தென்றலாய்த் தழுவும் வரிகள்…

நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்…

இந்த வரிகளை மேலோட்டமான அர்த்தத்தில் பார்க்கும் போது தனி மனிதன் தூங்கியதால் இழந்தவற்றைக் கூறுவது போல் இருக்கும். ஆனால் அதன் உண்மையான கருத்து தனி மனிதனின் உழைப்பும் அவரது நற்பண்புகளும் ஒரு நாட்டின் வளத்தையும் மக்களின் வாழ்க்கைத் தரத்தின் வளப்பத்தையும் வெளிக்காட்டும் என்பதைக் குறிப்பிடுகிறது. தனிமனிதர்களின் தொகுப்பே ஒரு நாடு என்பதையும், அவர் தனது நாட்டின் ஒரு அங்கம் என்பதையும், ஒவ்வொருவரும் உழைத்தால்தான் நாடு முன்னேற முடியும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். பிறரைக் குறை கூறுவதை விட்டு விட்டு உன்னைத் திருத்திக்கொள் என கவிமேதை கூறுகின்றார். அதனால்தான் தனிமனிதனின் தவறைப் பற்றி குறிப்பிடும்போது நாட்டைக் கெடுத்ததுடன் என்பதை முதலில் எழுதிவிட்டு பின் தானும் கெட்டார் என எழுதியுள்ளார்.

சிந்தித்துப் பார்த்து செய்கையை மாற்று
சிறிசா இருக்கையில் திருத்திக்கோ
தவறு சிறிசா இருக்கையில் திருத்திக்கோ…

ஒரு மனோதத்துவ மருத்துவரின் ஆராய்ச்சி முடிவுகளை ஒத்த கருத்துக்களை இந்த வரிகளின் மூலம் நமது மனங்களில் பதிய வைக்கின்றார். எந்த ஒரு தவற்றையோ, தீய பழக்கத்தையோ ஆரம்ப நிலையில் கைவிடாவிட்டால் பின் நாம் அதற்கு அடிமையாகி நம்மையே இழக்க நேரிடும் அபாயமுண்டு. இதற்கு உதாரணமாக புகைபிடித்தல், மதுப்பழக்கம் இன்னும் பிற செயல்களைப் பட்டியலிடலாம். எனவே தவறுகளை அதன் ஆரம்ப நிலையிலேயே திருத்திக்கொள்ள வேண்டும் இல்லையெனில் அவை நம்மையே அழித்து விடும்.

வேப்பமர உச்சியில் நின்னு பேய் ஒன்னு ஆடுதுன்னு
விளயாடப் போகும் போது சொல்லி வைப்பாங்க
உந்தன் வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க

பெற்றோர்கள் மற்றும் நம்மைச் சுற்றியுள்ளவர்கள் குழந்தைகளிடம் பயம் ஏற்படுத்த இதுபோன்ற தேவையற்ற வார்த்தைகளைக் கூறுவதுண்டு. இதனால் குழந்தை பெரியவர்களாகும்போது பய உணர்வுகளுக்கு ஆட்படுகின்றனர். மூட நம்பிக்கையின் எதிர்ப்பையும் இளம் வயதில் மனதில் பதியும் வார்த்தைகள் எவ்வளவு பாதிப்புக்களையும் பின்விளைவுகளையும் ஏற்படுத்தும் என்பதை கவிஞர் சுட்டுகின்றார். இப்படி எளிய முறையில் வாழ்க்கைக்கு பயன்படும் தத்துவங்களை எழுதியதால்தான் பட்டுக்கோட்டையார் மக்கள் கவிஞராகவும் வாழும் கவியாகவும் போற்றப்படுகின்றார்.

About The Author