பனிமலையில் வெப்ப ஊற்றுகள்

பத்ரிநாத் கேதார்நாத் என்றாலே பனிமூடிய மலை நம் கண் முன்னால் வருகிறது. எங்கும் வெள்ளியால் செய்த மலைபோல் அந்த இடம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. அந்தப் பனிமலையின் நடுவில் கூட வெந்நீர் ஊற்றுகளைக் காண முடிவது வியப்பைத் தருகிறது.

பத்ரிநாத் ஒரு புனித யாத்திரை ஸ்தலம். இந்த வெந்நீர் ஊற்று கடல் மட்டத்திலிருந்து 10500 அடி உயரத்தில் இருக்கிறது. இதன் பெயர் ‘தப்தகுண்டம்’. ஆனால் மற்ற வெந்நீர் ஊற்றுகளான கங்கோத்ரி, மணிகர்ணம், யமுனோத்ரி போன்று இதில் கொதிக்கும் நீர் இல்லை. மிதமான வெப்பம் இருப்பதால் ஸ்நானம் செய்ய மிகவும் இதமாக இருக்கிறது.

இங்கே குளிப்பதும் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. பாறை நடுநடுவே இருக்கும் குழிகளை கூழாங்கற்களால் அடைத்தபடி பண்டாக்கள் அமர்ந்திருக்கின்றனர். யாத்திரிகர்களுக்குக் குளிக்க வேண்டுமானால் தேவையான கட்டணம் செலுத்த வேண்டும். பின் பண்டாக்கள் குழிகளை மூடிய கற்களை எடுக்க அதன் நடு இடுக்கிலிருந்து வெந்நீர் பெரிய பவுண்டன் போல் பீய்ச்சுகிறது.
அப்படிப் பீய்ச்சும் போது ஒரு நூதனமான ஒலியும் கேட்கிறது. நாம் எந்த ஒலியை மனதில் நினைத்துக் கேட்கிறோமோ அது போலவே அது நமக்குக் கேட்கிறது! இந்த மாதிரி ஊற்றுகளில் குளித்தால், சரும நோய்கள் நீங்கி புத்துணர்ச்சி
கிடைக்கிறது.

மணிகர்ணம் என்ற வெப்ப ஊற்று சிம்லா அருகில் குலு பள்ளத்தாக்கில் இருக்கிறது. கடல்மட்டத்திற்கு மேல் 7000 அடி உயரத்தில் இம்மாதிரி பல ஊற்றுக்களைக் காணலாம். ஊற்றுக்களில் வரும் நீர் நல்ல கொதிக்கும் நீராக இருப்பதால் இந்த இடத்தைச் சுற்றி ஒரே நீராவியாக ‘ஸ்டீம் பாத்’ எடுத்துக்கொள்வது போல் ஒரு அனுபவம் ஏற்படுகிறது.

இங்கு ஒரே நேரத்தில் இரண்டு வித்தியாச வெப்பநிலைகளை அனுபவிக்க முடிகிறது. சில்லென்று காற்றுவீச, அங்கு ஓடும் பார்வதி நதி அந்த சிலுசிலுப்பை மேலும் அதிகப்படுத்துகிறது. அதே சமயத்தில் வெப்ப நீரூற்றிலிருந்து சூடான காற்று வீச உடலுக்கும் புத்துணர்ச்சி, மனதுக்கும் பேரானந்தம் கிடைக்கிறது.

இங்கு சாப்பாட்டுக்கு ஒரு ஹோட்டலையும் தேடிப் போக வேண்டாம். ஒரு மெல்லிய துணியில் அரிசி, பருப்பு, மற்ற காய்கறிகள் முதலியவற்றை போட்டுக் கட்டி நீரில் அமிழ்த்தியபடி வைக்க வேண்டும். கட்டப்பட்ட கயிறின் மற்றொரு நுனியை ஒரு மரத்தின் அடியிலோ அல்லது வேறு பாறையின் கீழோ கட்டி விட்டுச் சென்று, பின் ஸ்நானம் செய்துவிட்டு வர, இந்தப் பொருட்கள் எல்லாம் வெந்து தயாராக இருக்கும்!

"கர்ண" என்றால் காது என அர்த்தம். பார்வதி தேவி குளிக்கும் போது அவளது காதின் மணி, நீரின் வேகத்தால் கழண்டு காணாமல் போய்விட்டதாம். அதனால் இந்த இடத்திற்கு ‘மணிகர்ணம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

About The Author