மெட்டி (1)

பரிசுப் பொருட்களை சந்தோஷ்தான் வாங்கி அடுக்கி வைத்துக் கொண்டிருந்தான். கெளரிக்கு அவனைப் பார்க்கவே சங்கடமாய் இருந்தது. பக்கத்தில் நின்ற முரளி அவளை இடித்தான் லேசாக.

"என்ன ஓரப் பார்வை?

அவனுக்கு வேறு நினைப்பு. ரிஷப்ஷன் எப்போது முடிந்து அவர்களைத் தனியே விடப் போகிறார்கள் என்ற யோசனை.

சிவப்பு வெல்வெட் பதித்த ஜோடி இருக்கைககள். மெல்லிசைக் குழு தன் பங்கிற்குப் பாடல்களை இசைத்துக் கொண்டிருந்தது. எதிரே பாதி இருக்கைகள் காலியாக இருந்தன. மேலே முதல் மாடியில் விருந்து.

நண்பர்கள் வந்தார்கள். கை குலுக்கி வாழ்த்தினார்கள். வீடியோ கேமிரா ஃபிளாஷிற்குச் சிரித்தார்கள். டிபன் சாப்பிடப் போய்விட்டார்கள்.

"கால் வலிக்கிறதா?" கெளரியின் முகம் லேசாய் சிணுங்கியதைப் பார்த்து முரளி கேட்டான்.

"இல்லே.."

"பசிக்கிறதா? ஏதாச்சும் டிரிங்க்ஸ் கொண்டுவரச் சொல்லட்டுமா?

முரளிக்கு ஏதாவது செய்ய வேண்டும் போல் பரபரப்பு. புது மனைவி ஆயிற்றே!

சந்தோஷுக்கு பாம்புச் செவி. கெளரியைப் பார்த்தான். பார்வை வினவியது. ஏதாவது கொண்டு வரட்டுமா?

"பாவம். சந்தோஷ் கூட எதுவுமே சாப்பிடலை" என்றாள்.

"நான் போய் ரெண்டு பேருக்குமே எடுத்துக்கிட்டு வரட்டுமா?" முரளியிடம் இருந்து இயல்பான குரலில் கேள்வி. கெளரி சிரித்தாள்.

"சர்த்தான். அப்பறம் வர்றவங்களுக்கு என்ன பதில் சொல்றது?"

சந்தோஷ் எழுந்தான். "என்ன வேணும் கெளரி? நான் போறேன்."

"உனக்குத்தான். சூடா எதாவது குடிச்சிட்டு வாயேன் சந்தோஷ்"

கெளரிக்கு அவன் தலை கவிழ்வதைப் பார்த்து இன்னமும் உறுத்தலானது.

"போறேன் கெளரி.."

யாரையோ கைதட்டி அழைத்து உட்கார வைத்தான். போயிவிட்டான்.

தப்பாகப் புரிந்து கொண்டு விட்டானோ? கெளரி மனசுக்குள் சிணுங்கினாள்.

அவர்கள் அருகில் நின்று முறைத்துக் கொண்டிருந்தவனை எதோ வேலை சொல்லி விரட்டிவிட்ட மாதிரி நினைத்து விட்டானோ?

இல்லை.. சந்தோஷ் இல்லை. நிஜமாகவே எனக்குக் கவலை. இந்த இரண்டு தினங்களாக மண்டபத்தில் நுழைந்தது முதல் நீ சரியாகவே சாப்பிடுவதில்லை. ஏன்? என் திருமணம் நிச்சயமாகி தேதி குறித்த தினம் முதல் எல்லா வேலைகளையும் நீதான் செய்கிறாய்.

எப்படி உனக்குச் சாத்தியமானது சந்தோஷ்? புரியவே இல்லை. கெளரிக்கு மேக்கப் மீறி முகம் நடுங்கியது.

"ஏய்…" என்றான் முரளி செல்லமாய்.

"என்ன?"

"இவர்தான்… ராம்நாத். என்னோட ஃப்ரெண்டு, பிலாசபர், கைடு.. எல்லாமே.." தம்பதியாய் வந்த இருவரையும் அறிமுகப்படுத்தினான். "இவங்கதான் ஸாரோட ஹோம் மினிஸ்டர்.." வந்தவர் சூட்டில் அம்பது வயதைத் தொட்டு நின்றார். தடித்த பிரேமில் கண்ணாடி.

"பெண்ணே.. முரளியைப் பற்றி என்னிடம் கேள். நிறைய டிப்ஸ் தருகிறேன்" என்றார் ஆங்கிலத்தில் கணீரென்று. அவர் மனைவி சிரித்தாள். "ஒரு வாரம் டயம் கொடுங்க. முரளியைப் பத்தி அவளே எல்லாம் சொல்லிருவா"

‘ஹா.. ஹா..? என்று மெல்லிசை மீறி சிரிப்பொலி எழுந்தது.

" பெஸ்ட் விஷஸ்" பரிசுப் பொருளை நீட்டினார். முரளி அமர்ந்திருந்தவளை லேசாய்த் தட்டினான், எழுந்து நின்று பரிசுப் பொருளை வாங்கிக்கொள்ள.

கெளரிக்கு எது தடுக்கியதோ, ஒரு நிமிஷம் தடுமாறி சமாளித்து நிமிர்ந்து நின்றாள். எங்கிருந்தோ சந்தோஷ் ஓடி வந்தவன் அவள் நிலை பெற்றதும் நின்றுவிட்டான்.

‘எதுக்கு முரளி? வீணா அவளைச் சிரமம் படுத்திக்கிட்டு"என்றாள் மிசஸ் ராம்நாத். ராம்நாத்திடம் லேசான சங்கடம்.

"நோ.. எனக்கு எதுவும் இல்லே" என்றாள் கெளரி சிரிப்புடன்.

மீண்டும் வாழ்த்துடன் பரிசுப் பொருளை கெளரியிடம் கொடுத்தார்கள். சந்தோஷிடம் நீட்டினாள். வாங்கிக் கொண்டான்.

"இவங்களை டிபன் சாப்பிட அழைச்சுக்கிட்டு போகணும்"என்றான் முரளி சந்தோஷைப் பார்த்து.

"நான் கவனிச்சுக்கிறேன்" முகம் சிணுங்காமல் அழைத்துக் கொண்டு போனவனைப் பிரமிப்புடன் பார்த்தாள்.

"என்ன கெளரி? அடிபட்டுருச்சா?"

"ப்ச். ஒண்ணுமில்லே… விரிப்புல ஏதோ தடுக்கிச்சு…"

"வலிக்கிறதா…?" அவனையும் மீறி காலைத் தொடப் போனான்.

"ஸ்ஸ்… என்னது? எல்லாரும் பார்க்கிறாங்க? என்றாள் வெட்கமாய்.

இருவரும் மீண்டும் அமர்ந்தபோது முரளி சட்டென்று அமர, கெளரி சற்று நிதானமாய் கால்களைப் படித்து அமர்ந்தாள். ஊன்றிக் கவனித்தால் மட்டும் புலப்படக் கூடிய இடது கால் ஊனம்.

"கெளரி.. ப்ச்… ஏன் நேரம் இத்தனை ஸ்லோவாப் போகுது?"என்றான் கிசுகிசுப்பாய்.

(மீதி அடுத்த இதழில்)

About The Author