பார்த்ததில் ரசித்தது! படித்ததில் பிடித்தது!! – 24

அனுதினமும் ரமணருடன்! – 1

திருவண்ணாமலையிலிருந்து உலகெங்குமுள்ள ஆன்மிகவாதிகளுக்கு அன்றும் இன்றும் அருள் பாலித்து வருபவர் பகவான் ரமண மஹரிஷி. அவர் வாழ்ந்த காலத்தில் அவரது அணுக்கத் தொண்டர்களில் பலர், ஆசிரமத்தில் அன்றாடம் நடப்பதைத் தொகுத்து நினைவலைகளாகவும், நாட்குறிப்புகளாகவும், கடிதங்களாகவும் எழுதி வைத்துள்ளனர். அந்தத் தொகுப்பிலிருந்து சில துளிகளைப் பார்ப்போம்!

பகவானை உலகெங்கிலுமிருந்து வந்து சந்தித்த பாக்கியவான்கள் பலர். 1935ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் தேதி திருவண்ணாமலைக்கு வந்து அவரைச் சந்தித்த டக்ளஸ் அய்ன்லி அவர்களில் ஒருவர். அவருக்கு வயது 70. பிரபல எழுத்தாளர் பால் பிரண்டனிடமிருந்து அறிமுகக் கடிதம் ஒன்றை அவர் கொண்டு வந்திருந்தார். முன்னாள் மதராஸ் கவர்னரின் உறவினர் அவர். ஒரு கவிஞர். எழுத்தாளர். சர் ஜான் உட்ராஃப், சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் போன்ற பிரபல அறிஞர்களின் நண்பரும் கூட. இரு நாட்கள் ரமணரின் முன் அமர்ந்திருந்த அவர் உற்று அவரைத் தரிசித்த வண்ணமே இருந்தார். வேதங்களை இசைக்கக் கேட்டார்.

அவரைப் பற்றிப் பின்னால் மஹரிஷி குறிப்பிடும்போது, "70 வயது நிரம்பிய, வயதான அவரை நினைத்துப் பாருங்கள்! சொந்த வீட்டில் தான் சம்பாதித்த வருமானத்தை வைத்துக் கொண்டு அமைதியாய் அவரால் இருக்க முடியவில்லை. அவரது ஆர்வம் எவ்வளவு தீவிரமாய் இருக்க வேண்டும்! தனது சொந்தத் தேசத்தை விட்டுவிட்டு 6000 மைல்கள் கடல் பயணத்தைத் தைரியமாக மேற்கொண்டு, அயல் தேசத்தில் ரயில் பயணங்களில் உள்ள சிரமங்களை எதிர்கொண்டு, மொழி புரியாமல், தனிமையான வாழ்க்கையை மேற்கொண்டு, வெப்பமான தட்பவெப்ப நிலையையும், தனக்குப் பரிச்சயமில்லாத சுற்றுப்புறங்களையும் சகித்துக்கொண்டு அவர் இங்கு வந்திருக்கிறார். தனது வீட்டிலேயே அவர் சந்தோஷமாக இருந்திருக்கலாமே! மன சாந்திக்கான ஏக்கமே அவரை இங்கு வரவழைத்திருக்கிறது."என்றார்.

இதே போலத் திருவண்ணாமலைக்கு 1935, ஜனவரி 24ஆம் தேதி வந்த டபிள்யூ.ஒய்.ஈவான்ஸ் வென்ஸைக் கூறலாம். இவரும் பால் பிரண்டனிடமிருந்து அறிமுகக் கடிதத்துடன் வந்திருந்தார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக அறிஞரான அவர், தியானம் செய்ய உகந்த நேரம் எது என்று ரமணரிடம் கேட்டார். நேரம் என்றால் என்ன என்று பதில் கேள்வி கேட்டார் ரமணர். காலத்தைப் பற்றி அவரையே விளக்குமாறு ஈவான்ஸ் கூற, அற்புதமாகக் காலத்தைப் பற்றிப் பகவான் விளக்கினார்.

"காலம் என்பது ஒரு கருத்துதான். உண்மை (ரியாலிடி) எதாக நீ நினைக்கிறாயோ அதாகத் தோன்றுகிறது. அதைக் காலம் என்று கூறினால் அது காலம்தான்! அதை இருக்கை (எக்ஸிஸ்டென்ஸ்) என்று கூறினால் அது இருக்கைதான். காலம் என்று கூறி விட்ட பின்னர் அதைப் பகல்களாக, இரவுகளாக, மாதங்களாக, வருடங்களாக, மணிகளாக, நிமிடங்களாகப் பிரிக்கிறோம். காலம் என்பது ஞானம் அடைவதற்கான வழியில் ஒரு பொருட்டே இல்லை. ஆனால் உகந்த நேரம் எது என்பதில் சில விதிகள் இருப்பது ஆரம்ப சாதகர்களுக்கு நல்லதுதான்!"

1935 ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி. ஒரு சாதகர் சாதுரியமான கேள்வி ஒன்றைக் கேட்டார் இப்படி:- "நீங்கள் பகவான். ஆகவே நான் எப்போது ஞானம் பெறப் போகிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். எப்போது நான் ஞானி ஆவேன். சொல்லுங்கள்?"

பகவான் அருளினார் இப்படி: "நான் பகவான் என்றால் ஆத்மாவைத் தவிர ஞானி என்றோ அஞ்ஞானி என்றோ (இரண்டாவதாக) வேறொன்றுமில்லை. நான் பகவான் இல்லையென்றால் உங்களைப் போலத்தான் நானும். ஆகவே உங்களுக்கு எவ்வளவு தெரியுமோ அவ்வளவுதான் எனக்கும் தெரியும். ஆக எப்படிப் பார்த்தாலும் உங்கள் கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியாது." கேள்வி கேட்டவர் திகைத்தார்.

வர்கீஸ் கல்லூரியைச் சேர்ந்த தெலுங்குப் பண்டிதரான ரங்காச்சாரி, பகவானிடம் ‘நிஷ்காம்ய கர்மம்’ என்றால் என்ன என்று கேட்டார். பதிலே வரவில்லை. கொஞ்ச நேரம் கழித்துப் பகவான் மலை மீது நடக்கலானார். பண்டிதர் உட்பட அனைவரும் அவரைப் பின் தொடர்ந்தனர். அங்கு முள் நிரம்பிய ஒரு கம்பு வழியில் கிடந்தது. பகவான் அதைக் கையில் எடுத்துக் கொண்டார். முட்கள் அனைத்தையும் நீக்கினார். அதில் இருந்த முடிச்சுகளைப் போக்கி இலை ஒன்றினால் தேய்த்து அதை வழவழப்பாக்கினார். சுமார் ஆறு மணி நேரம் தொடர்ந்து இப்படிச் செய்த பின்னர் மழமழப்புடன் கூடிய அருமையான கழியாக அது மாறியது. அற்புதமாக ஆன அந்தக் கழியைப் பார்த்து அனைவரும் ஆச்சரியப்பட்டனர். அப்போது ஒரு ஆட்டிடையன் அந்த வழியில் வந்தான். அவனுடைய கம்பு தொலைந்து விட்டதால் என்ன செய்வதென்று தெரியாமல் அவன் விழித்துக் கொண்டிருந்தான். பகவான் உடனே தன்னிடம் இருந்த அந்தக் கழியை அவனிடம் தந்தார். மேலே நடக்கலானார். தன்னுடைய கேள்விக்கு நேரடியான, செயல் மூலமான விளக்கம் கிடைத்து விட்டதென்று கூறிப் பண்டிதர் மகிழ்ந்தார்.

இப்படி ஏராளமான சம்பவங்களையும் சந்தேக விளக்கங்களையும் இந்த நூல் முழுவதும் காணலாம். இன்னும் சிலவற்றைப் பார்ப்போம்!

-தொடரும்…

About The Author