சில்லுனு ஒரு அரட்டை

ஹலோ ஃபிரெண்ட்ஸ்,

எல்லோரும் நலமாயிருக்கீங்களா? நானும் இங்கே நலம்தான்.

போன வாரம் நிலா தன்னுடைய ஒலி வடிவ அரட்டையின் மூலமா மடை திறந்து நம்ம எல்லோருக்கும் இன்ப அதிர்ச்சி குடுத்திருந்தாங்க. பொதுவாக சிறு வயது முதலே வாழ்க்கைத் தத்துவங்களின் மேலே எனக்கு ஒரு தனி ஈர்ப்பு உண்டு. அதுக்கு முழு முதல் காரணம் என்னுடைய அப்பாதான். நிறைய பேர் தங்களுடைய முதல் ஹீரோ, ஹீரோயின் தங்களுடைய அப்பா, அம்மான்னு சொல்லுவாங்க. அவங்கள்ல நானும் ஒருத்தி. ரெண்டு பேர் மாதிரியும் நான் இருக்கணும்னு முயற்சி செய்திருந்தாலும் அப்பாவின் தாக்கம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். என் அப்பாவின் மூலமாதான் எனக்கு வாழ்க்கைத் தத்துவங்களுக்கான அறிமுகம் கிடைச்சுது. எங்களுடைய வீட்டுல பார்வையில் படறவிதமா நிறைய இடங்கள்லே கீதாசாரத்தின் கீழ்க்கண்ட வரிகள் ஒட்டப்பட்டிருக்கும்.

"எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்கவிருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய் எதற்காக நீ அழிகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய்? அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருக்கிறாய், அது வீணாகுவதற்கு?
எதை நீ எடுத்துக்கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது.
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.
இதுவே உலக நியதியும், எனது படைப்பின் சாராம்சமுமாகும்."

அடிக்கடி என்னுடைய அப்பா கீதாசாரத்தின் இந்த வரிகளை என்னைப் படிக்கச் சொல்லுவாரு. அப்போதெல்லாம் அதன் முழு அர்த்தம் புரியாது. ஆனாலும் அப்பாகிட்டே நல்ல பேர் எடுத்திட இந்த வரிகளை வாய்விட்டு படிப்பேன். நாளாக நாளாக அதன் அர்த்தம் கொஞ்சம் கொஞ்சமா புரிய ஆரம்பிச்சுது. இப்பவும் அதனுடைய முழுமையான அர்த்தம் புரிந்ததா அப்படீங்குற கேள்வி எனக்குள்ளே இருந்துக்கிட்டே இருக்கு. பல நேரங்கள்ல புத்தகங்கள் வழியா படிக்கும்போது தத்துவங்களின் அர்த்ததை சரியா புரிந்து கொள்ள முடியாம சிரமப்பட்டிருக்கேன். ஆனால் நிலாவின் படைப்புகளை படிக்கும்போது அவங்க சொல்லும் விஷயங்கள் பல நேரங்கள்ல ரொம்ப எளிமையானதா இருக்கிறதை உணர்ந்திருக்கேன். உதாரணமா, நமக்குள்ளே இருக்கும் தேடலின் மற்றொரு பரிணாமத்தை போன வாரம் தன்னுடைய மடை திறந்துல சொல்லியிருந்தாங்க. ரொம்ப நல்லாயிருந்தது.

https://www.nilacharal.com/ocms/log/09191112.asp

கடந்த வாரம் இந்திய கிரிக்கெட் வீரர் பட்டோடி மறைந்து விட்டார். பிறப்பும், இறப்பும் இயற்கையின் நியதி என்ற உண்மை புரிந்திருந்தாலும் அவர் மறைந்த செய்தி கேட்கும் போது கொஞ்சம் வருத்தமிருக்கதான் செய்யுது. நம்ம இந்திய அணியில் பல புதிய உக்திகளைக் கையாண்டு நம்முடைய அணிக்கு வெற்றிகளை தேடித் தந்த கேப்டன் என்கிற பெருமை இவருக்குண்டு. நிலாச்சாரலின் Celebrity Profile-க்காக அவரைப் பத்தின விவரங்களை சேகரிக்கும்போது அவருடைய நகைச்சுவை உணர்வு பற்றித் தெரிய வந்தது. ஒருமுறை தன்னுடன் விளையாடும் சக விளையாட்டு வீரர்களுக்கு தன்னுடைய பண்ணை வீட்டில் விருந்தளித்தாராம். அப்போது அவரிடம் பணிபுரிந்த வேலைக்காரர்களைத் தீவிரவாதிகளாக நடிக்கச் செய்து தங்களையெல்லாம் பயமுறுத்தியதை இன்றும் அவருடைய சக கிரிக்கெட் வீரர்கள் ரசித்து நினைவுகூறுகிறார்கள். ஒரு கார் விபத்தில் வலது கண்ணில் பார்வையை முழுவதுமாக இழந்த போதிலும், 6 மாத சிகிச்சைக்கு பிறகு மீண்டும் விளையாடக் களமிறங்கிய அவருடைய உறுதியையும் தைரியத்தையும் பாராட்டாமலிருக்க முடியலை. அவரைப் பற்றின மேலும் விவரங்களுக்கு, கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கவும்.

https://www.nilacharal.com/enter/celeb/mansoor_ali_khan_pataudi.asp

ரெண்டு வாரமா உங்ககிட்டே சொல்லலாமா வேண்டாமான்னு ஒரே யோசனை. நான் கஷ்டப்பட்டது போறாமல் உங்களையும் கஷ்டப்படுத்தனுமான்னு நிறைய யோசிச்சேன். அப்புறம்… சரி… ‘யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்’ன்னு முடிவு செய்து உங்ககிட்டே சொல்லிடறதுன்னு முடிவு செய்துட்டேன். ரெண்டு வாரத்துக்கு முன்னாடி அஜீத் படம் பார்க்கும் ஆசையில ‘மங்காத்தா’ படம் பார்க்கப் போயிருந்தோம். இந்த படத்தைப் பற்றி இதுக்கு மேலே நான் சொல்லப் போறது எல்லாமே இந்த படத்தைப் பற்றிய என்னுடைய தனிப்பட்ட அபிப்பிராயம்.

ஒரு ஹீரோ முழு வில்லனாக நடிச்சிருக்காரு. அதுவும் அஜீத் நடிச்சிருக்காருன்னு ரொம்பவே எதிர்பார்த்து போனேன். டிக்கெட் வாங்கின இடத்துலேயே எனக்கு சொல்லப்பட்ட மறைமுகமான செய்தியை நான் கவனிக்காம விட்டுட்டேன். அதாவது மங்காத்தா படத்துக்கான வரிசைக்குப் பதிலா வேறொரு படத்திற்கான வரிசையில நின்று டிக்கெட்களை தவறுதலா வாங்கிட்டோம். அப்புறம் திரும்பவும் போய் ‘மங்காத்தா’ படத்திற்கான டிக்கெட்களை ஒரு வழியா வங்கினோம். விதி வலியது?!!

ஹூம்… படத்துக்கு வருவோம். கிராபிக்ஸ் சம்பந்தமான காட்சிகளை நல்லா படமாக்கியிருந்தாங்க. இடைவேளை வரைக்கும் படம் ஓரளவுக்கு பரவாயில்லேன்னே சொல்லலாம். என்ன ‘மங்காத்தா – Strictly No Rules’னு சொல்றதுக்குப் பதிலா ‘மங்காத்தா – Strictly No Logic’ அப்படீன்னு சொல்லியிருக்கலாம். ஆனாலும் கதையைக் கொண்டு போன வேகம், அதுவும் சதுரங்க விளையாட்டில் சாதுர்யமாக காய் நகர்த்துவது போன்ற உணர்வு ஏற்பட்டது நல்லாயிருந்தது. இடைவெளிக்கப்புறம்தான் பிரச்சனை ஆரம்பிச்சுது. தந்திரமிக்க, பண வெறி பிடித்த போலீஸ் அதிகாரியாக அஜீத் கொஞ்சம் நல்லாவே நடித்திருக்கார் என்பது உண்மைதான். அதுக்காக மத்தவங்களும், கதையும் எப்படி வேணும்னாலும் இருக்கலாமா? இடைவெளிக்கப்புறம் கஷ்டப்பட்டு கதை வேகமெடுக்க முயற்சி செய்தாலும் அதன் வேகத்தைக் குறைக்கும் விதத்துல இருக்கு ப்ரேம்ஜியின் நகைச்சுவை (?) சம்பந்தமான ஸீன்கள். முடியலேங்க… முடியலை… இயக்குனர் ஸாருக்கு ஒரு வேண்டுகோள். படத்தின் பல இடங்களிலே இளமையாகவும், வண்ணமயமாகவும் படமாக்குவதா நினைத்து கொஞ்சம் ஆபாசமாகிடுச்சோ என்கிற ஒரு உணர்வு ஏற்படுவதைத் தவிர்த்திருக்கலாமே? இருந்தாலும் படம் முழுக்க பக்கா வில்லனாக அஜீத்தை நடிக்க வைத்திருக்கும் இயக்குனரைக் கண்டிப்பா பாராட்டணும். பாடலுக்காக வெளிநாடு சென்று படம்பிடிக்கும் வழக்கத்திற்கு மாறாக ‘வாடா பின் லேடா’ பாடலில் அறையின் மாற்றங்களை கிராபிக்ஸ் மூலமாகப் படம் பிடித்திருந்தது வித்தியாசமாக மட்டுமில்லாமல் ரசிக்கும் விதத்திலும் அமைந்திருந்தது. பணத்தைப் பங்கிடும்போது நடக்கும் சண்டைக் காட்சியில், நெருப்பு பற்றி எரியும் போது வாசிக்கப்பட்ட வயோலாவின் (இசை கருவியின்) இசை பிட் அருமையாயிருந்தது. அந்த இடத்தில் அஜீத்தின் நடிப்பும் எனக்குப் பிடிச்சிருந்தது. படம் முழுக்க அஜீத்தை இயல்பான கெட்டப்பில் காண்பித்து, படம் முடிக்கும் தருவாயில் இளமையான அஜீத்தைக் காட்டியிருந்தது கொஞ்சம் ஆறுதல். படம் ஆரம்பித்து இடைவேளை வரை இருந்த வேகத்திலேயே கொண்டு போயிருந்தா இன்னும் நல்லாயிருந்திருக்குமோன்னு நினைக்கத் தோணுது.

கடைசிக் கட்டி மாம்பழத்துக்கு வரலாம். பொதுவாக நம்ம எல்லோருக்கும் உதவி தேவைப்படுபவர்களுக்கு நம்மால் முடிந்தவரை உதவணும் என்கிற எண்ணம் நிறையவே இருக்கு. ஆனால் நேரமின்மை காரணமா நம்மால் முடியறதில்லை. அது மாதிரியான ஆளாக நீங்க இருக்கும் பட்சத்துல உங்களுக்கான இணையம்தான் இந்த Freerice.com. இங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கான ஒவ்வொரு சரியான பதிலை நீங்க தேர்வு செய்யும்போதும் 10 அரிசி தானியங்களை நீங்க தானம் செய்யறீங்க. ‘உலக உணவு நிகழ்ச்சி’யின் மூலமா இந்த தானியங்கள் விநியோகிக்கப்படுது. இந்த விநியோகம் சம்பந்தமான வீடியோ காட்சிகளையும் இந்த இணையத்துல இணைச்சிருக்காங்க. கேள்விகளுக்கான விருப்பமான தலைப்புகளையும், மொழியையும் நாமே தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பு இணையத்திலிருக்கு. இதன் மூலமா தானியங்களை தானம் செய்யறது மட்டுமில்லாம, நீங்களும் சின்னச் சின்ன விஷயங்களை தெரிஞ்சுக்கலாம்/நியாபகப்படுத்திக்கலாம்.

http://freerice.com/

சரிங்க… நம்பளுடைய அரட்டையை அடுத்த வாரம் தொடரும் வரை டா டா… பை பை… ஸீயூ…

About The Author