ரிஷபன் கவிதைகள் (5)

உள்ளே போ..

நூறு வருஷங்களாய்ப்
புதைந்து கிடந்தது
அந்தப் பானை
திறந்ததும்
வெளிப்பட்டது
சுற்றி நின்றவர்கள்
மிரண்டு ஓடினார்கள்
தன்னைக் கண்டு
ஏன் ஓடுகிறார்கள்
என்று புரியாமல்
தவித்துப் போனது
ஊருக்குள் நுழைந்து
தேடியது
கதவுகள் எல்லாம் மூடப்பட்டு
‘போபோ’ என்னும் அலறல்
எவருக்கும் அதன் வருகை
பிடிக்கவில்லை
உடைந்து போன பானையில்
மீண்டும் புக வழியில்லை
வனாந்திரத்தில் தொலைந்து போகத்
தீர்மானித்தது
தளர்ந்து போய் திரும்பி நடந்தது
யாரோ ஒரு குழந்தை கேட்டது
‘யாரும்மா அது?’
‘சனியன் பிடிச்சதே
பார்க்காதேன்னு சொன்னேன்ல
மனுச நேசமாம்
எவ அழுதா அது வரலன்னு?’

About The Author