பாவம் போக்கும் சேது!

தொன்று தொட்டு இருந்து வரும் சேதுவில் பாவங்களைத் தீர்க்கும் பரிகாரம் செய்து கொள்ளலாம் என ஸ்மிருதிகளும், அற நூல்களும், சோதிட நூல்களும் அறுதியிட்டு உறுதி கூறுகின்றன.

அனைவரும் போற்றும் மனு ஸ்மிருதி கீழ்க்கண்டவாறு கட்டளை இடுகிறது:

"குருவின் அனுமதி பெற்று ஒருவன் வெகு சீக்கிரம் தனுஷ்கோடி செல்ல வேண்டும். ஒரு மாதம் ஒவ்வொரு நாள் காலையிலும் (சேதுவில்) குளித்தால் ஒரு அந்தணன் சுத்தியை அடைவான்."

இவ்வாறு சேதுவில் குளிப்பதாலேயே அனைத்து பாவங்களும் தீர்ந்து பரிசுத்தமாகலாம் என மனு ஸ்மிருதி கூறுகிறது.

காலவ ஸ்மிருதி சேதுவில் குளித்தால் முக்தியையே அடையலாம் எனக் கூறுகிறது.

"கங்கை, சேது, ப்ரயாகை, கங்கையின் தோற்றுவாய், கோதாவரி, கிருஷ்ணா, காவேரி, மஹாநதி ஆகியவை கடலில் கலக்கும் இடங்கள் ஆகியவற்றை ஒரு பார்வை பார்த்தாலே போதும், சுவர்க்கம் கிடைக்கும்; அவற்றில் குளித்தாலோ பூரண முக்தியே கிடைக்கும்."

கௌதம ஸ்மிருதி பின் வருமாறு கூறுகிறது:

"காமத்தினால் வழி தவறி கீழ் நிலையில் உள்ள பெண்ணுடன் தகாத உறவு கொண்டால், அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்ட பின்னர் சுத்தியை அடைய விரும்பினால் தனுஷ்கோடியில் ஒரு மாதம் ஒவ்வொரு நாள் காலையும் நீராடினால் மட்டுமே சுத்தியை அடைய முடியும்."

"விஷ்ணுவின் பாதத்திலிருந்து பீறிட்டெழும் கங்கை, மனிதர்களுக்கு பத்து மடங்கு புண்ணியம் தரும். அதே போல்தான் யமுனை நதியும்! கோதாவரியும், கிருஷ்ணாவும் ஒன்பது மடங்கு புண்ணியம் தரும். பெண்ணாறும், காவேரியும் எட்டு மடங்கு புண்ணியம் தரும். பாடினியும், தாமிரபருணியும் ஒன்பது மடங்கு புண்ணியம் தரும். துங்கபத்திரையும், பீமா நதியும் ஏழு மடங்கு புண்ணியம் தரும். வஞ்சுளாவும், பவநாசியும் ஆறு மடங்கு புண்ணியம் தரும். தனுஷ்கோடியோ 160 மடங்கு புண்ணியத்தை ஒரு தடவை குளித்தாலே தரும்!"

தேவல ஸ்மிருதி கீழ்க்கண்டவாறு கூறுகிறது:

"தென்கிழக்கு திசையில் எல்லா தீர்த்தங்களின் புண்ணியங்களையும் ஒன்று சேர்த்துத் தருகின்ற கந்தமாதன பர்வதமும் ராமலிங்க-தனுஷ்கோடியும் உள்ளன."

மரீசி ஸ்மிருதி, நாத்திக வாதம் பேசி புனித தலங்களுக்குச் செல்லாதவர்கள் அடையும் பிறவியைக் கீழ்க்கண்டவாறு வர்ணிக்கிறது:

"நாத்திக மனத்தைக் கொண்டு அதனால் தனது 60 வயது வரை ஸ்ரீசைலம், திருப்பதி, காஞ்சிபுரம், ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி ஆகிய இடங்களுக்குச் செல்லாத ஒருவன் அடுத்த பிறப்பில் கழுதையாக இந்த பூமியில் பிறப்பான்."

பராசர ஸ்மிருதி 12ம் காண்டம் 64-வது செய்யுளில் ஆரம்பித்து கீழ்க்கண்டவாறு கூறுகிறது:
"நான்கு வித்தைகளிலும் தேர்ச்சி பெற்ற ஒருவன், பிரம்மஹத்யா பாவத்தைச் செய்த ஒருவனை பாவத்தைப் போக்கிக் கொள்ள சேதுவிற்கு யாத்திரை செல்லுமாறு சொல்ல வேண்டும். பத்து யோஜனை அகலமும் நூறு யோசனை நீளமும் கொண்ட, ராமர் ஆணையினால் நளன் கட்டிய, சேதுவை ஒரு பார்வை பார்த்தாலே அந்தணனைக் கொன்ற பாவம் போகும்; தூய மனதுடன் சேதுவைப் பார்த்துக் கடலில் குளிக்க வேண்டும்."

இப்படிப் பாவம் போக்கும் சேதுவை முனிவர்கள், யோகிகள், ஞானிகள், ரிஷிகள் ஆகியோர் போற்றிப் புகழ்ந்து வணங்கித் துதித்து பெரும் பேறு பெற்றுள்ளனர்; பெற்று வருகின்றனர் என நமது அற நூல்கள் தெரிவிக்கின்றன!

இந்த வழியில் நாமும் சேது யாத்திரை மேற்கொண்டு சேதுவை தரிசித்து தூய மனதுடன் சேது ஸ்நானம் செய்து பெரும் பலனைப் பெறுவோமாக!

About The Author