கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது

சொப்பனம்தானோ? தோற்ற மயக்கங்களோ?

இந்த மாதம் நமக்குக் கிடைத்த வித்தியாசமான நல்ல புத்தகம், "இனி இது சேரி இல்லை" அன்னை சத்யா நகரின் ஆச்சரிய வரலாறு! என்.பைரவன் மற்றும் சாருகேசி எழுதி கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. (அதென்னவோ, வித்தியாசமான நல்ல புத்தகங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நாம் புத்தக அடுக்குகளில் தேடும்போது நமக்கு நிறைய கிழக்குப் பதிப்பகப் புத்தகங்களாகவே சிக்குகின்றன! அவர்களுக்கு ஒரு ஷொட்டு!)

நகரத்தின் நடுவே இருக்கும் குடிசைப் பகுதி ஒன்றை அந்த இடத்திலேயே ‘ஒருங்கிணைந்த முன்னேற்றம்’ என்ற முறையில் சீரமைத்த கதை. நன்கு ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். அதே நேரம் சிறிதும் சுவை குன்றாமல் இருக்கிறது. பைரவன் ஆங்கிலத்தில் எழுதி வெளிவந்துள்ளது. தமிழ் வடிவம் சாருகேசி தந்தது.

இந்த முயற்சியின் முனைப்பாளர்கள் சென்னை விலிங்டன் கார்ப்பொரேட் பவுண்டேஷன் என்ற நிறுவனம். ஆர்வத்தோடு இதை இயக்கியவர் அதன் இயக்குநர் நாராயணன். பொறுப்பாகச் செயல்படுத்தியிருக்கிறவர் பைரவன். நமது பாராட்டுக்கு உரியவர்கள்.

"குடிசைப் பகுதி மக்களின் வாழ்க்கை முறை வறுமையின் அடையாளத்தைக் காண்பிக்கிறது. இதைக் கண்டு வருந்துவது மனித சுபாவம். ஆனால் அதைப் போக்குவது தெய்வச் செயல். மேலும் இந்தத் திட்டம் வெற்றிகரமாக நிறைவேறுமானால், இன்னும் பல வணிக நிறுவனங்களும் இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டு பெரும்பாலான மக்களின் வாழ்க்கைத் தரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டுவர முடியும்" என்ற நாராயணனின் சிந்தனையில் முகிழ்த்ததுதான் இந்தத் திட்டம்.

அன்னை சத்யா நகர், அசோக் நகர் 11வது நிழற்சாலைக்கு அருகில் இருக்கிறது. எப்படி இதைத் தெரிவு செய்தார்கள் என்பதில் ஒரு சுவாரஸ்யம் அடங்கியிருக்கிறது. இது பெரிதும் இல்லாமல் சிறிதும் இல்லாமல் நிர்வகிக்க வசதியாக இருந்தது. அனுமதியின்றி ஆக்கிரமிப்பு செய்த பகுதி இல்லை. தாதாக்களின் அட்டகாசம் கிடையாது. பெரும்பாலான குடிசைவாசிகள் அமைதி விரும்பிகள். தங்கள் வாழ்க்கைத் தரத்தை மாற்றும் முயற்சிகளுக்கு ஆதரவு தரும் மன நிலையில் உள்ளவர்கள்.

எல்லாம் சரி. முயற்சி வெற்றி பெற குடிசைவாசிகளின் முழு ஈடுபாடு வேண்டுமே? எப்படித் தெரிந்து கொள்வது? நூதனமாக ஒரு வழியில் முயன்றார்கள். பெண்களுக்கு கோலப்போட்டி வைத்தார்கள். அத்தனை பெண்களும் உற்சாகமாக வரிந்து கட்டிக் கொண்டு பங்கு கொண்டதும், நிம்மதியாக வேலையைத் தொடங்கினார்கள்!

இந்தத் திட்டம் தொடங்கியது 2001, ஜூன் 8ம் தேதி. அப்போது இருந்த நிலை என்ன?

எங்கே பார்த்தாலும் குப்பை கூளம், அழுக்கு, அசுத்தம், மலை போல் குப்பைகள், மலக்குவியல்கள், 12 அடி அகலத் தெருவில் ஒரு பக்கம் சாக்கடை, ஈக்கள், கொசுக்கள், பறக்கிற பூச்சிகள் என்னென்ன உண்டோ அத்தனையின் குசலப் பிரச்னம்!

இப்போது இந்த ‘முன்னாள் சேரியின்’ நிலைமை என்ன?

சொந்த வீடுகள், வீடுகளிலேயே கழிப்பறைகள், குழாயைத் திருகினால் வீட்டிலேயே தண்ணீர், எரிவாயு வசதி, சுத்தமான வீதிகள், சுகாதாரமான சூழ்நிலை, பள்ளிக்கூடம், பெண்களுக்கு தொழிற்பயிற்சி, குழந்தைத் தொழிலாளர் இல்லாமை, மது அரக்கனின் வீழ்ச்சி, குடும்பங்களின் கடன் தொல்லை நீங்கி வருமானப் பெருக்கம், சுய தேவைக் குழுக்கள், இப்படி "நல்லன எல்லாம்!"

இப்படிப்பட்ட மாற்றம் ஏற்பட்டது, முழுக்க முழுக்க மனிதாபிமானத்துடன் இணைந்த தொழில்முறையில் கார்ப்பொரேட் பவுண்டேஷன் செயல்பட்டிருப்பதால்தான் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ரோட்டரி கிழக்கு சங்கம், தன்னார்வத் தொண்டர்கள், டாக்டர் ஜெயம் ஆகியோரது பங்கை நன்றியுடன் பைரவன் பதிவு செய்திருக்கிறார்.

அரசாங்க அதிகாரிகள் கூட ஆச்சரியப்படத் தக்க வகையில் விரைந்து செயல்பட்டிருக்கிறார்கள். 20 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்படாது இருந்த வீட்டு வரியை 20 நிமிஷத்தில் நிர்ணயித்துத் தந்த ஆணையர் சாந்தா ஷீலா நாயர், இரண்டு வருஷத்துக்கான வரி கட்டினால் போதும், மீதி தள்ளுபடி. அதையும் நான்கு தவணைகளில் கட்டலாம் என்று அந்த இடத்திலேயே முடிவெடுத்த துணை ஆணையர் யாதவ்; இணைப்புக் கட்டணத்தை 50% தள்ளுபடி செய்து (3 தவணகளில் கொடுங்கள். போதும்!) சலுகை தந்த மாநகராட்சி அதிகாரிகள், எல்லாருமே அரசு அலுவலகங்களின் அதிசயப் பிறவிகள்!

தவிரவும், சாலைகளைத் தோண்டி, பணி முடிந்ததும் செப்பனிட்டு மீண்டும் மூட மெட்ரோ வாட்டர், மாநகராட்சிக்கு கட்டணம் செலுத்த வேண்டும். "ஊஹூம்.. மாட்டோம்" என்று கூறிவிட்டார்கள். மாநகராட்சி, "பரவாயில்லை, வெட்டிக் கொள்ளுங்கள். நாங்கள் கண்டு கொள்ளவில்லை" என்று கூறி விட்டார்கள். அது மட்டுமில்லாமல், பணி முடிந்ததும் அவர்களே பாதைகளைச் செப்பனிட்டு மூடி விட்டார்கள். கிள்ளிப் பார்த்துக் கொள்ளுங்கள்; இவை எல்லாம் சொப்பனம்தானோ, தோற்ற மயக்கங்களோ?

அத்தனையும் முடிந்து ஆனந்தமான வெற்றி விழாவில் பாயசத் துரும்பு போல ஒரு குறை. சிறப்பு விருந்தினர்களாக வர ஒப்புக்கொண்டிருந்த மாநகராட்சி மேயரும், ஆணையரும் வரவே இல்லையாம்! அழைப்பிதழில் அந்தப் பகுதி கவுன்சிலர்களின் பெயர்கள் இடம் பெறாததால் குழப்பமாம்! இவ்வளவு சிறப்பாக அத்தனை காரியங்களும் செய்த பவுண்டேஷன் ஒரு முக்கிய பாடத்தை இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும் போல இருக்கிறது! அரசியல் ரீதியாக சரியாக நடந்து கொள்ளும் நடத்தை முறை (Politically correct behaviour!).

புத்தகத்தைப் படிப்பது மட்டுமல்ல, நேரில் ஒரு முறை சென்று அன்னை சத்யா நகரைப் பார்த்து வர வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்!

About The Author