கரேஞ்சி ஆஞ்சநேயசுவாமி

பெங்களூரு என்றாலே பாளையக்காரர் ராஜா கெம்பகௌடா அவர்கள்தான் நினைவுக்கு வருவார். பெங்களூரில் இவர் பெயரில் தெருவும் உண்டு.

தற்போதைய பெங்களூரின் தோற்றம் இவரால்தான் உருப்பெறத் தொடங்கியது. தன் சிறு பிராயத்திலிருந்தே பெரியதொரு நகரை உருவாக்கும் லட்சியம் கொண்டிருந்தார் ராஜா கெம்பகௌடா. அதற்குப் பெரிய அளவில் நிலம் தேவைப்பட்டது. விஜயநகர மன்னர் திரு.அச்சுதராயரிடம் தன் ஆசையைத் தெரிவித்துப் பன்னிரண்டு கிராமங்களைப் பரிசாகப் பெற்றுக் கொண்டார்.

ராஜா கெம்பகௌடா பெரிய கோயில் கட்ட அடர்ந்த ஒரு வனப் பிரதேசத்தைத் தேர்ந்தெடுத்தார். ஒருநாள் அயர்ந்து தூங்கும்போது, அருமையான கனவு ஒன்று வந்தது. செல்வத்திற்கு அதிபதியான திருமகள் தாமரைப்பூவுடன் காட்சியளித்து அவருக்கு ஆசிகள் வழங்கினார். கூடவே, வேட்டை நாய் ஒன்று வேகமாக ஓடி வர, அதைத் துரத்தி வருவது புலியோ சிங்கமோ என்று இவர் அந்தத் திசையில் பார்க்க, அங்கு ஒரு முயல் ஆக்ரோஷமாக வேட்டை நாயைத் துரத்தி வருவது போலவும் ஒரு காட்சி அந்தக் கனவில் தோன்றியது.

இந்தக் கனவுப்படிப் பார்த்தால், அந்த இடத்திற்கு ஏதோ ஒரு மகத்துவம் இருக்கிறது என்ற முடிவுக்கு வந்த ராஜா, அந்த நிலத்தில் ஒரு நல்ல நேரத்தில் நான்கு காளைகள் பூட்டிய ஏரினால் பூமியை உழுதபொழுது, பூமியின் கீழே ஏதோ கனமான பொருள் தட்டுப்பட்டது. அப்பொழுதுதான் அந்த மலையடிவாரத்தில், சுயம்புவாக வீர ஆஞ்சநேயர் வெளிப்பட்டார். ராஜா கெம்பகௌடா அவர்களும் பரவசத்துடன் ஆஞ்சநேயரை எடுத்து அணைத்துக்கொண்டார். பின், அந்த இடத்திலேயே பிராணப் பிரதிஷ்டை செய்து தினசரி பூஜை செய்யத் தொடங்கினார். புராணக்கதைப்படி, இதே இடத்தில்தான் வீர அபிமன்யுவுக்குப் பேரனான ஜனமேஜெயன் குன்றின் மேல் ஏறித் தவம் புரிந்தானாம்.

சுசீந்திரத்திலும் நாமக்கல்லிலும் கூட மிகவும் உயரமான அனுமாரை நான் கண்டிருக்கிறேன். ஆனால் இங்கிருக்கும் அனுமார் சுமார் இருபத்தியிரண்டு அடி உயரம் கொண்டு, விஸ்வரூபம் போல் காட்சியளிக்கிறார். அவர் கரத்தில், சீதாப்பிராட்டி ஸ்ரீராமருக்குக் காட்டும்படி இலங்காபுரியில் கொடுத்த சூடாமணி இருக்கிறது. அது கீழே விழாதபடி, இருகரங்களுக்குள் மூடிக் கொண்டிருக்கிறார். தன் வாலால் இலங்கைக்குத் தீ வைத்து எரித்து, இந்திரஜித்தையும் அவன் படைகளையும் உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டுத் தன் ராமரைப் பார்க்கத் திரும்பி வந்தபோது இந்த இடத்தில் சற்று அமர்ந்தாராம். ஸ்ரீராமரிடம், “கண்டேன் சீதையை” என்று சொல்லி, சீதை அளித்த சூடாமணியைக் காட்ட வேண்டும் என்ற யோசனையில் ஆழ்ந்திருந்தாராம்.

அனுமனின் இந்தத் தோற்றத்தை இங்கு பார்க்கலாம். அள்ளி முடிந்த சிகை, இடையில் தொங்கும் வாள், வெளியே நீட்டியபடி இருக்கும் கோரைப்பற்கள், இடுப்பில் ஒட்டியாணம், ஒட்டியாணத்துடன் பிணைக்கப்பட்ட கோவணம், கையில் கங்கணம், அதில் அறுந்த பிணைச்சங்கிலிகள், காலில் கிண்கிணி மணிகளுடன் தண்டை, உடலெல்லாம் போரில் ஏற்பட்ட சிறுகாயங்கள், ராமரைப் பார்க்கப்போகும் பரவசமான முகம்! அவரைப் பார்க்க, நம் உடல் புல்லரித்துப் போகிறது! சந்நிதிக்கு முன்னால் இருக்கும் கொடிமரத்தில் மூலவர் ஆஞ்சநேயரின் திருவுருவம் இருப்பது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது.

மராட்டியர்கள் பலர் இந்த ஆஞ்சநேயரை வழிபட்டனர். பிற்காலத்தில், திரு.முத்தஞ்சி ராவ் சிந்தியா இந்தக் கோயிலுக்கு வந்து, அனுமானின் ரூபத்தைக் கண்டு வியப்படைந்தார்! அவருடைய கனவில் மாருதி தோன்றி, ஸ்ரீராமருக்கு ஓர் ஆலயம் எழுப்பச் சொல்லிக் கட்டளையிட்டாராம். இதைத் தன் பாக்கியமாகக் கருதி சிந்தியாவும், அனுமனுக்கு எதிரில் ராமன் லட்சமண சீதா சமேதராக விளங்கும்படியான சிலைகளைப் பிரதிஷ்டை செய்திருக்கிறார். சுவரிலும் ராமரைக் குறித்த சித்திரங்களையும், தசாவதாரத்தையும் காணமுடிகிறது. மேலே படி ஏறினால் சிறிய பால்கனி. அதில் ஏறி நின்றால், நமக்கு அனுமானின் தரிசனமும் எதிரில் ராம – சீதா – லட்சமணரின் தரிசனமும் கிடைக்கிறது.

அனுமாருக்கு வெண்ணெய்க் காப்பு சாற்றுவது, வடை மாலை, வெற்றிலை மாலை சாற்றுவது எனப் பல வேண்டுதல்கள் தொடர்ந்து நடக்கின்றன. சனி தோஷம் விலகப் பலர் இங்கு வருகின்றனர்.

பெங்களூரிலிலேயே மிகவும் பழமை வாய்ந்த ஆலயம் இந்த "கரேஞ்சி ஆஞ்சநேயசுவாமி ஆலயம்" நாமும் அவரை வணங்கி அருள் பெறுவோம்!

About The Author