பார்த்ததில் ரசித்தது! படித்ததில் பிடித்தது!!-22.3

Kasthuri with Bhagavan shri Baba
பகவான் ஸ்ரீ பாபாவுடன் கஸ்தூரியைப் படத்தில் காணலாம்.

பக்தர்களின் அனுபவங்களிலிருந்து ஏராளமான சம்பவங்களை ‘லவிங் காட்’ புத்தகத்தில் தொகுத்துத் தந்திருக்கிறார் கஸ்தூரி. அனைத்துமே சுவையானவை. சில இங்கே!

1971ஆம் ஆண்டு. அமெரிக்காவில் சாண்டியாகோவைச் சேர்ந்த பிரபல சைக்கியாட்ரிஸ்டான டாக்டர்.சாமுவேல் சாண்ட்விஸ் பாபாவின் புகழைக் கேட்டு இந்தியாவிற்கு வரத் தீர்மானித்தார். அங்கு நடக்கும் அற்புதங்களைப் பார்த்துத் திகைத்துப் போனார்.

"ஆச்சரியம்! நம்பமுடியாதது! நினைத்துப் பார்க்கவே முடியாதது! மனதை உலுக்கும் அசாதாரணமான அனுபவம் – கற்பனைக்கெல்லாம் கற்பனையான விஞ்ஞான நாவல் நிஜமாகி விட்ட்து போல!" என்றார் அவர். "PSYCHIYATRY-யே இல்லை! இனி உலகை SAICHIATRY-யே ஆளும்!" என்று எழுதினார் அவர்.

டாக்டர் கார்லிஸ் ஓஸிஸ் என்பவர் அமெரிக்கன் சொஸைடி ஃபார் சைக்கிக் ரிஸர்ச் நிறுவனத்தின் டைரக்டர். அவர் பாபாவின் அனுமதி பெற்று அவரை நெருங்கி இருந்து ஆராய ஆரம்பித்தார். கையை அசைத்து விபூதியை வரவழைத்து அவருக்கும் ஹரால்ட்ஸன் என்ற விஞ்ஞானிக்கும் பாபா தந்தார். ஓஸிஸுக்கு ஒரு தங்க மோதிரத்தை வரவழைத்துக் கொடுத்தார். இரு விஞ்ஞானிகளும் பல நாட்கள் தங்கி பாபாவை ஆராய்ந்தனர். அதிசயித்தனர்!

ஆர்னால்ட் ஷுல்மன் என்ற பிரபல ஹாலிவுட் திரைக்கதை ஆசிரியர் பாபாவிடம் வந்தார். அவர் பாபாவிடம் அவரைப் பற்றிய உண்மையைத் தெரிவிக்குமாறு வேண்டினார். "ஒரு மீன் வானத்தைப் புரிந்து கொள்ள முடியுமா?" என்று அவரிடம் வினவினார் பாபா. இப்படிப் பல பக்தர்களின் அனுபவங்களைத் தெளிவாக எழுதியுள்ள கஸ்தூரி தன்னைப் பற்றியும் சொல்லாமல் இல்லை. 

"என்னைச் செதுக்கி அழகிய சிலையாக மாற்றும் வரை ஸ்வாமி விடவில்லை" என்றார் கஸ்தூரி.

1959ஆம் ஆண்டு, ஒருநாள் பாபா கஸ்தூரியைக் கூப்பிட்டு அனுப்பினார். ஹைதராபாத்திலிருந்த ஒரு தினசரிப் பத்திரிக்கையின் ஆசிரியர், சனாதன சாரதியின் ஆசிரியர் கஸ்தூரி என்று அவரது புகைப்படத்தை வெளியிட விரும்புவதாகவும் அதற்குத் தானும் ஒப்புக் கொண்டதாகவும் கூறிய பாபா ஒரு போட்டோ எடுக்கத் தயாராகும்படிக் கஸ்தூரியிடம் கூறினார். போட்டோ எடுக்க ஒரு புது காமரா தயாராக இருப்பதாகவும் பாபா தெரிவித்தார். எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தார் கஸ்தூரி. முகத்தை நன்கு ஷவரம் செய்து கொண்டார்.

நல்ல உடைகளை அணிந்து கொண்டு போட்டோவுக்காக மலர்ந்த முகத்துடன் வந்தார்.

"ஆஹா! போட்டோ எடுக்கத் தகுந்த முகம்" என்று புகழ்ந்த பாபா, "ரெடியா! ஸ்டெடி" என்று கூறி காமராவை க்ளிக் செய்தார். உள்ளிருந்து கறுப்பாக ஏதோ ஒன்று வெளிப்பட்டு அவர் மேல் விழ, ‘க்றீச்’ என்ற சப்தத்துடன் அவர் அதை உதற, அது காமராவிலிருந்து வெளிப்பட்ட, துணியால் ஆன எலியாய் இருந்தது! பாபா செய்த கிண்டல் இது. அவர் சிரிக்க, கஸ்தூரியும் வெட்கத்துடன் சிரித்தார்.

பிறகு ஸ்வாமி, "உனக்குச் சிறிதும் கர்வம் கூடாது என்பதற்காக, நான் வேடிக்கை செய்தேன்" என்றார். "நாளைய வேஸ்ட் பேப்பராக மாறக்கூடிய இன்றைய நியூஸ் பேப்பர் மூலம் கிடைக்கும் புகழ், புகழே அல்ல! கடவுளுக்கு அர்ப்பணித்துச் செய்யும் ஒவ்வொரு செயலும் உண்மையான புகழை அடக்கமாகக் கொண்டுள்ளதாகும்" என்று அருளினார் பாபா! இப்படிப் படிப்பினைகள் பற்பல! ரொட்டி மாவைப் பிசைவது போலப் பிசைந்து, அடித்து, முறுக்கி, நெருப்பிலிட்டு வாட்டி, வதக்கிச் சுடச் சுட ஒளிரும் பொன் போல அவரை பாபா ஒளிர வைத்தார்.

நூலின் இறுதி அத்தியாயத்தின் இறுதி வரிகளில் கஸ்தூரி தன் உள்ளத்தை வெளிப்படுத்துகிறார் இப்படி:-

"புனித புட்டபர்த்திவாஸி
பெருங்கருணைப் பேராளன்
உன்னை எப்போதும் பாதுகாப்பான்!
உன் கரங்களைப் பற்றிக் கொண்டு
உன்னை எங்கும் எப்போதும் பாதுகாப்பான்!
அறிந்து கொள் இதை! ஓ, பக்தனே!
இதனை என்றும் மறவாதே!"

இப்படி அற்புதமாகத் தன் அனுபவங்களை எழுதியுள்ள கஸ்தூரியின் இறுதி எப்படி நிகழ்ந்தது?

1987ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி. ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி தினம். கல்லூரி அரங்கில் மாணவர்கள் நிகழ்ச்சி ஒன்றில் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த பகவான், 11.30 மணிக்குத் திடீரென்று அந்த நிகழ்ச்சியை விட்டுவிட்டு மருத்துவமனைக்கு விரைந்தார்.

அங்கே படுக்கையிலே நினைவிழந்த நிலையில் இருந்தார் கஸ்தூரி. அவரை நெருங்கி "கஸ்தூரி!" என்று அன்புடன் அழைத்தார் பாபா.

அவர் கண்ணை ஒரு கணம் திறந்தார். எந்தத் தரிசனம் தன் இறுதி விநாடியில் ஏற்பட வேண்டும் என்று வாழ்நாள் முழுதும் துதித்து வேண்டினாரோ அந்தத் தரிசனத்தைக் கண்ணாரக் கண்டார். உடனே பகவான் தன் தெய்வீகக் கரத்தால் விபூதியை சிருஷ்டித்து அதை அவர் வாயிலிட, கஸ்தூரி கண்களை மூடினார். வெளியில் இருந்தவர்களிடம் பாபா, "ஏற்பாடுகளைக் கவனியுங்கள்" என்றார். கஸ்தூரியின் தகனக் கிரியை பின்னர் நடந்தது.

அருமையான இந்தப் புத்தகத்தை சாயி அன்பர்களும் இறை நாட்டத்தைக் கொண்டுள்ள அனைவரும் படித்து மகிழலாம். பிரசாந்தி நிலைய வெளியீடான இந்தப் புத்தகத்தின் விலை உள்ளிட்ட விவரங்களைப் பெற விரும்புவோர் கீழ்க்கண்ட இணையத்தளத்தை நாடலாம்:

http://www.saibaba.ws/articles1/saibooklist.htm

–அடுத்த வாரம் ‘பார்த்ததில் ரசித்தது’…

About The Author