எங்கிருந்தோ வந்தான் (3)

லால்பாக். பின்க் கலர் சட்டை போட்டுக்கொண்டு வந்தான்.

அவனை பெயர் சொல்லி அழைத்து,"என்ன, காதுல கடுக்கன் எல்லாம் போட்டுக்கலையா?"

"என்ன புதுசா கேக்கற? புரியல!"

"இல்ல, பின்க் கலர் சட்டைன்னா கே-ன்னு அர்த்தம் இல்லையா, அதான் கேட்டேன்! கடுக்கன் மட்டும் மிஸ்ஸிங்!"

கிண்டலாக சொன்னான், "மேடம், கொஞ்சம் வீட்டுக்கு வர்றீங்களா? நான் கே இல்லேன்னு நிருபிக்கறேன்!"

எனக்கு திடுக்கென்றது. என்னையும் அறியாமல், எங்கோ ஒரு ஓரத்தில் வந்த வெட்கத்தை மறைத்துக்கொண்டு, அவன் கன்னத்தில் பளார் என்று அறைந்துவிட்டு ஆட்டோ பிடித்து வீட்டிற்கு வந்துவிட்டேன்.

தொடர்ந்து என் ஃபோனை அழைத்தான். நான் பேசவே இல்லை. மறுநாள் கொரியர் வந்தது. அவன் தான்.

"மன்னிக்கவும், மன்னிக்கும் வரை காத்திருப்பேன்!" – அவன் கையொப்பம் இருந்தது.

அதன் பிறகு என்னைத் தொடர்பு கொள்ள அவன் முயற்சி செய்யவில்லை. இரண்டு நாட்கள் சென்றது. பிறகு ஏனோ தெரியவில்லை, என் ஃபோனையே பார்த்துக்கொண்டு அவன் அழைப்பானா என்று ஏங்க ஆரம்பித்தேன். ஒரு வாரம் ஆனது. ஒன்றும் இயங்கவில்லை. இப்படித்தான் படுத்துகின்றான். நான் என்ன செய்வேன், ஐயகோ!

இனி…

ஆம், நான் தோற்றுவிட்டேன். இனி ஒப்புக்கொள்ள வேண்டியதுதான். அவனிடம் பேசினால் அழுதுவிடுவேன். நான் எப்படி அழுவது! என்னால் அழ இயலாது. எனக்கு அழுகை வராது! வராது, வராது, வராது!

"வரும் ஞாயிறு மாலை, ஐந்து மணிக்கு, லால் பாக். கண்டிப்பாக வரவும்" – கையொப்பம்.

அதை எடுத்துக்கொண்டு கொரியர் ஆஃபீஸ் சென்றேன். அப்பொழுது வெள்ளி இரவு என்பதை உணர்ந்து, "ஈ லெட்டெர் நாளே ஹோக்சேருதா" என்று கேட்டேன். "ஹாவ்து" என்று பதில் வந்தது. சரி!

ஞாயிறு மாலை வந்தது. நான் ஏன், இவ்வளவு சீக்கிரமாக லால் பாக் வந்து அமர்ந்துவிட்டேன்!!

அவனைப் பார்த்தவுடன் ஏதோ பெரிதாக சாதித்துவிட்டதாக நினைப்பு எனக்கு! சந்தோஷத்தை எல்லாம் அடக்கிக் கொண்டேன். அருகில் வந்தமர்ந்தான். என்ன பேசவேண்டும், எப்படி பேசவேண்டும் என்றெல்லாம் நிறைய யோசித்து வைத்தாகி விட்டது. இருந்தும், வார்த்தை வரவேண்டுமே!

அவன் பெயரைச் சொல்லி அழைத்தேன். அவன் சிரித்தான். பதிலுக்கு மீண்டும் என் பெயரைச் சொன்னான்.

நான், "உன் கிட்ட பேசாம, உன்னை பார்க்காம, ரொம்ப கஷ்டமா போச்சு. அதான் வரச்சொன்னேன்!"

"ம்ம்… எனக்குந்தான். நீ எப்போ கூப்பிடுவேன்னு காத்துண்டுருந்தேன்"

"ஒரு முக்கியமான விஷயம் பேசணும் … இல்ல, ரெண்டு!"

"சொல்லேன்!"

"எது முதல்ல சொல்லணும்னு நிறைய யோசிச்சு பார்த்துட்டேன். எனக்கு தெரியலை."

"இதுல என்னருக்கு … எது வேணாலும் சொல்லு."

"இல்ல, நான் ரொம்ப சீரியஸா பேசறேன், நோ கேம்ஸ்!"

"சரி சரி சீரியஸ்! எது சொல்லணும்னு தெரியலை. அப்புறம்?"

"உன்கிட்ட ரெண்டு விஷயம் சொல்லணும். ரெண்டுமே ஒவ்வொரு பேப்பர்ல இருக்கு! கண்ணை மூடிட்டு ஒண்ணு எடேன்?"

பக்-பக்-பக்-என்று என் இதயத்துடிப்பு அதிகரித்தது.

எடுத்தான், "நானே பிரிச்சு படிக்கலாமா?"

"ஹ்ம்ம்… படி!"

படித்தான், "யூ பீட் மை ஈகோ". என்னைப் பார்த்து விழித்தான், "அப்படீன்னா?"

"என்னடா? என்னை பேச வைக்கறியா? உனக்கு புரியலையா?" ‘டா’ என்றேன்.

"இல்லை!"

என் கண்களிலிருந்து நீர் கொட்ட கொட்டச் சொன்னேன், "உன்ன விட்டு விலகி விலகி போனேன்டா! என்னால முடியலை! உன்கிட்ட பேசாம இருக்க என்னால முடியலை! நான் தோத்துப் போயிட்டேன்."

அவன், "நீ என்ன பேசறேன்னே எனக்கு புரியலை." தன் முகத்தை கல்லாக வைத்துக்கொண்டான்.

நிஜமாகவே நான் பேசுவது அவனுக்கு புரியவில்லையா? படுபாவி!

"டேய்! ஏண்டா? விளையாடறியா! நிஜமாவே புரியலையா? எனக்கு அந்த வார்த்தையைச் சொல்லக் கூட அருகதை கிடையாது! ஸ்டில் … நான் … உன்னை காதலிக்கறேண்டா!"

நான் அதைச் சொன்ன மறுகணத்தில் அவன் முகத்தில் புன்னகை படர்ந்தது! விரிந்த புன்னகை! எதையோ சாதித்துவிட்டோம் என்று சொல்கின்ற மந்திரப்புன்னகை!

(அடுத்த இதழில் முடியும்)

About The Author