கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது

எண்ணி எண்ணிப் பார்க்க மனம்…

எண்ணங்களைப் பற்றிப் பல புத்தகங்களில் பல கருத்துகளைப் படித்திருக்கிறோம். நேர்மறைச் சிந்தனையைப் பற்றி நிறையச் சொல்வார்கள். "எண்ணங்கள் செயலாகின்றன. செயல்கள் பழக்கம் ஆகின்றன. பழக்கம் பண்பை உருவாக்குகிறது. பண்பு சூழ்நிலையை உருவாக்குகிறது. சூழ்நிலை உன் விதியை நிர்ணயிக்கிறது" என்று ஜேம்ஸ் ஆலனும், அவர் அடி ஒற்றி எம்.எஸ் உதயமூர்த்தியும் சொல்வார்கள். யதேச்சையாக பிரஹதாரண்யக உபநிஷத்திலும் ஏறத்தாழ இப்படி ஒரு கருத்து சொல்லப்பட்டிருப்பதை அறிய நேர்ந்தது.

"உன்னுடைய ஆழ்ந்த, உந்தித் தள்ளும் ஆசை எதுவோ, அதுவே நீ.
உன்னுடைய உந்தித் தள்ளும் ஆசை எதுவோ அதுவே உன் மன உறுதி ஆகிறது.
உனது மன உறுதியே உன் செயலை நிர்ணயிக்கிறது.
உனது செயலின் படியே உனது விதி நிர்ணயமாகிறது."

இது இருக்கட்டும். சொல்ல வந்த விஷயமே வேற.

எண்ணங்களைப் பற்றி வித்தியாசமான ஒரு புதிய கருத்தைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அது எழுப்பிய சிந்தனை அலைகளின் விளைவே இந்தக் கட்டுரை. நாம் படித்த புத்தகம் கார்ல்ஸன் என்ற உளவியல் அறிஞர் எழுதியது. ‘என்ன நடந்தாலும் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம்’ என்பது புத்தகத்தின் தலைப்பு (YOU CAN BE HAPPY WHATEVER HAPPENS).

இந்த ஆசிரியர் சொல்வது, எண்ணங்கள் எண்ணங்களே தவிர யதார்த்த உண்மைகள் அல்ல. வேறு வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால், நினைவுகள் எல்லாம் நிஜம் அல்ல. மனிதர்களைப் பொறுத்தவரையில் அவர்களது மனப்போக்கு, இரண்டு துருவங்களில் அமைகிறது. நினைவுகள் அத்தனையையும் நிஜம் என்று நம்பிக்கொண்டிருப்பவர்கள் ஒரு கோடி. மறு கோடியில் எண்ணங்கள் எண்ணங்களே தவிர உண்மையல்ல என்பதை முழுவதுமாகப் புரிந்து கொண்டவர்கள். நாம் எல்லாம் நடுவாந்தரம்.

இன்னும் விளக்கமாகச் சொல்வோம்: முதல் வகையை எடுத்துக் கொள்வோம். எதிரே வரும் ஆசாமி ஏதோ ஒரு நினைவில் வெறித்துப் பார்த்தபடி போகிறார் என்று வைத்துக் கொள்வோம். "இவன் நம்மைத்தான் பார்த்து முறைத்துக் கொண்டு போகிறானோ?" என்று ஓர் எண்ணம் இவர்கள் மனதில் உதிக்கிறது. இவன் நம்மைத்தான் பார்த்து முறைக்கிறான் என்ற எண்ணத்தை நிஜம் என்று நம்பிவிடுவார்கள். தொடர்ந்து சிந்தனைகள் ஓடும். அன்றைக்குச் சினிமா க்யூவில் சண்டை போட்ட ஆசாமி இவன்தான் என்ற நினைப்பு. இதைத் தொடர்ந்து, கையில் கத்தி வைத்திருக்கிறான், என்னைக் குத்த வருகிறான் என்ற நினைப்பையெல்லாம் நிஜம் என்று கருதிக்கொண்டு விடுவார்கள். இவர்கள் Hypochondric, Delusion, paranoid, Compulsive obsession போன்ற மன நோயாளிகளாக மாறுவார்கள். மறு கோடியில் இருப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள். உண்மையை உணர்ந்தவர்கள். எண்ணங்கள் எண்ணங்கள்தாமே தவிர நிஜம் இல்லை என்று உணர்ந்து கொண்டு, போகிற போக்கில் உதறி விட்டுப் போய் விடுவார்கள்.

இவை இரண்டுக்கும் இடைப்பட்ட ரகத்தினர்தான் நிறையப் பேர். யாராவது ஒருவருக்கு ஆக்சிடெண்ட் ஆகி விட்டால், இவர்களுக்கு, "ஐயையோ நமக்கும் இப்படி ஆகிவிடுமோ!" என்ற எண்ணம் தோன்றும். அந்த எண்ணத்தை அப்படியே விட்டு விடாமல், "ஆக்சிடெண்டாகி விட்டால் என்ன பண்றது?" என்று கவலைப் பட ஆரம்பித்து விடுவார்கள். இந்த "என்ன பண்றது?" மனக்கோட்டத்தை நமக்குத் தெரிந்தவர்கள் பலரிடம் பார்த்திருக்கிறோம். "பேங்க் முழுகி விட்டால் என்ன பண்றது?", "வீடு நெருப்புப் பிடித்துக் கொண்டு விட்டால் என்ன பண்றது?" என்பதில் ஆரம்பித்து "எய்ட்ஸ் வந்து விட்டால் என்ன பண்றது?" வரையில் யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள். எனக்குத் தெரிந்த ஒருவரின் உச்சபட்ச ‘என்ன பண்றது?’ "செத்துப் போய்விட்டால் என்ன பண்றது?".

இப்படி தர்க்கரீதியாக (குதர்க்கரீதியாக?) யோசித்துக் கொண்டே போவதற்கு ஆசிரியர் ஒரு பெயர் கொடுக்கிறார். "Thought Attack". Heart Attack மாதிரி thought attack! தமிழில் நாம் இதை மாரடைப்பு மாதிரி மன அடைப்பு என்று சொல்லிக் கொள்ளலாமோ?

இந்த மன அடைப்பை எப்படிக் குணப்படுத்துவது? இதற்கு வழி வேறொரு இடத்தில் கிடைத்தது. போரடிக்கும் நண்பன் ஒருவன் தூரத்தில் வருகிறான் என்று வைத்துக் கொள்வோம். நமக்கு அவன் தூர வரும்போதே அடையாளம் தெரிந்து விடும். தெரியும் போதே வேறு பக்கம் போய் விடுவோம். இருதய நோயாளிகள், மார்வலி வரத் தொடங்கும்போதே ஒரு மாத்திரையை நாக்குக்கு அடியில் வைத்துக் கொள்வார்கள். அது போல, "நினைவுகள் நிஜம் அல்ல", "மன அடைப்பு" ஆகிய இரு கருத்துக்களையும் நினைவில் வைத்துக் கொண்டால், மன அடைப்பின் அறிகுறி தெரியும்போதே முன் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளலாம்.

"நினைவடைப்பு, நினைவடைப்பு" என்று உரக்க (யாரும் அருகில் இல்லாவிட்டால்!) சொல்லிக்கொண்டு, அந்த நினைப்புகளை உதறி எறிந்து விடலாம். "மன அடைப்பு, மன அடைப்பு" என்று சொல்லிக் கொள்வதற்குப் பதிலாக. "ராமா, கிருஷ்ணா, அல்லா, இயேசு" என்று ஏதாவது நாமத்தைச் சொல்லிக் கொண்டாலும் சரிதான்!

யதார்த்தத்தை ஒட்டிய சிந்தனைகள் எழாமலா இருக்கும்? அப்படி இருந்தால், சரியான புரிதலினால் எது நிஜத்தை ஒட்டிய நினைவு என்று இனம் பிரித்து அறிந்து கொண்டு செயல் புரிவது சுலபமாக இருக்குமே?

எல்லாம் சரி.. பாஸம்மா இதைப் படித்து விட்டு "ஏன் தத்துப் பித்தென்று இப்படி எல்லாம் எழுதுகிறீர்கள்?" இது க.கே.ப.ர. வா அல்லது "கக்கே பிக்கே"யா? என்று கோபித்துக் கொண்டு விட்டால் என்ன பண்றது?

இதுவும் படித்ததுதான்!

ஏப்ரல் 14ந் தேதி அம்பேத்காரின் பிறந்த தினம்.
அண்ணல் அம்பேத்காரின் கடைசிக் கடிதம்.

காளிதாஸ் சிவராஜ்
மாம்லேதார் (பஞ்சாயத்து தலைவர்) தலுகா பர்சோர்

அய்யா வணக்கம்,
பீம் ராவ் எழுதுவது. தாங்கள் மற்றும் குடும்பத்தாரின் நலத்திற்கு வாழ்த்துக்கள். ஐயா எனது உடல்நிலை மிகவும் மோசமாகிக் கொண்டு போகிறது. இரண்டு முறை எனக்கு நெஞ்சு வலி வந்துவிட்டது. அடுத்த முறை வந்தால் நான் உயிரிழப்பது உறுதி என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். எனது மனைவி நான் விட்டுச் செல்லும் பணியை செவ்வனே செய்வார். எனது தாய் தந்தையர்களுக்காக நான் ஒன்றும் சேர்த்துவைக்கவில்லை. அவர்களின் இறுதி காலத்திற்குத் தேவையான உதவிகளைச் செய்யுமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள்
பீம் ராவ்

இது வாழ்நாள் முழுவதும் பல கோடி தாழ்த்தப்பட்ட மக்களுக்காக வாழ்ந்த ஒரு மகானின் இறுதிக் கடிதம்.

சான்று, மும்பையில் உள்ள ஆஸியாட்டிக் மத்திய நூலகத்தில் டாக்டர் அம்பேத்காரின் பிறந்த நாளை ஒட்டி அவர் கைப்பட எழுதிய கடிதங்கள், புத்தகங்கள் அனைத்தும் பார்வைக்கு வைக்கபட்டிருந்தன. அதில் அவர் கடைசியாக எழுதிய இந்தக் கடிதத்தின் பிரதியும் வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கடிதங்கள் "வெயிட்டிங் ஃபார் விசா" என்ற புத்தகத்தில் மராட்டி மற்றும் ஆங்கிலத்திலும் உள்ளது. கல்வி அறக்கட்டளைக்கு உதவி கேட்டு நேருவிற்கு எழுதிய கடிதமும், அதற்கு நேரு எழுதிய பதில் கடிதங்களும் அங்கு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

About The Author