பாபா பதில்கள்-சதாசர்வ காலமும் நினை

சதாசர்வ காலமும் நினை

நம் உடம்பிற்குள்ளே சாமி இருக்கிறார். வெள்ளத்தின் உள்ளானும், வேங்கடத்து மேயானும் உளன் கண்டாய் நன்னெஞ்சே! உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய் நன்னெஞ்சே!

பகவான் பாற்கடலிலே இருப்பான். வெள்ளம் என்றால் தண்ணீர். தண்ணீரிலே இருப்பான். "வெள்ளத்தின் உள்ளான்". மலை மேலேயும் இருப்பான். வேங்கட மலை மேலேயும் இருப்பான். தண்ணீரிலும் இருக்கிறான். "உளன் கண்டாய்! நன்னெஞ்சே!"
ஏ நெஞ்சமே! பயப்படாதே. இருக்கிறான். எங்கே இருக்கிறான்? "உள்ளுவார் உள்ளத்து". யார் நினைக்கிறார்களோ, அவர்கள் நெஞ்சத்திலே இருப்பான். இல்லை என்றால் அங்கேயே இருந்தாலும் தெரியவில்லை. யார் நினைக்கிறார்களோ, அவர்களுடைய உள்ளத்திற்கு உள்ளே உட்கார்ந்து கொண்டு இருக்கிறான். அதனாலே நீ நினை. உன் கிட்டே பெருமாள் இருக்கிறார். அந்த நினைப்பு தான் வாழ்க்கை. அந்த பகவானைப் பற்றி சதாசர்வ காலமும் நினைக்க நினைக்க, நமக்கு உள்ளே இருக்கிற அந்த ஜோதி தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும்.

அன்புமலைநெஞ்சமே

கோயில் நினைவே சுகந்தம் மனமே மஞ்சன நீர் பூசை கொள்ள வாராய் பராபரமே – தாயுமானவர்.

‘என்னுடைய நெஞ்சம் தான் கோயில். அதில் எப்போதும் உன்னைப் பற்றியே நினைச்சிட்டிருக்கேன் இல்லையா அதுதான் ஊதுபத்தி வாசனை,சாம்பிராணி தூபம்-அதுதான் அந்தக் கோயிலுக்குள் இருக்கிற மணம். நான் உனக்கு அபிஷேகம் செய்ய விரும்புகிற வஸ்து மஞ்சன நீர் – எல்லா சுகந்த மணப்பொருள்களும் கலந்த அபிஷேகம் செய்கிற தீர்த்தம் என்னுடைய அன்பு. நீ வந்து பூஜையை ஏற்றுக்கொள்’ என்று சொன்னார்.

இதுதான் ஒரு பக்தனுக்கும் பரமாத்மாவிற்கும் கிடைக்கிற ஆனந்தம். கடவுள் ரொம்பப் பெரிய வஸ்துதான். ஆனால் உன்னுடைய அன்பினால் நீ அவனை கட்டிப் போட முடியும். அந்த வகையில் அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையாக அந்த ஆண்டவன் என் அகத்தில் இருக்கிறான்.

About The Author