மலையிலே… மலையிலே (1)

"ஷேம் ஷேம், அம்மா ரோகிணிக்கு க்ளோப்னா என்னன்னு தெரியலம்மா" ரோகிணியைக் கேலி செய்தாள் அக்ஷயா. ஒன்பது வயது ரோகிணிக்கு முகம் வாடிப் போனது.

அக்ஷயா ரோகிணியின் சித்தி மகள். இருவருக்கும் ஒரே வயதுதான். அக்ஷயா சென்னையில் வசிக்கிறாள். விடுமுறைக்காக அவளும் அவள் அம்மாவும் ரோகிணியின் கிராமமான மாங்குடிக்கு வந்திருக்கிறார்கள். வந்து ஒரு வாரம் ஆகியிருந்தது. இப்படித்தான் எதற்கெடுத்தாலும் அக்ஷயா ரோகிணியைக் கேலி செய்து கொண்டே இருக்கிறாள். ரோகிணியின் உடை, ஒப்பனை, உச்சரிப்பு என்று எதைப் பார்த்தாலும் அக்ஷயாவுக்குக் கிண்டல்தான்.

"மம்மி, லுக் அட் ஹர் •பேஸ். அவள் முகத்தில வழியிற எண்ணையை பாட்டில்ல பிடிக்கலாம்"

"மம்மி, ரோகிணி பௌலிங்க் போனதே இல்லையாம். அவளுக்கு பௌலிங்க்னா என்னன்னே தெரியலே"

"ரோகிணி, உனக்கு இங்கிலீஷே தெரியலை. யு ஆர் ஸ்டுபிட்"

இப்படியேதான் எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கிறாள்.

ஆனால் ரோகிணிக்கு மட்டுமல்ல அந்த ஊர் குழந்தைகளுக்கே அக்ஷயாவை மிகவும் பிடிக்கும். அவளின் நாகரீகமான உடைகளும் ஸ்டைலான பேச்சும் அவள்பால் அவர்களுக்கு ஒரு பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தின. அக்ஷயா வந்துவிட்டால் போதும், பிள்ளைகளெல்லாம் அவளைப் பார்ப்பதற்கென்றே ரோகிணியின் வீட்டுக்கு வருவார்கள். அவர்களுக்குத் தெரியாத பல விஷயங்களை அவள் விவரிப்பதை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

அக்ஷயாவுக்கு அதில் மகா பெருமை. அதனால் அந்தப் பிள்ளைகளிடம் மிகுந்த கர்வத்துடன் நடந்து கொள்வாள்.

அன்று அக்ஷயா தனது பார்பி பொம்மையை அனைவருக்கும் காட்டிவிட்டு அதன் அருமை பெருமைகளை எல்லாம் விளக்கிக் கொண்டிருந்தாள்.

"சென்னையில் என் •ப்ரண்ட்ஸ் எல்லார் கிட்டேயும் பார்பி இருக்கு. நான்தான் எல்லாரையும் விடப் பெரிய்ய்ய பார்பி செட் வச்சிருக்கேன். அது ரொம்ப எக்ஸ்பென்சிவ்" என்றாள்.

எக்ஸ்பென்ஸிவ் என்றால் என்னவென்று புரியாத மைனா, "அப்படீன்னா என்ன அச்சயா?" என்று கேட்டாள்.

"அய்யே, இது கூடத் தெரியலையா? இது ரொம்ப விலை" என்றாள் பெருமையாக.

பார்பியை ஊஞ்சல் மேல் வைத்துவிட்டு, "இதை யாரும் டச் பண்ணக் கூடாது, ஓகே?. நான் உள்ளே போய் எங்கப்பா •பாரின்லர்ந்து வாங்கிட்டு வந்த மேக் அப் செட்டை எடுத்துட்டு வர்றேன்" என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.

எல்லோரும் பார்பியை ஆவல் பொங்கப் பார்த்துக் கொண்டிருக்க, மைனா அதன் அழகில் மயங்கி அந்த பொம்மையைக் கையில் எடுத்துவிட்டாள்.

அதைப் பார்த்துவிட்ட அக்ஷயாவுக்குக் கடுங்கோபம் வந்துவிட்டது. அவளிடமிருந்து பார்பியைப் பிடுங்கிவிட்டு அவளைக் கீழே தள்ளிவிட்டாள்.

பின்பு ஆத்திரத்துடன், "எடுக்காதேன்னு சொன்னேனில்லை, ஸ்டுபிட்?" என்று கத்தினாள்.

மைனா பயத்துடன் எழுந்து பாவாடையில் ஒட்டியிருந்த மண்ணைத் தட்டிவிட்டாள்.

அக்ஷயா இன்னும் கோபம் அடங்காமல் மைனாவைப் பார்த்து, "உங்கப்பா என்ன வேலை செய்யறாங்க?" என்று கேட்டாள் அதிகாரத்துடன்.

மைனா சின்ன குரலில், "விவசாயம்" என்றாள்.

"எங்க டாடி பெரிய கார் கம்பெனி வச்சிருக்காங்க தெரியுமா? அதான் இதெல்லாம் வாங்க முடியுது. உங்கப்பாவுக்கு இதெல்லாம் வாங்கித் தர முடியாது. புரியுதா? நீ இதுக்கெல்லாம் ஆசைப் படக்கூடாது, தெரிஞ்சுக்கோ" என்று கடுமையாகச் சொன்னாள்.

பின்பு, "உங்க கிட்ட என்னோட மேக் அப் செட்டைக் காட்ட வந்ததே தப்பு" என்றவாறே தன் பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் போய்விட்டாள்.

அந்தச் சம்பவத்தால் ரோகிணிக்கும் தோழிகளுக்கும் அக்ஷயாவின் கர்வத்தை எப்படியாவது அடக்க வேண்டும் என்று தோன்றிவிட்டது.

"வாங்கடி, நம்ம கோதை அக்கா கிட்ட சொல்லுவோம். அவங்க ஏதாவது வழி சொல்லுவாங்க" என்று ரோகிணி சொன்னதும் எல்லோரும் கோதை அக்கா வீட்டை நோக்கி நடந்தார்கள்.

(அடுத்த வாரம் பார்ப்போமா?)

About The Author