அகநானுற்று தாய் கூற்றுப் பாடல்களில் உவமை (1)

செவ்வியல் மொழி என்னும் சிறப்பினைப் பெற்ற மொழி தமிழ் மொழி. இம்மொழியில் 2000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஒப்பற்ற தமிழரின் வாழ்வியலை நாடகம் போன்று விளக்குவன சங்க இலக்கியங்களாகிய எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் ஆகும். இதனை அகம் புறம் எனப் பிரிப்பர். அகம் புறம் இரண்டையும் தமிழரின் இரு கண்களாகப் போற்றுகின்றனர். இவற்றுள் அக இலக்கியப் பாடல்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாகும். இல்லற நெறியை இன்பமுடன் எடுத்துரைக்கும் தன்மை கொண்டவை அகப்பாடல்கள். எட்டுத்தொகை நூல்களுள் காலத்தால் பழமையானதாகவும் சிறந்த உள்ளுறை உவமைகளும் வரலாற்றுச் செய்திகளும் பொதிந்ததாகவும் அகநானுறு அமைந்துள்ளது.

ஓர் இலக்கியப் படைப்பாளன் தான் உணர்ந்த இன்ப துன்பங்களை பிறரும் அறிந்து கொள்ளும் நோக்கில் அதனைப் படைக்கின்றான். அப்படைப்பைப் படிக்கும் வாசகர் உணர வேண்டும் என்பதற்காகவும், அதனை உணர்த்த வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும் சில நெறிமுறைகளைக் கையாளுவதை ‘உத்திகள்’ என்பர். அவ்வுத்திகள் படைப்பாளன் சொல்ல வரும் கருத்தை சுருங்கச்சொல்லி விளங்க வைப்பதற்கு கருவியாக அமைகின்றன. சங்க இலக்கிய உத்திகளில் குறிப்பிடத்தக்கவை இயற்கை வருணனை, உவமை, உள்ளுறை, இறைச்சி என்பவையாகும். இவை பயின்று வரும்போது, அப்பாடல்கள் மற்ற பாடல்களைவிட இலக்கியச்சுவையில் சிறப்புற்றுத் திகழ்கின்றன. சங்கப்பாடல்களில் பெரும்பாலும் உவமை என்னும் உத்தி பயின்று வருகிறது. அகநானுற்றில் தாய் கூற்றுப் பாடலில் உவமை என்னும் உத்தி பயின்று வருவதை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

தொல்காப்பியர் கூறும் உவமை

தொல்காப்பியர் உவமை குறித்து அகத்திணையில் பதிவு செய்கிறார். உள்ளே ஒரு பொருளை வைத்தும், பாடலின் திணையைக் குறிக்கவும் உவமை உதவும் என்பதனை,

"உள்ளுறை உவமம் ஏனை உவமம் எனத்
தள்ளாதாகும் திணையுனர் வகையே" (தொல்.பொருள் நூ- 993)
என்று சுட்டுகிறார்.

உவமம், உள்ளுறை உவமம், ஏனை உவமம் என்ற இருவகைப்படும் என்பதை இதனோடு இணைத்துக் கூறுகிறார். ஏனைஉவமை என்பதை உவமை எனக் கொள்ளப்படுகின்றது. இவ்வுவமையின் தன்மை குறித்து,

"ஏனை உவமம் தானுணர் வகைத்தே" (தொல்.பொருள் நூ- 995) என்னும் நூற்பாவில் சுட்டுகிறார்.

இந்நூற்பாவிற்கு ‘ஒழிந்த உவமம் உள்ளந்தான் உணர வேண்டாது சொல்லிய சொற்றொடரே பற்றுக் கோடாகத் தானே நிற்குங் கூறுபாட்டிற்கு’ என்றவாறு உரை தருவார் நச்சர். இதில் வரும் "தானுணர் வகைத்தே" என்பதற்கு ‘தான் உணரும் வகையாவது வண்ணத்தனால், வடிவானதல், பயனானதல், தொழிலானதல் உவமிக்கப்படும் பொருளோடு எடுத்துக் கூறுதல்’ என இளம்பூரணர் விளக்கம் தருகின்றார்.

இவ்வுவமை வினை, பயன், மெய், உரு என நான்கு வகைப்படும். இதனை தொல்காப்பியர்,

"வினை பயன் மெய் உரு என்ற நான்கே
வகைபெற வந்த உவமைத் தோற்றம்" (தொல்.உவமயியல் நூ-1222)
என்று வகைப்படுத்துவார்.

மேலும், உவமை என்பது எவ்வகையில் அமைக்கப்பட வேண்டும் என்பதை, உவமை சிறப்பு, நலன், காதல், வலி எனும் நான்கனை நிலைகளனாகக் கொண்டு அதனுள் பயின்று வரும். ஆனால் தண்டியலங்காரம், இக்கருத்தினை

"பண்பும் தொழிலும் பயனும் என்(று) இவற்றின்
ஒன்றும் பலவும் பொருளொ(டு) பொருள் புணர்த்(து)
ஒப்புமை தோன்றச் செப்புவ(து) உவமை" (தண்டி, உவமவியல் நூ-1)

என்று, ‘பண்பு, தொழில், பயன் ஆகியவற்றின் காரணமாக உவமை பிறக்கும். அது ஒன்றாகவோ, பலவாகவோ வருகின்ற பொருளோடு பொருந்தும்படி வைக்கப்படும். இத்தன்மையால் கேட்போர் உணர்ந்து கொள்ளுமாறு ஒப்புமைப் புலப்படும் வண்ணம் எடுத்துரைப்பதே உவமை என்னும் அணியாகும் என்பது தண்டியலங்காரம் தரும் விளக்கம் ஆகும்.

தாய் கூற்றில் உவமை

அகநானுற்றில் தாய்கூற்றில் அமைந்த பாடல்களில் குறிப்பிட்ட சில நிலைகளுக்கு சிறப்பாக உவமை பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலைகளைத் தலைவியின் இல்லச்சிறப்பு, இல்லக்காவலின் திறம், தலைமக்களின் உருவ வருணனை மற்றும் செயல், தாயின் நிலை, சுரத்தின் தன்மை என வகைப்படுத்தப்படுகிறது. அகநூல்கள் ஐந்தனுள் அகம் என்றும், நெடுந்தொகை என்றும் அழைக்கப்படும் அகநானுற்றில் மிகுதியான உவமைகள் பயின்று வந்துள்ளன. மேலும் வரலாற்றுச் செய்திகளை உவமைகளாகக் கையாள்வதில் வல்லவர்கள் அகநானுற்றுப் புலவர்கள். தாய் கூற்றிலும் வரலாற்றுச் செய்திகளை உவமைகளாக எடுத்தாண்டுள்ளனர். சேரன், சோழன், பாண்டியன், நன்னன், திதியன், காரி, எழினி, அன்னி போன்றோர் பற்றியச் செய்திகள் தாய்கூற்றில் உவமைகளாகச் சுட்டப்பட்டுள்ளன. அவ்வுமைகளின் சிறப்புகளே இங்கு ஆராயப்படுகின்றது.

தலைவியின் இல்லச் சிறப்பு

தலைவியின் இல்லத்தின் செல்வச்சிறப்பினைக் குறித்து தாய் கூற்றுப் பாடலின் வழியாக புலவர் எடுத்துக் கூறுவர். தலைவியின் தந்தை இல்லத்திற்கும் அதன் காவலுக்கும், மூவேந்தர்களின் தலைநகரங்கள் உவமையாகக் கூறப்பட்டுள்ளன. மூவேந்தருள் சோழரின் உறையூர் நகரம் இருமுறை உவமையால் பயன்படுத்தப்பட்டுள்ளது. தலைவியின் இல்லம், செல்வச் செழிப்புடனும், வடிவிலும், அமைப்பிலும் மூவேந்தரின் தலைநகரத்தை ஒத்தும் விளங்குவதை தாய் உவமை வாயிலாக சுட்டுகின்றாள். மேலும், தலைவியின் இல்லத்தின் செல்வச்சிறப்பைக் கூற வந்த புலவர், ஒளிவீசும் நிலையுடைய சேரன் தனது ஆட்சித்திறத்தினால் முறை செய்து காக்கும் ‘வஞ்சிமாநகரம்’ போன்றது தலைவியின் இல்லம் என்பதனை,

"ஒளிறுவேல் கோதை ஓம்பிக் காக்கும்
வஞ்சி அன்னனுள் வளறுகர் விளங்க"(அகம் பா-263)

என்ற பாடலடிகளின் மூலம் விளக்குகிறார். இவ்வுவமை தலைவியின் இல்லச்சிறப்பை மேம்படுத்தி உணர்த்துகின்றது.

கடல் போன்ற சேனைப்படையினையும், வலிமையான துதிக்கையையுடைய யானைகளையும், விரைந்தோடும் தேரினையும் உடையது சோழனது, சோலை மிக்க காவிரியாற்றின் அருகில் இருக்கும் உறையூர் போன்ற வளஞ்சான்றது தலைவியின் மனையாகும். இதனை,

"கடல்அம் தானைக் கைவன் சோழர்
கெடல் அருநல்இண உறத்தை அன்ன
நிதியுடை நல்கள்" (அகம் பா-385)

"கைவல் யானைக் கடுந்தேர்ச் சோழர்
காவிரிப் படப்பை உறந்தை அன்ன
பொன்னுடை நெடு நகர்" (அகம் பா-369)

எனும் அடிகளில் ‘அவள் இல்லம் பொன்னும், பொருளும் மிக்க சேரர், சோழரின் நகரங்களுக்கு ஒப்பாக இருப்பதைத் தாய் சுட்டுகின்றாள். தலைவியின் சிறப்புகளும், அரசரது நகரச் சிறப்புகளும் தலைவியின் இல்லச் சிறப்புகளும் சிறக்கும்படி உவமைகள் அமைந்துள்ளன.

(தொடர்ச்சி அடுத்த இதழில்)

About The Author