சிறிது சிறிதாக வண்டல் மணல் படிவதைப் போலப் படிகிற கழிவிரக்கம், சுய பச்சாதாபம், ஏமாற்றம், இயலாமை உணர்வு, சோக மனப்பான்மை ஆகியவை ஒரு மனிதனைச் சிறகுகளை இழந்த பட்டாம்பூச்சியாக ஆக்கிவிடுகின்றன. அவனை எதிர்ப் பரிணாம வளர்ச்சியை நோக்கி அவை அழைத்துச் சென்று விடுகின்றன.
ஆரோக்கியமான ஒரு மனிதனை, வழியில் சந்திப்பவர்கள் எல்லோரும் "ஏன் இன்று ஒரு மாதிரி இருக்கிறாய்?" என்று திரும்பத் திரும்பக் கேட்டால் அவன் இலக்கை அடைவதற்குள் ஒரு மாதிரி ஆகி விடுவான். மேல் மனம் ஆழ்மனதிற்கு இடுகின்ற கட்டளைகள் உடல் இயக்கத்தைக் கூடத் தூண்டுவனவாக இருக்கின்றன. "இது செரிக்காது" என்று சொல்லிச் சாப்பிடுகின்ற உணவு ஆழ்மனத்தின் தாக்கத்தால் குமட்டலையும் வாந்தியையும் வரவழைத்து விடுகிறது. வார்த்தைகளால் ஒருவரைக் குணப்படுத்தவும் முடியும், ரணப்படுத்தவும் முடியும்.
தேர்வில் தோல்வியுற்றதால், எதிர்பார்த்த படிப்புக்கு இடம் கிடைக்காததால், நினைத்த பதவியை அடைய முடியாததால், தான் நேசித்த பெண் தன்னைப் புறக்கணித்ததால், மனைவியின் அகால மரணத்தால், திடீரென இறந்த கைக்குழந்தையின் பிரிவால் மனதின் செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன. அதிர்ச்சியும் பயமும் சோகமும் மூளையின் செயல்பாட்டைத் திடீரெனத் தாக்குகின்றன. அந்தச் சூழலிலும் நிதானத்துடனும், முதிர்ச்சியுடனும், அமைதியுடனும் மனதை ஒழுங்குபடுத்தத் தெரிந்தவர்களுக்குத்தான் வாழ்க்கை சாத்தியமாகிறது.
மனதையும் சிந்தனையையும் ஒழுங்குபடுத்தத் தெரிந்தவர்கள் மகிழ்ச்சி வந்தால் மொட்டை மாடி உயரத்திற்கு எழும்பிக் குதிப்பதுமில்லை. துயரம் வந்தால் இலைகளை இழந்த மொட்டை மரமாய் மாறுவதுமில்லை.
அதிர்ச்சியும் துயரமும் அடைந்தவர்களுக்குச் சொற்களையே மயிலிறகாக்கி வருடி விட வேண்டிய கடமை நமக்கு உண்டு. துயரம், பகிரப் பகிரக் குறைகிறது. அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் சொற்களால் புத்துணர்ச்சியை ஊட்ட வேண்டும்.
இந்த வார ‘ஊருக்கு உபதேசம்!‘
அதிர்ச்சியும் துயரமும் அடைந்தவர்களை நம் சொற்களாலேயே நாம் குணப்படுத்தினால் மண்ணில் சொர்க்கம் சாத்தியம்னு புரியுதுங்களா?
நன்றி: வெ.இறையன்பு அவர்களின் ‘ஓடும் நதியின் ஓசை’ நூலிலிருந்து.


