சாதித்த காதல் (3)

இன்போசிஸ் உதயம்:

1981-ல் இன்ஃபோசிஸ் நிறுவனத்தைத் தொடங்க மூர்த்தி விரும்பினார். அவருக்கு லட்சியத்தை அடையும் வழிகள் தெரிந்திருந்தாலும் அதற்கான முதலீட்டிற்கு ஒரு பைசாக்கூட அவரிடம் இல்லை. வியாபார சம்பந்தமான எந்தவித பின்னணியும் எங்களுக்கு இல்லாததால் மூர்த்தியின் முடிவு என் மனதை மிகவும் பாதித்தது.

பம்பாயில் மாதச் சம்பளத்தில் சிக்கலற்ற வாழ்க்கையை விட்டு விட்டு கரை சேரா ஓடமாய் மாற நான் விரும்பவில்லை. ஆனால் மூர்த்திக்கு நல்ல தரமான மென்பொருளைத் தயாரிப்பதில் மிகுந்த ஆர்வம் இருந்தது. அவருக்குப் பக்கபலமாய் இருப்பதென முடிவு செய்தேன். அதனால் அவருக்குத் தெரியாமல் நான் வைத்திருந்த பத்தாயிரம் ரூபாயைக் கொடுத்து மூன்று வருட காலக் கெடுவையும் கொடுத்தேன். குடும்பத் தேவைகளுக்கு நான் சம்பாதித்துக் கொள்ளுவதாகவும், எந்தக் கவலையுமின்றி லட்சியத்தை நோக்கி அவர் செல்லலாம் எனவும் சொன்னேன். ஆனால் மூன்று வருடம் மட்டுமே அதற்கு அனுமதி கொடுத்தேன்.

மூர்த்தி தன்னுடன் பணிபுரிந்த ஆறு நண்பர்களுடன் இணைந்து 1981-ல் அதீத ஆர்வம் மற்றும் கடின உழைப்புடன் இன்ஃபோசிஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். 1982-ல் டாடா மோட்டார்ஸில் வேலையை விட்டு விட்டு மூர்த்தியுடன் பூனாவிற்குப் போனேன். வங்கிக் கடனில் வாங்கிய சிறு வீடே எங்களின் இல்லமாகவும் இன்ஃபோசிஸ் அலுவலகமாகவும் இருந்தது. அதில் கிளார்க், சமையல்காரி, புரொக்ராமர் என எனக்கு மூன்று முகங்கள். அத்துடன் வால்சந்த் தொழில் நிறுவனத்தில் Senior System Analyst பணியையும் சேர்த்து செய்தேன், குடும்பத் தேவைகளுக்காய்.

1983-ல் இன்ஃபோசிஸின் முதல் வாடிக்கையாளராக MICO என்ற பெங்களூர் நிறுவனம் கிடைத்தது. மூர்த்தி பெங்களூரில் அவருடைய அம்மாவுடன் தங்க, நான் ஹூப்ளிக்குப் போனேன், என் இரண்டாவது மகனான ரோஹனைப் பெற்றெடுக்க. என் மகன் பிறந்து பத்து நாட்களுக்குப் பின் மூர்த்தி ப்ராஜக்ட் விஷயமாக அமெரிக்கா சென்றார்.

அதற்குப் பின் ஒரு வருடம் கழித்தே அவரை நான் பார்த்தேன். என் மகனுக்கு infantile eczema என்ற நோய்த் தொற்று அலர்ஜி இருந்ததால் மூர்த்தியுடன் நான் செல்லவில்லை. ரோஹனின் அனைத்து தடுப்பூசிகளும் முடிந்த பின் பெங்களூரில் ஜெயநகரில் ஒரு சின்ன வீட்டை வாடகைக்கு எடுத்து குடித்தனம் செய்யவும், மற்றொரு வாடகை வீட்டை இன்ஃபோசிஸ் தலைமையிடமாகவும் பயன்படுத்தினோம். என் தந்தை மூர்த்திக்கு ஒரு ஸ்கூட்டரைப் பரிசளித்தார். நான் மீண்டும் சமையல்காரி, கிளார்க், செயலாளர், உதவியாளர், ப்ரொகிராமர் எனப் பன்முகம் கொண்டேன்.

நந்தன் நிலெகனி (‏இன்ஃபோஸிசின் நிர்வாக இயக்குநர்) மற்றும் அவருடைய மனைவி ரோகிணி இருவரும் எங்களுடன் தங்கினர். ரோகினி என் பையனை பார்த்துக் கொள்ளும் நேரங்களில் நான் இன்ஃபோஸிசிற்கு ப்ரொகிராம் எழுதுவேன். கார், ஃபோன் இல்லாத அந்தக் காலத்தில் இரு குழந்தைகளுடன் போராட்ட வாழ்க்கை, கடின உழைப்பை மட்டுமே கொண்ட 14 பேர், அவர்களுக்கிடையான சின்னச் சின்ன விளையாட்டுகளென இன்ஃபோசிஸ் உருவாகிக் கொண்டிருந்தது. நான் மட்டுமின்றி மற்ற பங்குதாரர்களின் மனைவிகளும் அவர்களுடைய கணவர்களுக்கு அளவில்லாத ஒத்துழைப்பை நல்கினர்.

அப்போது எங்களின் கணவர்கள் ஒரு நல்ல விஷயத்திற்காய் உழைக்கிறார்கள் என நாங்கள் அறிந்திருந்தோம். ஒருவரை ஒருவர் பாங்குடன் பார்த்துக் கொள்ளும் பெரிய கூட்டுக் குடும்பமாய் நாங்கள் இருந்தோம். சுதா கோபாலகிருஷ்ணன் என் மகள் அக்ஷதாவை அக்கறையுடன் கவனித்துக் கொண்டதையும், குமாரி ஷிபுலல் எங்கள் அனைவருக்கும் சமைத்ததையும் நான் இன்றும் நினைத்துப் பார்க்கிறேன்.

நான் அல்லது மூர்த்தி யாரோ ஒருவர் மட்டுமே இன்ஃபோசிஸில் பணிபுரிய வேண்டுமென்பதில் மூர்த்தி மிகத் தெளிவாக இருந்தார். ஆரம்பத்தில் நானும் அவருடன் சேர்ந்து நிறுவனத்திற்காய் உழைத்தாலும் இருவரும் நிறுவனத்திலேயே நேரம் செலவழிப்பதை மூர்த்தி விரும்பவில்லை. நந்தன் நிலெகனி நான் இன்ஃபோசிஸ் போர்டில் இருக்க வேண்டுமென வலியுறுத்தினாலும் கணவனும் மனைவியும் ஒன்றாய் இன்ஃபோசிஸில் இருப்பதை மூர்த்தி விரும்பவில்லை.

அந்த நிறுவன பணிக்குரிய அனுபவமும், படிப்பும் எனக்கு இருந்தும் மூர்த்தி மறுப்பது எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. ‘சுதா.. நீ இன்ஃபோசிஸில் வேலை செய்ய விரும்பினால் வேலை செய், நான் சந்தோஷமாக விலகிக் கொள்ளுகிறேன்’ என மூர்த்தி கூறியதும் எனக்கு மிகுந்த வலியைக் கொடுத்தது. என் கணவர் உருவாக்கும் நிறுவனத்தில் என் பங்கு இனி இல்லை என்பதும், என் தகுதிக்கேற்ற, நான் விரும்பிச் செய்த வேலையை விடவேண்டும் என்பதும் வேதனையைக் கொடுத்தது.

மூர்த்தியின் வேண்டுகோளுக்கான காரணம் புரிய எனக்கு இரண்டு நாட்களாயின. இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் வெற்றி ஒருவரின் நூறு சதவீத உழைப்பில் உள்ளதை நான் உணர்ந்தேன். ஒருவர் வேறு எந்த விதமான சிந்தனைக்கும் இடமில்லாமல் உழைக்கும் போதே அது சாத்தியம். நாங்கள் இருவரும் இன்ஃபோசிஸிற்கென உழைத்தால் குடும்பத்தை கவனிப்பது, குழந்தைகளை வளர்ப்பது யாரென்ற கேள்வி என்னுள் எழுந்தது. ஒருவர் இன்ஃபோசிஸையும் ஒருவர் குடும்பத்தையும் கவனிப்பதே நல்லது எனத் தோன்ற, நான் குடும்பத் தலைவியாகச் சம்மதித்தேன்.

இன்ஃபோசிஸ் என்ற மென்பொருள் நிறுவனம் மூர்த்தியின் கனவு, அதற்காய் என் கனவுகளை விட்டுக் கொடுப்பது என்பதே அந்த நேரத்தில் நான் செய்ய வேண்டியதாயிற்று. ‘உன்னை அடித்தளமாய்க் கொண்டு நான் கட்டிய வெற்றிக் கோட்டையே இன்ஃபோசிஸ். என் வெற்றிக்கு நீ மட்டும்தான் உரியவள்’ என இன்றும் மூர்த்தி கூறுவதுண்டு. காதலின் வலிமையே அன்புக்குரியவரின் வெற்றிதானே!

சுதா இவ்வாறு கூறியிருக்கிறார் தன் சுயசரிதையில்.

விட்டுக் கொடுத்து வெற்றிக்கோட்டை கட்டியவர்களின் வாழ்க்கைக்கு நாமும் கூறுவோம் நம் வாழ்த்துக்களை.

மூலம்: இணையதளங்கள்

About The Author