ந்து உண்ணு குழலாய், ஈத்து உண்பான்,
தேவாதி தேவனாய்த் தேறு (பாடல் 32)

வண்டுகள் மொய்த்து உண்ணும் கூந்தலை உடைய பெண்ணே, தன் குல உயர்வு, குடிப் பிறப்பு உயர்வு ஆகியவற்றைப் பாராட்டிப் பேசாதவன், பிறரது இழிவினை இகழ்ந்து உரைக்காதவன், தன் பொருளை ஏழைகளுக்குக் கொடுத்து வாழ்பவன் தேவர்களுக்கெல்லாம் தேவன்!

மறை வழி நடப்போருக்கு எவையெல்லாம் வந்து சேரும்?

சென்றபுகழ் செல்வம் மீக்கூற்றம் சேவகம்
நின்றநிலை கல்வி வள்ளன்மை – என்றும்,
அளி வந்து ஆர் பூங்கோதாய் ஆறும் மறையின்
வழி வந்தார் கண்ணே வனப்பு (பாடல் 1)

திசை எங்கும் பரவிய புகழ், செல்வம், மேன்மையான நிலை, வீரத்தில் அசையாத நிலை, கல்வி,கொடை இந்த ஆறும் மறையை நன்கு கற்று ஒழுகுவோருக்கு அழகைத் தரும்.

எந்த அழகு உண்மை அழகு?

கல்வியைப் பற்றிக் கூறும் ஒரு பாடல் வழிவழியாக அனைவராலும் மேற்கோள் காட்டப்பட்டு வருகிறது.
அந்தப் பாடல்:-

இடை வனப்பும் தோள் வனப்பும் ஈடில் வனப்பும்
நடை வனப்பும் நாணின் வனப்பும் – புடைசால்
கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோடு
எழுத்தின் வனப்பே வனப்பு (பாடல் 74)

இடுப்பழகு, தோளழகு, செல்வத்தின் அழகு, நடையழகு, நாணத்தின் அழகு, கழுத்தின் அழகு – இவையெல்லாம் அழகே அல்ல; எண்ணும் எழுத்தும் கூடிய கல்வி அழகே அழகு!

இந்தப் பாடலை பர்த்ருஹரியின் கீழ்க்கண்ட பாடலோடு (நீதி சதகம் பாடல் 15) இணைத்துப் பார்ப்போம்:

கேயூராணி ந பூஷயந்தி புருஷம் – மனிதனை வளைகள் அலங்கரிப்பதில்லை
ஹாரா ந சந்த்ரோஜ்வலா – சந்திரன் போல பிரகாசிக்கும் முத்து மாலைகளோ
ந ஸ்நானம் ந விலேபகம் ந குஸுமம் – குளிப்பதோ, சந்தனம் பூசிக் கொள்வதோ
ந அலங்க்ருதா மூர்தஜா – வாரி விட்ட சிகையோ
ந பூஷயந்தி – மனிதனை அலங்கரிப்பவையாகா
யா ஸம்ஸ்கிருதா தார்யதே ஏகாவாணீ – எது நன்கு பரிசுத்தமாகத் தரிக்கப்படுகிறதோ அந்தக் கல்வி
ஒன்று தான்
புருஷம் ஸமலங்கரோதி -மனிதனை நன்கு அலங்கரிக்கச் செய்கிறது
அகில பூஷணானி க்ஷீயந்தே வாக் பூஷணம் பூஷணம்- எல்லா அழகும் நசிகின்றன: கல்வியுள்ள வாக்கே சிறந்த அழகு ஆகும்.

அபூர்வ செய்திகள்!

ஏலாதி சில அபூர்வமான செய்திகளையும் ஆங்காங்கே தெளித்துச் செல்கிறது!
ஒருவன் தவத்தினைச் செய்வானாயின் அவனுக்கு மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழாம் பிறப்பில் வீடு பேறு வாய்க்கும் என்று உறுதி படக் கூறுவது சுவையான செய்தி.

அடுத்து பல்வேறு வகையில் பிறப்பு நேரிடுவதைச் சுட்டிக் காட்டி அப்படிப் பிறக்கும் பிள்ளைகளுக்கு உரிய பெயரையும் பட்டியலிட்டுத் தருகிறது!(பாடல்கள் 31,32). இது வேறு எந்த நூலிலும் காணக் கிடைக்காத ஒரு பட்டியல்!

ஔரதன் – கணவனுக்குப் பிறந்தவன்;
கேத்திரசன் – கணவன் இருக்கும் போது பிறனுக்குப் பிறந்தவன்;
கானீனன் – திருமணம் ஆகாதவளுக்குப் பிறந்தவன்;
கூடோத்துபன்னன் – களவில் பிறந்தவன்;
கிரிதரன் – விலைக்கு வாங்கப்பட்டவன்;
பௌநற்பவன் – கணவன் இறந்த பிறகு பிறனை மணந்து பெறப்பட்டவன்;
தத்தன் – சுவீகார புத்திரன்;
சகோடன் – திருமணத்தின் போதே கருவில் இருந்தவன்;
கிருத்திருமன் – கண்டெடுத்து வளர்த்துக் கொள்ளப்பட்டவன்;
புத்திர புத்திரன் – மகனுக்குப் பிறந்தவன்;
அபவித்தன் – பெற்றோர்கள் கைவிட மற்றவர்களால் வளர்க்கப்பட்டவன்;
உபகிருதன் – காணிக்கையாக வந்தவன்!

இப்படிப் பற்பல செய்திகளை நூலில் பரக்கக் காணலாம்!

சொல்வளம்

நூலின் சொல்வளம் மிகவும் அழகாகவும் ஆழமாகவும் இருப்பதால் படிக்கப் படிக்கச் சுவை கூடுகிறது. ஒரே ஒரு பாடலை எடுத்துக்காட்டாகச் சுட்டிக் காட்டலாம்:

பொய் தீர் புலவர் பொருள் புரிந்து ஆராய்ந்த
மை தீர் உயர் கதியின் மாண்பு உரைப்பின் – மை தீர்
சுடர் இன்று; சொல் இன்று; மாறு இன்று; சோர்வு இன்று;
இடர் இன்று; இனி துயிலும் இன்று (பாடல் 66)

பொய் இல்லாத பெரியோர் ஆராய்ந்த வீடு பேற்றின் மாட்சிமையை உணர்ந்தால் ஒளி இல்லை;சொல் இல்லை; மாறுபாடு இல்லை; சோர்வு இல்லை; துன்பமில்லை; இனி தூக்கமும் இல்லை!

நூலின் யாப்பு

உலகிலேயே சம்ஸ்கிருதம் உள்ளிட்ட எந்த மொழியிலும் இல்லாத ஒரு பா வகை வெண்பா. சொல் நயத்தையும் ஓசை நயத்தையும் கருத்து நயத்தையும் தரும் வண்ணம் இதன் இலக்கணம் அமைக்கப்பட்டுள்ளது அதிசயத்திலும் அதிசயமே.

ஆகவே இதை மனப்பாடம் செய்வது மிகவும் சுலபம்! ஆகவே தான் ‘வெண்பா ஒரு கால் கல்லானை’ என்ற மொழி வழக்கில் உள்ளது. ஒரு முறை கேட்டாலேயே வெண்பா மனனம் ஆகி விட வேண்டுமாம்!

அதனால்தான் வாழ்வியல் நீதிகளைக் கூறும் இந்த நூலை கணி மேதாவியார் வெண்பாவில் அமைத்துத் தந்தார் போலும். அனைவரும் இதனை சுலபமாக மனத்தில் இருத்திக் கொள்ளலாமே!

அறப் பொருட்களைச் சொல்ல வேண்டியிருப்பதால் உவமை நயங்கள், அலங்கார , அணிகள் ஆகியவற்றிற்கு நூலில் அதிகம் இடம் இல்லாமல் போய் விட்டது. பெண்களின் அழகை வர்ணிக்கும் இடத்தில் உவமை நயத்தைக் காட்டி உவமைகள் உள்ள நூலாக இதை ஆக்கியுள்ளார்.!

மனிதனுக்கு ஏற்றம் தரும் வாழ்வியல் நீதிகளை எண்பது பாக்களில் தர வேண்டும் என்று நினைக்கும் கணிமேதாவியாரின் துடிப்பு ஒவ்வொரு எழுத்திலும் தெரிவதால் ஏலாதி அனைவரும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய நூல் ஆகி விட்டது.

பல முறை இதைப் படித்தால் அறம்,பொருள், இன்பம், வீடு ஆகிய இந்த நான்கையும் அடையும் ரகசியம் புலப்படும்!

About The Author