பார்த்ததில் ரசித்தது! படித்ததில் பிடித்தது!! (10.1)

வேதக் கணிதம் கண்ட ஸ்ரீபாரதி கிருஷ்ண தீர்த்த சங்கராசார்ய ஸ்வாமிகள் – 1

கணிதம் என்றாலே கசக்கிறது என்று கூறும் அனைவருக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமைவது வேதக் கணித முறை. பிரம்மாண்டமான, சிக்கலான எண்களைக்k கூட்டுவது, பெருக்குவதிலிருந்து அனைத்துக் கணிதங்களையும் மிகச் சுலபமாகச் செய்ய வழி வகைகளைத் தருகிறது வேதக் கணித முறை.

Shankaracharya Swamigalஇந்த முறையால் கவரப்பட்ட மேலை நாடுகள் இப்போது இதைத் தங்கள் வழிமுறையாக ஆக்கிக் கொண்டு பயன் அடைந்து வருகின்றன. நாஸா தனது செயற்கை அறிவுத் துறையில் இதைப் பயன்படுத்துகிறது என்பது ஒரு சுவையான செய்தி!

மஹரிஷி மகேஷ் யோகி இதை உலகெங்கும் பரப்ப வகை செய்தார். அவரைப் போலவே ஏராளமானோர் வேதக் கணிதத்தை அங்கீகரித்துத் தங்கள் வழிமுறையாக ஆக்கிக் கொண்டு பரப்பி வருகின்றனர்.

இப்போது பிரபலமாக இருக்கும் வேதக் கணிதம் பிறந்த வரலாறு சுவையான ஒன்று. பூரி கோவர்த்தன பீட மடத்தை அலங்கரித்த ஜகத்குரு ஸ்ரீபாரதி கிருஷ்ணதீர்த்த மஹராஜ் சங்கராசார்ய ஸ்வாமிகள்தான் ‘வேதக் கணிதம்’ என்ற அற்புதமான நூலை இயற்றி உலகையே அதிசயிக்க வைத்தார். இதில் 16 அடிப்படை சூத்திரங்களும், 13 துணை சூத்திரங்களும் உள்ளன.

ஸ்வாமிஜியின் வாழ்க்கை வரலாற்றை அவரது பிரதம சீடர்களில் ஒருவரான திருமதி. மஞ்சுளா பென் சித்தரித்துள்ளார். அவரது இயற்பெயர் வெங்கட்ராமன். அவர் 1884ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிறந்தார். அமெரிக்காவில், நியூயார்க்கில் ரோசெஸ்டரில் உள்ள ‘அமெரிக்கன் காலேஜ் ஆஃப் ஸயின்ஸில்’ சம்ஸ்கிருதம், தத்துவம், ஆங்கிலம், கணிதம், வரலாறு, அறிவியல் ஆகிய ஏழு பாடங்களில் மிக அதிக மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ந்தார். பேராசிரியர் வெங்கட்ராமன் ‘சரஸ்வதி’ என்ற பெயரில் ஸ்ரீகோபாலகிருஷ்ண கோகலேயின் கீழ் தன் பொது வாழ்வைத் தொடங்கினார். அத்யாத்ம வாழ்க்கையில் ஈடுபாடு கொண்ட அவர் 1908ஆம் ஆண்டு சிருங்கேரி மடத்திற்குச் சென்றார். அங்கு ஜகத்குரு ஸ்ரீசச்சிதானந்த சிவாபினவ ந்ருஸிம்ஹ பாரதி ஸ்வாமிகளின் அடி பணிந்தார்.

அப்போது 1908ஆம் ஆண்டு வாக்கில் தேசியத் தலைவர்களின் கட்டளைக்கு இணங்க ராஜமஹேந்த்ரியில் புதிதாகத் துவங்கப்பட்ட நேஷனல் காலேஜின் பிரின்ஸிபாலாகப் பதவி ஏற்றார். ஆனால் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் சிருங்கேரி ஆசார்யாரிடமே வந்து சேர்ந்தார்.

அடுத்த எட்டு ஆண்டுகள் அவர் வேதாந்த தத்துவ விசாரத்தில் தீவிர ஈடுபாடு கொண்டு பிரம்ம சாதனையில் ஈடுபட்டார். 1919ஆம் ஆண்டு காசியில் சந்யாச ஆசிரமம் மேற்கொண்டு ஸ்வாமி பாரதி கிருஷ்ண தீர்த்தர் என்ற பெயருடன் சந்யாசியானார். 1921இல் அவர் சாரதா பீட சங்கராசார்யர் ஆனார். 1925இல் பூரிக்குச் சென்று கோவர்த்தன மட பீடத்தின் அதிபதி ஆனார். (ஸ்வரூபானந்தர் சாரதா பீடாதிபதியாக ஆனார்). 1953ஆம் ஆண்டு நாக்பூரில் ஸ்ரீவிஸ்வ புனர் நிர்மாண சங்கம் என்ற நிறுவனத்தை அவர் ஆரம்பித்தார்.

சிருங்கேரி காடுகளில் 1911ஆம் ஆண்டு முதல் 1919ஆம் ஆண்டு முடிய எட்டு ஆண்டுகள் கடின தவத்தை மேற்கொண்டபோது அவர் வேதங்களை ஆராய்ந்து அதிலிருந்து கண்டுபிடித்த கணித முறையே ‘வேதக் கணிதம்’. அதர்வண வேதத்திலிருந்து இதைத் தாம் அறிந்ததாக அவரே கூறியுள்ளார். கஷ்டப்பட்டு அவர் எழுதி வைத்த சூத்திரங்கள் தீக்கு இரை ஆயின என்று பொதுவாகக் கூறப்படுகிறது.

ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்பதை டாக்டர் என்.எம்.கன்ஸாரா எழுதிய கட்டுரையிலிருந்து அறிகிறோம்.

சிறிய, பள்ளி நோட்டுப்புத்தகங்களில் அவர் தனது குறிப்புகளை எழுதி வைத்திருந்தார். 1937 ஆண்டு வாக்கில் கபத்வஞ்ஜ் என்ற இடத்திற்கு அவர் சென்றபோது லேவாதேவியில் பணம் கொடுக்கும் தேசாய் என்பவரிடமிருந்து ஒரு தொகையை அவர் பெற்றார். அதற்கு ஈடாகத் தமது வேதக் கணித நோட்டுப்புத்தகங்களை அவரிடம் தந்தார். அவை பத்திரமாக டின் பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்தன. வாங்கிய தொகையை அவரால் திருப்பித் தர முடியாத சூழ்நிலையில் தேசாயிடமிருந்து வேதக் கணித டின் பெட்டிகள் அவரது மகனான லக்ஷ்மிநாராயண் வசம் இருந்தன.

இப்படி வேதக் கணித நோட்டுப்புத்தகங்கள் இருந்தை அறிந்த புரபஸர்.சானே என்னும் ஆர்வலர் குஜராத் அரசின் போலீஸ் துறையைத் தொடர்பு கொண்டு அவர்கள் மூலமாக அகமதாபாத்தில் இருந்த லக்ஷ்மிநாராயணனைக் கண்டுபிடித்தார். ஆனால் பெட்டிகளைத் திறந்து பார்த்தபோது ஒன்றுக்கும் உதவாத குப்பைக் காகிதங்களே விழுந்தன.

வேதக் கணித நோட்டுப் புத்தகங்கள் இருப்பதை அறிந்த ஒரு ஜெர்மானிய அறிஞர் அவற்றை 80000 ரூபாய் கொடுத்து வாங்கிக் கொண்டு சென்ற விவரம் அப்போதுதான் தெரிய வந்தது. துரதிர்ஷ்டவசமாக அவர் யார் என்பதும் தெரியவில்லை. நோட்டுப்புத்தகங்களும் கிடைக்கவில்லை.

இதற்கிடையில் சங்கராசார்யரின் வேதக் கணித முறைகளை அவர் பல கூட்டங்களில் தெரிவித்ததை அறிந்து கொண்ட சிலர் அதைத் தாங்களே கண்டுபிடித்ததைப் போலப் பரப்பலாயினர். இதனால் சங்கராசார்யரிடம் அவரது சீடர்கள் அனைத்துச் சூத்திரங்களையும் அவரே வெளியிட வேண்டுமென்று பிரார்த்தித்தனர்.

1957இல் சங்கராசாரியர் அமெரிக்கப் பயணத்தை மேற்கொண்டார். இப்படி ஒரு பயணத்தை மேற்கொண்ட சங்கராசாரியர் இவர் ஒருவரே! அவரது மேதைத் தன்மையை மேலை உலகம் கண்டு வியந்தது! அப்போதுதான் வயதான நிலையிலும், கண் பார்வை மிக மங்கியிருந்தும் கூடத் தன் நினைவிலிருந்த சூத்திரங்களை அப்படியே சுருக்கமாக ஒன்றரை மாதங்களில் ஒரு புத்தகமாக எழுதினார்.

(தொடரும்…)

About The Author