பேண்ட் போட்ட சாமிங்க…

அன்றைக்கு வெள்ளிக்கிழமை.

வழக்கம்போல இருக்கும் கூட்டம் ரயிலில் இல்லை. முகூர்த்த நாளாக இருந்தால் கூட்டமிருக்கும்.

அப்போதுதான் அவரைக் கவனித்தேன். உடம்பு முழுக்க அழுக்கேறிய தேகம். ஆடைகளும் அப்படியே. இடுப்பு வேட்டி மட்டும் இருந்தது. மேலே சட்டையில்லை. ஓர் அழுக்குத் துண்டு மட்டும். கழிப்பறைக்குப் போகும் பாதையில் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்தார்.

பார்க்கப் பாவமாக இருந்தது.

உள்ளே இடமிருந்தது. ஆனால், அவரைக் கூப்பிடத் தயக்கமாகவும் இருந்தது. உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பவர்கள் ஏதும் நினைப்பார்களோ என்று.

நீடாமங்கலத்தில் டிக்கட் பரிசோதகர் ஏறினார். ஒவ்வொருவராகக் கேட்டுக்கொண்டே வந்தார்.

எங்கள் இடத்துக்கு வந்ததும் அனைவரும் காண்பித்து முடித்தோம். எதிர் சீட்டில் ஒருவர் பாந்தமாக நன்றாக இருந்தார். ஆனால், டிக்கட் எடுக்கவில்லை.

"ஏன் சார் டிக்கட் எடுக்கலே?"

"வேகமா வந்தேன். ரயில் புறப்பட்டுடுச்சி. எடுக்க முடியலே… அதான்."

"இதெல்லாம் காரணமா சார்? சரி பைன் கட்டிடுங்க!"

"சார்! நான் அரசாங்க வேலையில இருக்கிறவன். நீடாமங்கலம் வரைக்கும் எனக்கு சீசன் இருக்கு சார். இதுக்கு அப்புறம் ரெண்டு ஸ்டேஷன்தானே சார்!"

"என்ன சார், படிச்சவங்க பேசற பேச்சா இது? ரெண்டு ஸ்டேஷன்னா டிக்கட் எடுக்க மாட்டீங்களா? இப்படித்தான் தினமும் போறீங்களா?" என்றார் டிக்கட் பரிசோதகர்.

"சார்! அநாவசியமா பேசாதீங்க!"

"நான் பேசலே, பைன் போடறேன், கட்டுங்க" என்றபடிக் கழிப்பறைப் பக்கம் திரும்பியவர் உட்கார்ந்திருந்தவரைப் பார்த்தார்.

கோபம் அவர் பக்கம் திரும்பியது.

"எங்கய்யா போறே?"

"வேளாங்கண்ணிக்கு சாமி!"

"வித்தவுட்டா?"

"என்னா சாமி?"

"டிக்கட் இருக்கா?"

"இருக்கு சாமி!" என்றபடி அழுக்கு மடிப்பிலிருந்து டிக்கட்டை எடுத்துக் கொடுத்தார்.

வேளாங்கண்ணி வரை டிக்கட் எடுத்திருந்தார்.

டிக்கட் பரிசோதகர் வியப்புடன் கேட்டார், "அப்புறம் ஏய்யா சீட்டுலே உக்காராம இங்க உக்காந்திருக்கே?"

"இல்லங்கய்யா… அங்கல்லாம் பேண்ட் போட்ட சாமிங்க உக்காந்திருக்காங்க. அங்கல்லாம் சரிக்குச் சமமா உக்காரக்கூடாது. எங்கய்யன் சொல்லியிருக்காரு."

அதிர்ச்சி அங்கு சிறிது நேரம் மௌனத்தை உறைய வைத்துவிட்டுச் சென்றது.

About The Author