பார்த்ததில் ரசித்தது! படித்ததில் பிடித்தது!! – (18.3)

இசைப் பேரரசியின் வாழ்வில் ஒரு சம்பவம்! – 3

M.S.Subbulakshmi"வீட்டின் உள்ளேயிருந்து சதாசிவம் வெளியே வந்தார். நன்கு பேக் செய்து எடுத்துச் சென்றிருந்த திருப்பதி வெங்கடேஸ்வரனின் திருவுருவப் படம் ஒன்றை ரமேசன் அவரிடம் அளித்தார். அதை மிகுந்த சந்தோஷத்துடன் வாங்கியவர் ஒரு டேபிளின் மேல் வைத்தார். பிறகு பிரசாத் தாங்கள் வந்த நோக்கத்தை எடுத்துரைத்தார். அன்னமாசார்யரின் ஐம்பது கீர்த்தனைகளை ஐந்து எல்.பி ரிகார்டுகளாகக் கொண்டு வர உத்தேசிருப்பதையும் அதை எம் எஸ் அம்மா நிறைவேற்றித் தர வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தார்.

சதாசிவம் முதலில் சந்தோஷம் அடைந்தாலும் எம்.எஸ்ஸி-ற்குத் தெலுங்கு தெரியாது என்பதால் அதை இந்த வயதில் கற்று, கீர்த்தனைகளைப் பாடுவது கஷ்டம் என்று எடுத்துரைத்தார். தியாகராஜரின் தெலுங்குக் கீர்த்தனைகளோ என்றால் அதைப் பல வருட காலம் பாடி அனுபவித்தவர் எம்.எஸ் என்றும் அதனால் தியாகராஜரின் கீர்த்தனைகளை அவரால் பாட முடிகிறது என்றும் அவர் விரிவாகச் சொன்னார்.

அன்னமாசார்யரின் கீர்த்தனைகளைக் கற்பதற்கே ஒரு வருட காலம் ஆகும் என்பதால் இந்த அறுபது வயதில் அவரைச் சிரமப்படுத்த முடியாது என்று அவர் கூறியபோது பிரசாத் மிகவும் வருத்தமடைந்தார். என்ன செய்வதென்று தெரியாத நிலையில் டேபிளின் மீது இருந்த வெங்கடேஸ்வரனைப் பார்த்தார்.

அப்போது அங்கு வந்த எம்.எஸ் டேபிளின் மீது இருந்த படத்தைக் கையில் எடுத்துக் கொண்டு கண்களை மூடிப் பிரார்த்தனை செய்தார். அவர் கண்களில் நீர் பெருகிற்று. தலையை வெங்கடேஸ்வரனின் பாதத்தில் வைத்து, "பெருமாளே! என்னை ஆசீர்வதிக்க இத்தனை தூரம் நீயே வந்துட்டயா!" என்றார். என்ன குரல்! என்ன பக்தி! என்ன வினயம்! ஆனால் அவர் குரலில் சோகம் இழைந்தோடியது! உலகையே தன் கானத்தால் பரவசப்படுத்திய அந்தப் பெரிய இசைப் பேரரசி ஒரு சாதாரண பருத்திப் புடவை அணிந்து எளிமையாக இருந்தார். பிரசாத் மனம் கலங்கினார். இவருக்கு ஏன் இந்தச் சோதனை! அவர் கண்களில் நீர் முட்டியது. அதைத் துடைத்து விட்டுக் கொண்டார்.

அப்போது சதாசிவம் அவர்கள், இதுவரை பேசியதை எடுத்துரைத்தார். உடனே எம்.எஸ்," கடவுள் இப்படி ஒரு வாய்ப்பை எனக்குத் தருகிறார் என்றால் அதில் என்ன கஷ்டம் இருந்தாலும் சரி, எனக்குக் கவலை இல்லை. இந்தச் சேவையைப் பெருமாளுக்குச் செய்தே தீருவேன்" என்று உறுதிபடத் தெரிவித்தார். அந்த உறுதிமொழி அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது. நிறைய பயிற்சி எடுக்க வேண்டுமென்பதால் ஐந்தில் மூன்றை அவர் பூர்த்தி செய்வதாகவும் மீதி இரண்டில் கணேச பஞ்சரத்னம், மதுராஷ்டகம், கீத கோவிந்தம் உள்ளிட்டவற்றை இடம்பெறச் செய்வது என்றும் முடிவானது. இசை ஆல்பம் பற்றிய பேச்சு முடிந்தது. அடுத்ததைப் பற்றிப் பேசப் பிரசாத் தயங்கினார்.

"அம்மா, ரொம்ப சந்தோஷம்! பெருமாளின் ஆசீர்வாதம் உங்கள் குடும்பத்திற்கு என்றும் இருக்கும். இதில் உங்களுக்கான தொகையைப் பற்றிப் பேசவில்லையே?"" என்றார் பிரசாத். அவரை எம்.எஸ் பேசி முடிக்கவிடவில்லை.

"என்ன பணமா! பெருமாளின் சேவையில் பணத்தைப் புகுத்தாதீர்கள்! ஒரு பைசா கூட வேண்டாம்!"

பிரசாத்திற்கு வியர்த்தது. இந்தத் தருணத்தைப் பற்றித்தான் பரமாசார்யாள் எச்சரித்திருந்தார்.

"அம்மா! நீங்கள் சொல்வது சரிதான்! உங்கள் பக்தியும் சேவை மனப்பான்மையும் எனக்குப் புரிகிறது. டி.டி.டி இதை யாருக்கும் இலவசமாக வழங்கப் போவதில்லை. இந்தியாவிலும் உலக நாடுகள் அனைத்திலும் இதை விற்பனை செய்யப் போகிறது.

டி.டி.டி-க்கு இதில் பெரிய வருவாய் கிடைக்கும். சட்டப்படி உங்களுக்குச் சேர வேண்டியது இதில் இருக்கிறது. உங்கள் சேவையை இலவசமாகப் பெற்று அதனால் குற்றச்சாட்டுக்கு டி.டி.டி இலக்காகி விடக்கூடாது இல்லையா? "நான் ஒரு சின்ன அதிகாரி. நானும் வெங்கடேஸ்வரனுக்குப் பதில் சொல்ல வேண்டியவன் இல்லையா? இது பெருமாளின் விருப்பம் போலும். அதனால்தான் நாங்கள் உங்கள் முன் நிற்கிறோம். என்னை உங்கள் பிள்ளையாக எண்ணிக் கொள்ளுங்கள்! நான் சொல்வதில் தவறு இருந்தால் என்னை மன்னியுங்கள்!"" பிரசாத் முடித்தார்.

சில நிமிடம் அங்கு மௌனம் நிலவியது. பிரசாத் சொல்வதில் இருந்த நியாயம் அவருக்குப் புரிந்தது. ஒரு வழியாக அவர் சம்மதித்தார். அந்த விவாதம் நல்லபடியாக முடிந்தது. இதற்கு என்ன பெயர் வைப்பது என்று பிரசாத் கேட்க, உடனடியாக அவரிடமிருந்து பதில் வந்தது.

"பாலாஜி பஞ்சரத்னமாலா."

பிறகென்ன! டி.டி.டி நான்கு லட்ச ரூபாயை எம்.எஸ் பெயரிலும் இரண்டு லட்ச ரூபாயை சதாசிவம் பெயரிலும் ஒரு லட்ச ரூபாயை அவர் மகளான ராதா விஸ்வநாதன் பெயரிலும் டிபாசிட் செய்தது. அதில் வரும் வட்டித்தொகை காலம் காலமாக அவர்களைச் சேரும்.

இந்தியா முழுவதும் 1980ஆம் ஆண்டு ஒரே சமயத்தில் பாலாஜி பஞ்சரத்னமாலா வெளியிடப்பட்டு மாபெரும் வெற்றியை அடைந்தது. முதல் ரிகார்டை அப்போதைய ஜனாதிபதி நீலம் சஞ்சீவரெட்டி வெளியிட, அடுத்த ரிகார்டைப் பிரதமர் இந்திரா காந்தி வெளியிட்டார்.

மூன்று மற்றும் நான்காவதை மாநில முதல் மந்திரியும் கவர்னரும் வெளியிட, ஐந்தாவதைப் பீடாதிபதிகள் வெளியிட்டனர்.

இந்த ஐந்து ரிகார்டுகளின் விற்பனை, முந்தைய அனைத்து ஹெச்.எம்.வி ரிகார்டுகளின் விற்பனையை முறியடித்துப் புதிய சாதனையைப் படைத்தது.

1998இல் பாரத அரசு எம்.எஸ்.சுப்புலெக்ஷ்மிக்குப் ‘பாரத ரத்னா’ விருது அளித்துக் கௌரவித்தது. ஆனால், சதாசிவத்திற்கு அந்த விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது. அவர் 1997இல் மறைந்து விட்டார். பெரும் சாதனையைப் பாரத இசை வரலாற்றில் ஏற்படுத்திய இசைப் பேரரசி 2004ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி மறைந்தார்.
அவர் புகழ் என்றும் மறையாது!

(பி.வி.ஆர்.கே.பிரசாத் எழுதிய ‘சர்வ சம்பவம்’ என்ற நூலுடைய ஒரு பகுதியின் சுருக்கமான தமிழாக்கம். ஆங்கிலக் கட்டுரை பல இணையத்தளங்களில் வந்திருக்கிறது. அவற்றில் ஒரு தளம் இது:- http://www.amazingtruelifestories.com/stories-
about-god/an-incident-that-earned-m-s-subbulakshmi-the-bharat-ratna/)

தமிழாக்கம் இந்தக் கட்டுரை ஆசிரியர்.

–அடுத்த இதழில் ‘பார்த்ததில் ரசித்தது’…

About The Author