விழிப்பு

சூப்பர் மார்க்கெட்டில் சாமான்களை வாங்கிக் கொண்டு வெளியே வந்தவள், எதிரில் நின்ற சரவணனைக் கண்டதும் மனசுக்குள் பரபரப்பை உணர்ந்தாள்.

அப்பாடி! ஒரு வருட இடைவெளிக்குப் பின் இப்போதுதான் அவனைப் பார்க்கிறாள்.

கொஞ்சம் இளைத்து.. தொப்பை கரைந்து, லேசாக முன் மயிர் நரைத்து … முகத்தில் கூடுதலாக இரண்டு மூன்று கோடுகள் தெரிய…. மாறித்தான் போய் விட்டான்.

அவனும் இவளைக் கவனித்து விட்டான். தடுமாறிச் சிரித்தான். தயங்கியபடி அருகில் நெருங்கி வந்தான்.

"சௌக்கியமா..?"

"ம்.." என்றாள்.

"ஆ.. ஆனந்தி எப்படி இருக்கா?"

"ம்.."

"அப்புறம்?" என்றான். என்ன பேசுவது என்று தெரியாமல்.

இவர்களை உரசிக் கொண்டு கூட்டம் விரைய, அதற்கு வழிவிடுவது போல மெல்ல மெல்ல இவர்கள் நகர… பக்கத்திலிருந்த ஐஸ்கிரீம் பார்லர் கண்களில் பட்டது.

"வாயேன்.. ஜஸ்ட் .. ஐஸ்கிரீம் மட்டும்…" என்றான் தயங்கியபடி.

முன்பெல்லாம் இங்கு வரும் போது ஐஸ்கிரீம் நிச்சயம் உண்டு. அதுவும் மணிக்கணக்கில் பேசிச் சிரித்து… இப்போது நினைத்தால் கனவாகத் தோன்றுகிறது. ஏதோ இப்போது தான் அறிமுகம் ஆனவனைப் போல… இவள் சம்மதத்திற்காகக் காத்திருந்து…

இவனா… நாலு வருடங்களுக்கு முன் அவளுக்குத் தாலி கட்டியவன்?

"சித்ரா..சித்ரா.."

சன்னமான குரலில் அவன் அழைப்பது கேட்டு திடுக்கிட்டு நிமிர்ந்தாள். எதிரில் ஐஸ்கிரீம் உருகிக் கொண்டிருந்தது. வலுக்கட்டாயமாகச் சிரிப்பை வரவழைத்துக் கொண்டாள். அவன் குரலில் ஏதோ ஏக்கம் தொனிப்பதாக அவள் நினைத்துக் கொண்டாள்.

ஒரு வேளை தன் நடத்தைக்கு வருந்துகிறானா…. அதை சொல்லத் தயங்குகிறானா… மனதின் சங்கடம் தான் முகத்தில் குழப்பமாகப் பிரதிபலிக்கிறதா? எண்ண அதிர்வுகளால் தாக்குண்டு தலை நிமிர்ந்து அவனை உற்றுப் பார்த்தாள்.

"என்ன பார்க்கிறே…?"

"ஒண்ணுமில்லே" என்றாள் அவசரமாக.

"பரவாயில்லே. எப்படியோ குடும்பத்தைச் சமாளிச்சிட்டிருக்கே!"

அபத்தமாக உணர்ந்தாள். இதென்ன அந்நியன் போல ஒரு பாராட்டு! இவர்கள் பிரிவதற்கு முன்பு என்றால் அவன் ரசனையைக் கவருகிற விதமாக ஏதேனும் அவள் செய்து விட்டால் போதும். எதிரில் நின்று எதுவும் பேசாமல் கண்களில் சிரிப்புடன் பார்ப்பான்.

"என்னங்க?"

ஊஹும் பேசமாட்டான். தோளில் கை வைத்து … அல்லது இரு கைகளால் முகம் தாங்கி,

"ஐய… சொல்லுங்களேன்… " என்று சிணுங்குவாள்.

நெற்றியில் ஒரு ‘இச்’…

"அப்பா …. இதுக்கா இப்படி பயந்தே போயிட்டேன்."

அதெல்லாம் ஆரம்பத்தில்தான். போகப் போக அவன் பொறுமையின்மையும், தன்னையே சார்ந்த குணமும் வெளிப்படத் துவங்கின.

சின்னச் சின்ன பூசல்கள் பெரியதாகி வாய்ச்சண்டை அடிதடி வரை வளர்ந்து.. மனக் கசப்பு அதன் எல்லையைத் தொட்டு விட்டது.

ஒரு நாள் நிதானமாகச் சொன்னான்.

"இனிமே நாம சேர்ந்து, வாழறதிலே எந்த அர்த்தமும் இருக்கிறதா தோணலே…."

அதிர்ந்துதான் போனாள். எதிர்பார்த்ததுதான் என்றாலும் வார்த்தைகளாய் வெளிப்பட்டபோது அதன் குரூரம் தாக்கத்தான் செய்தது.கையைப் பற்ற வந்த ஆனந்தி- ஒன்றரை வயது மகளைக்கூடப் பார்க்காமல் – அவனை வெறித்தாள்.

"நீ புத்திசாலி… இதுக்கு மேல சொல்லணும்னு அவசியமில்லே. கோர்ட்.. கேசுன்னு அலைஞ்சாலும் வெட்டின உறவு ஒட்டப் போறதில்லே. நீயே முடிவெடுத்துக்கோ" அவன் போய்விட்டான்.

அம்மா அழுதாள். அப்பா எகிறினார். அவர்கள் வாயை அடைத்தாள். ஆனந்திக்கும் பாட்டி வீட்டு சூழ்நிலை பழகிப் போய்விட்டது.

இன்று மறுபடி அவனைப் பார்க்கிறாள். இத்தனை நாட்களுக்குப் பிறகு.

சரவணன் கண்களில் லேசாக பளபளப்பு தெரிந்தது. அழுகிறானா என்ன?

"எப்படி.. மன்னிப்பு கேட்கிறதுன்னு எனக்குப் புரியலே" என்றான்.

"ப்ச்…" என்றாள் தன்னையுமறியாமல்.

"இந்த இடைவெளியில் உன் அவசியம் எனக்குப் புரிஞ்சுப் போச்சு… எதை இழந்திருக்கேன்னு தெரிஞ்சுக்கிட்டேன். எத்தனை சொந்தம் இருந்தாலும் மனைவி மாதிரி வராது தான். என் தேவைகளைக் கவனிக்க, பூர்த்தி செய்ய நம்பகமான பெண் துணை அவசியம்னு புரிஞ்சுக்கிட்டேன்…" மேலே மேலே பேசிக்கொண்டே போனான்.

அதே சன்னமான, அதிராத குரல், பழகிப்போன வார்த்தைகளுந்தான்… பிரிவதற்கு முன் இவளிடம் அவன் எதிர்பார்த்த, இப்போதும் எதிர்பார்க்கிற அதே விஷயங்கள். இவன் மறந்து போனதை நினைவூட்டி… இவன் சட்டைக்கு பட்டன் தைத்து… இவன் செலவுகளுக்கு ஈடு கொடுத்து… இவன் இச்சைகளைப் பூர்த்தி செய்து…

இவள் நினைப்புகளை அறியாமல் மேலும் பேசினான். அதைச் செய்தேன்… இதைச் செய்தேன்.. இப்படி பொழுது போயிற்று…. ஆபீசில் நடந்தது…. டூர் போனது… டில்லிக் குளிர்… ஒரு நாள் மழையில் நனைந்தது.

ஒரு மணி நேரம் போனதே தெரியவில்லை!

வானம் இருட்டி மின் விளக்குகள் ஒளிர ஆரம்பித்து விட்டன. வழக்கம் போல இன்றும் குறையாத ஜன நெரிசல்.

சட்டென்று உடம்பு கூசிய மாதிரி உணர்ந்து திரும்பினாள். அவன் தான் தொட்டிருக்கிறான்.

" நாளைக்கு லீவு போட்டுரட்டுமா…?சாமான்களை எடுத்துக்கிட்டு … வந்திரலாம்…இன்னைக்கே உங்க வீட்டுல பேசிரு" என்றான்.

"அவசியமில்லே…" என்றாள்.

"கரெக்ட்! அவங்க சம்மதம் எதுக்கு? இது நம்மோட வாழ்க்கைதானே…? என்றான் புரியாமல்.

உற்றுப் பார்த்தாள். பார்வையின் கூர்மை புரியாமல் விழித்தான்.

"மிஸ்டர் சரவணன்! இப்பவும் உங்க நினைப்பு… செயல் எல்லாம் உங்களைச் சுற்றித்தான் இருக்கு… என்னைப் பத்தியோ, உங்க மகளைப் பத்தியோ, எப்படி சமாளிச்சோம்…. எப்படி வாழறோம்னு புரிஞ்சுக்கிற இயல்பான கணவனா… தகப்பனா.. மாறின மன நிலை இன்னமும் வரலே உங்களுக்கு. சாரி. நான் நினைக்கிற வாழ்க்கை இது இல்லே."

மனசுக்குள் அத்தனை வார்த்தைகளும் குமிழியிட்டன. ஆவேசமாய் வெளிப்பட்டன.

"ஐயாம் சாரி, மறுபடி என்னைப் பார்க்க வரவேண்டாம்" என்றாள் இறுதியாக.

திடமான நடையுடன் விலகிப் போனவளை குற்ற உணர்வுடன் பார்த்துக் கொண்டு நின்றான் அவன்.

About The Author

10 Comments

  1. A.SUMATHY

    னல்ல கதை.. புரிந்துனர்வு என்பது கனவன் மனைவி இருவருகும் இருக்க வென்டும். அப்பொழுதுதான் வால்கை சந்தொசமாக இருக்கும்.

  2. suganthe

    கதை நன்றாக இருக்கு சித்ரா செய்தது தான் சரி ஆண்கள் இதை படிக்க வேண்டும்

  3. Rishi

    பெண்களிடமிருந்து மட்டுமே பின்னூட்டங்கள் வந்திருக்கின்றன!!!

    சித்ராவின் முடிவு மிகச் சரி. கணவன் என்றில்லை… கணவன் திடீரென இறக்கும்போது ஆதரவளிக்காமல் தவிக்க விடும் சொந்தங்கள், தவிப்பவர்கள் நல்ல நிலைக்கு வந்த பின்னர் பின்னால் வந்து ஒட்டும்போது அவர்களைத் தவிர்ப்பதே அவர்களுக்கு தண்டனை.

  4. kris

    ஊடலுக்கு பின் கூடல் என்று நினைத்தேன்….முடிவு எதிர்பார்க்கவில்லை.அன்பில்லாதவனுடன் வாழ்வதும் இயந்திர வாழ்கைதானே…….

  5. santhia

    இப்படி பட்டெ சுயனல கனவனோடு வாழ்வதை காட்டிலும் பிரிந்து வாழ்வது ஒன்ரும் கடினம் இல்லை. கதை கரு நன்ரு. சுபெர் ரிஷி.

  6. renu

    என் வாழ்க்கயின் முடிவு எனக்கு புரியாமல் தடுமாரினேன் ஆனால் இன்த கதை எனக்கு நல்ல அரிவுரையக இருக்கிரது, very good advice

Comments are closed.