அசட்டை, சட்டைக்கு எதிர்ப்பதம்

உடம்பெல்லாம் ஒரே புழுக்கம். வியர்வைப் பிசபிசுப்பு.

எப்போது வீடு போய்ச் சேருவோம் என்று தவிப்பாயிருந்தது.

அபயா என்றும், ஹிஜாப் என்றும், புர்கா என்றும், சதர் என்றும் பரவலாகவும், பர்தா என்று பிரியமாகவும் குறிப்பிடப்படுகிற இந்தக் கருப்பு அங்கியை எப்போது வீட்டுக்குப் போய்க் கழட்டி எறிவோம் என்று இருந்தது. வெயிலுக்கும் கருப்புக்கும் ஒத்துக் கொள்ளவே கொள்ளாது என்று நிறுவப்பட்டிருந்தும் பர்தாவுக்குக் கருப்புக் கலரை முன் மொழிந்தது யார்? என்று எரிச்சலாயிருந்தது.

இந்த ரூட்டில் ஏஸி பஸ் வருமா? என்று தெரியவில்லை. வந்தால், ஆஹா, எவ்வளவு சொகம்மாயிருக்கும்!

மக்கள் நெரிசல் அதிகமில்லாத மத்யான வேளை. பஸ் ஸ்டாப் திண்டின் மேலே ரெண்டே ரெண்டு பேர் மட்டும் உட்கார்ந்திருந்தார்கள்.

அம்மாவும் இவளும்.

ரெண்டே ரெண்டு பேர்?

தப்பு.

மூணாவதாய் ஓர் உருவம் பக்கவாட்டில் தென் பட்டது.

இவளை நோக்கி அந்த உருவம் வருவதும் தெரிந்தது.

கழுத்தைத் திருப்பி இவள் முழுமையாய்ப் பார்த்தாள். ஆச்சர்யத்தோடு பார்த்தாள்.

ஒரு பிச்சைக்காரச் சிறுமி.

பிச்சைக்காரச் சிறுமி என்கிறதில் ஆச்சர்யமொன்றுமில்லை.

ஆனால் அவள் ஸ்வெட்டர் அணிந்த ஒரு பிச்சைக்காரச் சிறுமி என்கிறதுதான் ஆச்சர்யம்.

இன்னும் எவ்வளவு நேரம் அல்லா இந்தப் பர்தாவுக்குள் வெந்து கொண்டிருக்க வேண்டும் என்று இவள் நொந்து போயிருக்கிற போது, ஸ்வெட்டருக்குள்ளே ஒரு சிறுமியா!

இந்த வெக்கையில் எப்படி இவள் பாவாடை சட்டைக்கு மேலே ஒரு முரட்டு முழுக்கை ஸ்வெட்டரை அணிந்து கொண்டு வெயிலில் வலம் வருகிறாள்?

அவளை அருகில் அழைத்துப் பேச்சுக் கொடுக்க வேண்டுமென்றிருந்தது.

அவசியமிருக்கவில்லை. அந்தச் சிறுமியே இவளை சமீபித்தாள், "அக்கா" என்று இவளை நோக்கிக் கையேந்தியவாறு.

நீட்டிய கையை இவள் எட்டிப்பிடித்து, "அம்மா கொஞ்சம் தள்ளி ஒக்காருங்களேன்" என்றாள்.

"கொஞ்சம் நகருங்கம்மா, இந்தப் புள்ள ஒக்காரட்டும்."

"ஏய், ஒனக்கென்ன கிறுக்கா புடிச்சிருக்கு? பிச்சைக்காரப் புள்ளய இழுத்துப் பக்கத்ல ஒக்கார வக்கியே."

எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல், அம்மாவை நெருக்கி நகர்த்தி விட்டு, “இப்டி ஒக்காரும்மா” என்று அந்தப் பிச்சைக்காரச் சிறுமியை அமர்த்தினாள்.

இந்த ஆசன மரியாதை அந்நியமாயிருந்தது அந்தச் சிறுமிக்கு.

"வேண்டாங்க்கா. ஒரு ரெண்டு ரூவாக் குடுத்தீங்கன்னா நா போயிருவேங்க்கா."

"ஓஹோ, இப்பல்லாம் பிச்சக்கி ரேட் கூடிப்போச்சா?"

"பிச்சக்கி ரேட் ஒரு ரூவா தாங்க்கா. ஆனா, நா பார்ட் டைம் செய்றேன். அதான் ரேட் ரெண்டு ரூவா."

"பார்ட் டைம் செய்றியா?"

புழுக்கத்தை மீறி இவளுக்குப் புன்னகை அரும்பியது.

"ஆமாங்க்கா, எங்க அம்மா கல் ஒடக்கிற வேல செய்யுது. நானும் அம்மாவுக்கு ஹெல்ப் செய்வேன். லஞ்ச் டைம்ல அம்மா ரெஷ்ட் எடுக்கும். அப்ப நா பார்ட் டைமுக்குக் கௌம்பிருவேன்."

"இங்லீஷ்லயெல்லாம் பேசற?"

"பின்னே? மெட்ராஸ்க்கு வந்து ரெண்டு வருசம் ஆச்சில்ல, இங்லீஸல்லாம் கத்துக்கினேன். அப்பப்ப இங்லீஸ்ல ஸ்பீச் வுட்டேன்னா, ரெண்டு ரூவாக் குடுக்கறவங்க டபுளாக் குடுப்பாங்க."

"மெட்ராஸ்க்கு வந்து ரெண்டு வருஷந்தான் ஆச்சா, அதுக்கு முந்தி?"

"ஏய், என்னா நீ, பிச்சக்காரக் கழுதயப் பக்கத்ல ஒக்கார வச்சிக்கிட்டுக் குசலம் விசாரிச்சிட்டிருக்க? இந்தா புள்ள, எங்க வூட்ல வேலக்கி வர்றியா?"

"ஐயோ அம்மா, ஒங்கத் தாய்க்குல டயலாக்க ஒடனே எடுத்துவுட்றுவீங்களே! கல்தோன்றி மண்தோன்றாக் காலத்லயிருந்தே, வறுமைக் கோட்டுக்குக் கீழயிருக்கிற ஒரு பொண்ணப் பாத்துட்டீங்கன்னா, நீங்க எல்லாரும் சொல்லி வச்ச மாதிரி, இதேக் கேள்வியத் தான் கேப்பீங்க. "எங்க வீட்டுக்கு வேலக்கி வர்றியா?”. நீங்க கொஞ்சம் சும்மா இருங்கம்மா. நீ சொல்லு பாப்பா. எந்த ஊர் ஒனக்கு?"

"செஞ்சிக்கா."

"செஞ்சில ராஜா தேசிங்குக் கோட்ட இருக்காம்ல, பாத்திருக்கியோ?"

"பாத்திருக்கியோவா?, அந்தக் கோட்டயே எங்கத் தாத்தாவோட தாத்தா கட்னது தானேக்கா."

இவளுடைய புன்னகை சிரிப்பாய்ப் பெருகிப் போனது. இந்தப் பிச்சைக்காரச் சிறுமியிடம் என்னமோ ஒரு விசேஷம் இருக்கிறதென்று புரிந்தது.

"சரி, நா போறேங்க்கா" என்று போக எழுந்தவளை விட்டுவிட இவளுக்கு மனசில்லை.

"இந்தா ஒன்னோட ரெண்டு ரூவாயப்புடி" என்று ஒரு ரெண்டு ரூபாய் நாணயத்தை அவளுடைய கையில் திணித்து விட்டு, இன்னுங் கொஞ்ச நேரம் எங்கூட இருந்தா இன்னும் கூட காசு குடுப்பேன் என்று ஆசை காட்டி அவளைப் பிடித்து வைத்தாள்.

"என்னோட ரெண்டு ரூவாயா? ஆமா, என்னோட காசு தாங்க்கா இது" என்று அந்தச் சிறுமி அந்த நாணயத்தைத் திருப்பித் திருப்பிப் பார்த்து முகம் மலர்ந்தது இவளுக்கு வேடிக்கையாயிருந்தது.

"நேத்து ராத்திரி நா தொலச்ச அதே ரெண்டு ரூவா தான்."

"நேத்து ராத்திரி நீ தொலச்ச ரெண்டு ரூபா எப்டி பாப்பா எங் கைக்கி வந்தது?, என்ன கத விடற!"

"கத இல்லக்கா. நெஜம்மா. நா ராத்திரி மரத்தடில மணல்ல தொலச்சிட்டேன். கொஞ்சம் தள்ளிப் போய் நிலா வெளிச்சத்ல தேடித் தேடிப் பாத்தேன். கெடக்யல."

“மரத்தடில தொலச்சேங்கற, தள்ளிப் போய் நிலா வெளிச்சத்ல தேடிப் பாத்தேங்கற!”

“மரத்தடில எப்டிக்கா தேட முடியும், அங்க இருட்டாயிருந்துச்சே!”

இவளுக்கு அடக்க மாட்டாமல் சிரிப்பு வந்துவிட்டது. இவள் எப்போதோ வாசித்த முல்லா நஸிருதின் கதையின் சாயலான இந்த ஹாஸ்யம் இந்தச் சிறுமிக்கு இயல்பாகவே தோன்றியிருக்கிறது என்கிற விஷயம் இவளுக்கு விநோதமாயும் சந்தோஷமாயும் இருந்தது. சிரிப்பினூடே இவள் அந்தச் சிறுமியைத் தன்னோடு சேர்த்து இறுக்கிக் கொள்ளவும், அம்மாவுக்குப் பற்றிக் கொண்டு வந்தது.

"ஏய், என்ன செய்ற நீ? வுடுஅத. பிச்சக்காரியப் போய்க் கட்டிப் புடிக்கியே!"

சிரிப்பு தணிந்து இவள் அம்மாவை நோக்கித் திரும்பினாள்.

"அம்மா, she is just not a பிச்சக்காரி. She is different and she is interesting அம்மா. நீங்க கொஞ்சம் சும்மாயிருங்க. பாப்பா, ஒன்னோட பேர நீ சொல்லவேயில்லியே?"

"ம்? ஜோதிகா."

"ஜோதிகா?"

"ஏங்க்கா, பேர் ஒங்களுக்குப் புடிக்கலியா? அப்ப வேற பேர் வச்சிக்கிருவோம். நயன்தாரா ஒக்கேவா?"

"ஏய், கிண்டல்லாம் பண்ணாத” என்று அவளுடைய கன்னத்தைக் கிள்ளிக் கொண்டிருக்கும்போது இவளுக்கு, பஸ் ஏதும் இப்போது வந்து தொலைத்து விடக்கூடாதே என்று யோசனையாயிருந்தது.

"ஒங்க அப்பா அம்மா வச்ச பேரச் சொல்லு."

அந்தச் சிறுமியிடமிருந்து பதிலேதும் வராமற் போகவும், "என்ன சத்தத்தையே காணல" என்று இவள் செல்லமாய் ஓர் இடி இடித்தாள்.

சிறுமியிடமிருந்து பதில் வந்தது. குரலில் இடக்கு மறைந்து, சோகம் மேலிட்டிருந்தது.

"எங்கப்பாவ நா பாத்ததே இல்லக்கா. எங்கம்மா தான் சித்தாள் வேல பாத்து சம்பாரிச்சி எனக்கும் தங்கச்சிப் பாப்பாக்கும் கஞ்சியூத்துது. அம்மாவோட பாரத்தக் கொறக்யத்தான் நா இப்டி எல்லார்ட்டயும் போய்க் கை நீட்றேன். பிச்சையெடுக்கறது அசிங்கந்தான். வேற என்ன செய்றதுக்கா."

அவளுடைய சோகம் இவளையும் பற்றிக் கொள்ள, முன்னிலும் இறுக்கமாய் அவளை அணைத்துக் கொண்டாள், "வெயில் காலம், ஒனக்குப் புத்தி பெசகிருச்சு" என்கிற அம்மாவின் முனகலைப் பொருட்படுத்தாமல்.

பிறகு, பிடியைக் கொஞ்சம் தளர்த்தி, "அந்த ரெண்டு ருபாயக் குடு" என்றாள். "எதுக்குக்கா?" என்று கொஞ்சம் அதிர்ந்த சிறுமியை, "பரவாயில்ல, அதையும் வச்சிக்க" என்று தட்டிக் கொடுத்து விட்டுத் தன்னுடைய கைப்பையைத் திறந்து, இருபது ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து அவளிடம் நீட்டினாள்.

"இந்தா, இத ஒங்கம்மாட்டக் குடு."

"இருவது ரூவாயா! ஐயோ வேண்டாங்க்கா. அம்மா திட்டுவாங்க."

"அதெல்லாம் திட்டமாட்டாங்க. வச்சிக்க" என்று அவளுடைய உள்ளங்கையில் வைத்து அழுத்தினாள்.

"பத்திரம். நேத்து ராத்திரி ரெண்டு ரூபாயத் தொலச்ச மாதிரி இதையும் தொலச்சிரப் போற."

கொஞ்ச நேரம் தலைமறைவாயிருந்த சிரிப்பு அங்கே திரும்பவும் எட்டிப் பார்த்தது.

இருபது ரூபாய்த் தாளை மடித்து ஸ்வெட்டருக்குள் சொருகிக் கொண்டவள், இவள் பக்கம் முகத்தைத் திருப்பி, “அக்கா ஒங்கள எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு” என்றாள்.

"இங்லீஸ்ல சொன்னா, ஐ லைக் யூ."

"இருபது ரூபா குடுத்ததுக்காகவா?"

"அதுக்கில்லக்கா. நீங்க ரொம்ப அழக்கா இருக்கிங்க."

"ஆனா நீ அழுக்கா இருக்க. நீயும் டெய்லி சுத்தமாக் குளிச்சா என்னப் போல அழகா ஆயிருவ."

"போங்கக்கா. கிண்டல் பண்றீங்க. ஆமா. நீங்க கருப்பு கவுன் போட்ருக்கீங்களேக்கா, அதுக்குள்ள உடுப்பு ஏதாச்சும் போட்ருக்கிங்களா, இல்ல வெறும் கவுன் தானா?"

"சீ. அசிங்கமாப் பேசாதடீ. வெறும் பர்தாவப் போத்திக்கிட்டா வெளிய வருவாங்க? இது கவுன் இல்ல. பர்தா. எங்கம்மா புடவை கட்டி அதுக்கு மேல பர்தா போட்ருக்காங்க. நா பர்தாவுக்குள்ள சல்வார் கமிஸ், துப்பட்டா, இன்னர் கார்மென்ட்ஸ் எல்லாம் போட்ருக்கேன்."

"இன்னர் கார்மென்ட்ஸ்ன்னா?"

"இங்லீஷெல்லாம் பேசற, இது தெரியாதா?"

"தெரியாதுக்கா. நா இன்னும் காலேஜ் லெவலுக்குப் போகல."

"நீ காலேஜ் லெவலுக்குப் போறப்பத் தெரிஞ்சிக் கிட்டாப் போதும்."

"இந்த வெயில்ல டிரஸ்ஸயும் போட்டுக்கிட்டு மேல இந்தக் கறுப்புப் பர்தாவையும் போட்டுக்கிட்டிருக்கீங்களே அக்கா, ஒடம்பு எரியல?"

"அதத்தான் நா ஒங்கிட்டக் கேக்கறேன். இந்த மெட்ராஸ்ல, இந்த மத்யான வெயில்ல, கிறுக்கு மாதிரி ஸ்வெட்டர் போட்டுக்கிட்டு அலைறியே, ஒனக்கு ஒடம்பு எரியல?"

"கிறுக்கு மாதிரின்னு சொல்லாதீங்கக்கா, ஒங்கள மாதிரி ஒரு அக்கா குடுத்த சொட்டர் இது. இது ஒண்ணு தான் என்ட்ட இருக்கு. எனக்கு ரொம்பப் பிடிச்ச சொட்டர்".

"பிடிச்ச சொட்டர் சரிதான். ஆனா அது எவ்ளோ அழுக்கா இருக்கு பார். நீ நல்லாக் குளிச்சிட்டு இதச் தொவச்சிப் போட்டுக்கலாம்ல?"

"நா குளிக்கவும் முடியாது. இந்த சொட்டரத் தொவக்யவும் முடியாதுக்கா."

அவள் சொன்னது இவளுக்குப் புதிராயிருந்தது. "ஏன் ஜோதிகா அப்டிச் சொல்ற?" என்று இவள் கேட்டதற்குத் தலை கவிழ்ந்தபடியே ஜோதிகா சொன்னாள்:

"இந்த சொட்டர நா களட்டவே முடியாது. உள்ளார எதுவும் போடல போட்டுக்கறதுக்குச் சட்ட இல்ல."

(‘நட்சத்திரங்கள் கருப்பு’ மின்னூலில் இருந்து)

About The Author