மஹாத்மா காந்தி மார்க்கெட் (1)

நார்த்தங்காய் ஊறுகாய் என்பது ஓர் அற்புதமான வஸ்து. அபூர்வமான வஸ்துவும் கூட. நார்த்தங்காய் போன்ற ஒரு காயின் படத்தோடு, ஸிட்ரான் பிக்கிள் என்று ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்ட லேபில் ஒட்டப்பட்டு சென்னை சூப்பர் மார்க்கெட்களில் கிடைக்கிற ஊறுகாய் பாட்டில்களெல்லாம் சும்மா பம்மாத்து.

ஒரிஜினல் ஹல்வா வேண்டுமென்றால் திருநெல் வேலிக்குத்தான் போக வேண்டும் என்று இருக்கிற மாதிரி, ஒரிஜினல் நார்த்தங்காய் ஊறுகாய்க்கு எங்கப் பாளையங் கோட்டைக்குத்தான் போக வேண்டும்.

நார்த்தங்காய் ஊறுகாய்க்காக நம்ம நாக்கு நமநமக்கிற பல சந்தர்ப்பங்களில், என்ன ஆனாலும் ஆகட்டும், நெல்லை எக்ஸ்ப்ரஸ்ஸில் தட்கால்லில் ஒரு டிக்கட் போட்டு ஒரு சனிக்கிழமை ராத்திரி ரயிலேறி விடுவோமா என்று ஒரு வேகம் பிறக்கும்.

திங்கட்கிழமை காலையில், ஊறுகாய் பாட்டில் அல்லது பாட்டில்களோடு சென்னை வந்து சேர்ந்து விடலாம்.

ஆனால் ஒரு ஆயிரம் ரூபாய் அவுட்.

நாக்கு ருசிக்காக ஆயிரம் ரூபாயையும் முப்பத்தாறு மணி நேரத்தையும் மெனக்கிடப் போகிறாயா மடையா என்று மண்டையில் தட்டி என் அந்தராத்மா என்னை அடக்கி விடும்.

குடும்பத் திருவிழாவுக்கு மே மாசம் ராஜபாளையம் போயிருந்த போது, ஒரு நாள் ஓய்வு கிடைத்தது. ராஜபாளையத்தில் பஸ் ஏறினால், மூணு மணி நேரத்தில் திருநெல்வேலி. போய் வந்து விட்டாலென்ன என்றொரு சபலந்தட்டியது. சபலத்துக்கு செயல் வடிவம் கொடுத்து அதிகாலை ஆறு மணிக்கு பஸ் ஏறியே விட்டேன்.

வழியில், சங்கரன் கோவில் பஸ் ஸ்டாண்ட் ரோடில், சாலையின் ரெண்டு பக்கங்களிலும் வியாபித்திருக்கிற மிட்டாய்க் கடைகளில், வட்டவட்டமாய் கோபுரப்படுத்தி வைத்திருந்த வெள்ளை ஜிலேபிகள் போகிற வருகிற வாகனங்களின் தூசி பட்டு லேசாய்ப் பழுப்பேறிப் போயிருந்தன.

அந்த ஜிலேபிகளில் கால் கிலோ அரைக் கிலோ ஓலைப் பெட்டிகளில் பார்ஸல் பண்ணிக் கொண்டு போய் வீட்டில் பிள்ளைகளுக்குத் தின்னக் கொடுக்க வேண்டும் என்கிற ஆசை டிரைவருக்கோ கண்டக்டருக்கோ வந்து
விட்டால், சங்கரன் கோவில் பஸ் ஸ்டாண்டில் காக்கப் போட்டு விடுவார்கள்.

நான் பஸ்ஸேறிய அன்றைக்கு ரெண்டு நல்ல விஷயங்கள் நடந்தன.

ஒன்று, சங்கரன் கோவில் பஸ் ஸ்டாண்டில் பஸ்ஸைக் காக்கப் போடவில்லை.

ரெண்டு, கீழே இறங்கி நின்றால் கால்களுக்கூடாக ஓடுகிற சங்கரன் கோவில் பன்றிகள் ஒன்றைக் கூடக் காணவில்லை.

எட்டே முக்காலுக்கெல்லாம் திருநெல்வேலிப் புதிய பேருந்து நிலையத்தில் இறங்கியாச்சு. அங்கேயிருந்து, மார்க்கெட் போகிற டவுன் பஸ்ஸில் ஏறி அசோக் டாக்கீஸ் ஸ்டாப்பில் இறங்கிக் கொண்ட போது, பக்கத்தில் தானே பாட்டியுடைய பழைய வீடு, ஒரு நடை போய்ப் பார்த்து விட்டு வரலாமே என்று ஆசை வந்தது.

அசோக் டாக்கீஸ் இப்போது இல்லை. பஸ் ஸ்டாப் மட்டும் தான் இருக்கிறது. அசோக் டாக்கீஸுக்குப் பின்புறம் தான் பாட்டியின் பாரம்பரிய வீடும் விசாலமான தோட்டமும் அமைந்திருந்தன. தோட்டத்தில் நார்த்தங்காய் மரங்கள் ரெண்டு நின்றன.

நார்த்தங்காய் ஊறுகாய்க் கலையில் கைதேர்ந்த பாட்டி.

பாட்டி வீட்டுக்குப் போகிற வழியில், வாய்க்கால் பாலத்தையொட்டியிருக்கிற பிள்ளையார் கோவிலில், வருஷாவருஷம் விநாயக சதூர்த்திக்குப் பாட்டுக் கச்சேரி நடக்கும். சிங்காரங் கெட்டு சிறைப்பட்டப் பாவிக்கு சம்சாரம் எதுக்கடீ என்று சிதம்பரம் ஜெயராமனின் குரலில் மதுரை சி.ஆர். சவுந்தரராஜன் பாடுகிறபோது மெய்சிலிர்த்துப் போய் ரசிகர் கூட்டம் விஸிலடிக்கும். கச்சேரி உபயம் டாக்டர் மகாதேவன். கம்பவுண்டராயிருந்து டாக்டராய்ப் பதவி உயர்வு பெற்றுக் கொண்ட மகாதேவன். டாக்டர் இப்போது போய்ச் சேர்ந்திருப்பார். கச்சேரி இப்போதெல்லாம் நடக்கிறதோ இல்லையோ, யாரிட மாவது கேட்கலாமென்றால், பிள்ளையார் கோவில்ப் பக்கம் பிள்ளையார் ஒரு நபரைத் தவிர வேறே மனிதர்களே இல்லை.

சரி போகட்டும் என்று பாலத்தைக் கடந்து பாட்டி வீட்டுப் பக்கம் வந்தால், வீடு இருந்த இடத்தில் வேறொரு புதிய கட்டிடம் இருக்கிறது.

என்னமோ ஒரு ஃபாக்டரியின் பெயரைத் தாங்கிய பெயர்ப்பலகை கேட்டில் தொங்குகிறது. கூரை மேலே ஒரு ஸின்ட்டெக்ஸ் தண்ணீர்த் தொட்டி.

அண்ணாந்து பார்த்த போது, அந்நாளில் அசோக் டாக்கீஸ் பாட்டுக்களைக் கேட்டபடி மொட்டை மாடியில் படுத்துக் கிடந்த கோடைகால ராத்திரிப் பொழுதுகளின் நினைவு நெஞ்சுக்குள் புகுந்து கொண்டு கனத்தது.

வீடே இல்லையென்கிறபோது தோட்டம் எப்படி இருக்கும்! தோட்டமே இல்லையென்கிறபோது நார்த்தங்காய் மரங்கள் எப்படி இருக்கும்!

வந்த வழியே திரும்பி நடந்தேன்.

வடக்குப் பேட்டைப் பள்ளிவாசலைக் கடந்து கோட்டூர் ரோடை அடைந்தால், அங்கே ஒரு வீட்டில் நார்த்தங்காய் ஊறுகாய் தயாரித்து விற்பனை செய்வதாய்ச் செவி வழிச் செய்தியொன்று உண்டு.

போகிற வழியில் நடராஜன் பார்பர் ஷாப்.

****

பாளையங்கோட்டைக் கான்வென்ட்டில் படித்துக் கொண்டு, பாட்டி வீட்டில் செல்லமாய் வளர்ந்து வந்த சின்ன வயசில், மாசம் ஒரு முறை வீட்டுக்கே நாவிதர் வருவார். தாத்தாவுக்கு முடி வெட்டி, ஷேவ் செய்து, நகம் கத்தரித்து, கக்கத்தில் மயிர் மழித்து, எல்லாம் செய்வதற்கு நாலணா. சின்னப் பையன் எனக்குப் பாதிச் சார்ஜ், ரெண்டணா. பின்னாளில், பெரிய க்லாஸுக்குப் போன
பின்னால், நடராஜனின் பார்பர் ஷாப்பில் ஐம்பது பைசா.

மெட்ராஸில், ஆண்களுக்கான பியூட்டிப் பார்லர்களில் இப்போது ஐம்பது ரூபாய் அல்லவா வாங்குகிறார்கள்! நடராஜன் வாங்கியது மாதிரி நூறு மடங்கு!

நடராஜன் வாழ்க.

தொழில் ரீதியான உறவையும் மீறி நடராஜன் மேலே ஒரு நட்பு ஏற்படக் காரணமாயிருந்த விஷயம், என்னைப் போலவே அவரும் ஒரு விஸ்வாசமான சிவாஜி ரசிகர் என்பது. பார்பர் ஷாப் கோட்டுபாடுகளுக்கு முரணாக, சினிமா நடிகைகளின் கவர்ச்சிப் படங்களையெல்லாம் நடராஜன் தவிர்த்திருந்தார்.

(தொடரும்)”

About The Author