பார்த்ததில் ரசித்தது! படித்ததில் பிடித்தது!! (11)

‘ப்ளட் ஸ்போர்ட்’

1988ஆம் ஆண்டு வெளியான ‘ப்ளட் ஸ்போர்ட்’ ஒரு வித்தியாசமான ஹாலிவுட் படம்! ப்ராங்க் டபிள்யூ டக்ஸ் என்ற உலக ஹெவி வெய்ட் சாம்பியனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கதை; எடுக்கப்பட்ட படம்.

Bloodsport1975ஆம் ஆண்டு முதல் 1980 முடிய சுமார் 329 பந்தயங்களில் பங்கு கொண்ட வீரர் டக்ஸ், ஒரு முறை கூடத் தோற்றதில்லை! வோர்ல்ட் ஹெவி வெய்ட் ஃபுல் காண்டாக்ட் குமைட் சாம்பியனாகவே அவர் ஓய்வு பெற்றார் என்பது ஒரு அதிசயமான உண்மை!!

இது வரை அவரது நான்கு ரிகார்டுகள் முறியடிக்கப்படவில்லை!!!

1) அதிவேக நாக் அவுட் – 3.2 விநாடிகள்
2) அதிவேக நாக் அவுட்டுடன் கூடிய பஞ்ச் – 4.2 விநாடிகள்
3) அதிவேக நாக் அவுட்டுடன் கூடிய கிக் – மணிக்கு 72 மைல் வேகம்
4) ஒரு சிங்கிள் டோர்னமெண்டில் தொடர்ந்த நாக் அவுட்டுகள் -56

இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் வான் டாம்! (1988இல் மிக இளம் வயதில்) நல்ல உடற்கட்டுடன் கூடிய அழகிய நடிகரான வான் டாமுக்கென்றே ஒரு ரசிகர்கள் கூட்டம் உண்டு. அவர்களுக்கு வான் டாமின் குமைட் சண்டை கண்ணுக்கு நல்ல விருந்தாக அமைந்தது.

92 நிமிடங்கள் ஓடும் இந்தப் படம் ஹாங்காங்கிலும் சீனாவிலும் படமாக்கப்பட்டது. செலவு சுமார் 15 லட்சம் டாலர். ரசிகர்கள் கொடுத்த அமோக ஆதரவினால் வசூல் வரவு ஒரு கோடியே பதினெட்டு லட்சத்து ஆறாயிரம் டாலர்!

ப்ராங்க் டக்ஸ் கராத்தேயில் ஒரு வகையான குமைட் (Kumite) குத்துச் சண்டையில் போட்டியாளராகக் கலந்து கொண்டு வாகை சூடுவது தான் கதை! இந்தப் போட்டியில் பங்கு கொள்வோர் படுகாயப்படுத்தப்படுவார்கள்; சில சமயம் கொல்லவும் படுவார்கள். டக்ஸின் ராணுவ மேலதிகாரிகள் அவரைப் போட்டியில் ஈடுபடவிடாமல் செய்ய இரு அதிகாரிகளை அனுப்புகின்றனர். ஆனால் டக்ஸோ அவர்களிடமிருந்து நழுவுகிறார், ஹாங்காங் செல்கிறார். அங்கு போட்டியில் கலந்து கொண்டு வெல்கிறார்.

கராத்தே மற்றும் குத்துச் சண்டைப் பிரியர்களுக்கும் அடிதடி சண்டையில் ஆர்வம் உள்ளவர்களுக்கும் இந்தப் படம் ஒரு விருந்து. The Secret Man: An American Warrior’s Uncensored Story என்ற தலைப்பில் டக்ஸ் தனது சுயசரிதத்தை எழுதியுள்ளார். கனடாவில் டோரோண்டோவில் 1956ஆம் ஆண்டு பிறந்தவர் டக்ஸ். அவரது குடும்பம் ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளில் கலிபோர்னியாவில் குடியேறியது. அங்குதான் தேர்ந்த நிபுணர்களிடமிருந்து இந்தக் கலையைக் கற்றார் அவர். இவர்களில் குறிப்பிடத் தகுந்த நிபுணர் சான்ஸோ டைகர் டனாகா.

குமைட் என்பது கைகளினாலும் கை முஷ்டியினாலும் சண்டையிடும் குத்துச் சண்டை. எதிராளிகள் நிற்கும் தூரத்தைக் கணித்தும் அவர்களின் அசைவுகளைக் கண்காணித்தும் நுணுக்கமாகச் சண்டையிட வேண்டிய அபாரமான கலை இது! பாக்ஸிங் போலவே குமைட்டும் ரிங்கினுள் விளையாடப்படும் ஒரு சண்டை. இது பஹாமாவில் ஒரு தனியார் இல்லத்தில் நடைபெற்ற வீர விளையாட்டு. ஆனால் படத்திலோ ஹாங்காங்கில் நடைபெறுவதாக மாற்றப்பட்டது.

இது போன்ற நுணுக்கமான சண்டைப்படங்களில் தனியிடம் பெறும் ஒரே படம் இதுதான் என்று குத்துச் சண்டை நிபுணர்களிடம் பெரும் பாராட்டை ப்ளட் ஸ்போர்ட் பெற்றது. ப்ரூஸ் லீயின் ‘என்டர் தி ட்ராகன்’ ரசிகர்களையும் இது வியக்க வைத்தது!

நிஜ வாழ்க்கையில் ப்ராங்க் டக்ஸ் 2010ஆம் ஆண்டில் ஃபெடரல் லா என்போர்ஸ்மெண்ட் ஆபீஸர்ஸ் அசோஷியேஷனின் வருடாந்திரக் கூட்டத்தில் பிரதான பேச்சாளராக அழைத்துக் கௌரவிக்கப்பட்டார். உலகின் பிரம்மாண்டமான ராணுவப் படைகளுக்குப் பயிற்சி அளிக்குமாறு அவர் அழைக்கப்படுவது குறிப்பிடத் தகுந்த ஒரு விஷயம்.

கராத்தே மற்றும் இதர வீர விளையாட்டுக்களில் ஆர்வம் உள்ள ரசிகர்கள் பார்க்க வேண்டிய படம் இது! ஆர்வத்துடன், எந்த ஒரு விஷயத்திலும் முன்னேற வேண்டும் என்று துடிப்பவர்களுக்கு எப்படிப்பட்ட ஒருமுனைப்பட்ட பயிற்சி வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுக்கும் படமும் இதுதான்! அந்த வகையில் இது எல்லோரும் பார்க்க வேண்டிய படமாகவும் ஆகிறது!

***************

அடுத்த வாரம் ‘படித்ததில் பிடித்தது’…

About The Author