அன்பென்று கொட்டு முரசே!

விவேகானந்தரின் 150 ஆவது பிறந்த நாள் விழாவினை ஒட்டி எழுதப்பட்ட கட்டுரை.)

அதோ ஒரு குழந்தை பிறக்கிறது!. அது சாரதாரணக் குழந்தையல்ல,ஞானக் குழந்தை! தெய்வீகக் குழந்தை! அதன் ஒளிவீசும் கண்களில் தெரிவது வெறும் ஒளி மட்டுமல்ல, ஞானாக்கினி!அது பாலுக்காக அழும் மானுடக் குழந்தையல்ல;பார் உலகிற்காக அழும் தெய்வப் பிறவி!.

அன்று கூடச் சீர்காழியில் ஒரு குழந்தை அழுதது. அன்னபூரணியான உலக மாதா அந்தக் குழந்தைக்கு ஞானப்பால் புகட்டி அந்தக் குழந்தையைத் திருஞான சம்பந்தராக்கினாள்.இந்தக் குழந்தையும் ஞானக் குழந்தை தான். இதற்கு ஞானப் பால் ஊட்டியவர்கள் பகவான் ராம கிருஷ்ண பரம ஹம்சர், அன்னை சாரதா தேவி.உலகம் உய்விக்க வந்த ஞானக் குழந்தை இந்தக் குழந்தை. இந்த மானுட சமுதாயத்திற்காகக் கண்ணீர் வடித்த திவ்யக் குழந்தை இந்தக் குழந்தை.

வங்காளம் நமக்ககுப் பல அரிய புதையல்களைத் தந்திருக்கிறது. பல தேசபக்தர்களையும் அறிவு ஜீவிகளையும் ஞானிகளையும் பரிசாகத் தந்திருக்கிறது. பகவான் ராம கிருஷ்ண பரம ஹம்சர், ரவீந்திர நாத் தாகூர் , பக்கிம் சரத் சந்திரர், சுவாமி விவேகானந்தர்.. போன்றோர் அவர்களில் சிலர்.. நமது தேசிய கீதமே வங்கம் தந்த கொடை தான். அன்று அழுத குழந்தை வேறு யாருமல்ல. பிறப்பால் நரேந்திரனாக இருந்து பின் விவேகானந்தராக, புடம் போட்ட பொன்னாக ஒளி வீசிய சுவாமி விவேகானந்தர் தான்.

கல்கத்தாவின்  பெரும் குடி மகனான துர்க்கா சரண தத்தரின் பேரரும் விசுவநாத தத்தரின் மகனுமாவாவர்   நரேந்திரர். 
துறவறத்தில்   ஈடுபாடுடைய தாத்தா.. அற்றார் அழி பசி தீர்க்கும் தந்தை. ராஜ பரம்பரைக் குடும்பத்தைச் சார்ந்த அன்னை புவனேஸ்வரி. இந்தப் பாரம்பரியத்தில் பிறந்த குழந்தை ஞானியாக அவதாரம் எடுக்காமல் பின் எப்படி வளரும்?ஷத்திரியராகப் பிறந்தும் அரசகுமாரனாக இருந்தும் ஞானம் தேடிக் காட்டிற்குச் சென்ற புத்தருக்கும் நரேந்திரருக்கும் அதிக வித்தியாசமில்லை. காயஸ்தராகப் பிறந்தும் மதங்களுக்கு அப்பாற்பட்ட ஞானியாக இருந்தார்.

தாயின் மடியில் அமர்ந்து கற்ற ராமாயணமும் மகா பாரதக் கதைகளும் தந்தையுடன் சேர்ந்து அனுபவித்த உலகத்தின் சத்திய தரிசனங்களும் அவர் கற்ற ஆங்கிலப் புலமையும் சம்மிஸ்கிருத மற்றும் பெர்சிய மொழிகளில் அவர் பெற்ற புலமையும் அவரின் அகக் கண்களைத் திறந்து விட்டன."எங்கெங்கு காணிணும் சக்தியடா" என்று பாரதி சொன்னதைப் போல்,  ‘மாதா பரா சக்தி வையமெல்லலாம் நீ நிறைந்தாய்’ என்பதைப் போல் பெண்களிடத்தில் தாயைக் கண்டார் நரேந்திரர்.

எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று இயற்கையை ரசித்தார். இந்த உணர்வின் மிகுதி தான் ‘அஹம் பிரும்மாஸ்மி’ என்கிற அத்வைத தத்துவத்தை அவருக்குப் புரிய வைத்தது. ஸ்தூலப் பொருட்களை மாற்றிக் கொள்வதைப் போல் சூட்சுமப் பொருட்களையும் மாற்றலாம் என்கிற தெய்விவீக சத்திகளை தியானத்தின் மூலம் பெற்றார்., ஸ்ரீ ராம கிருஷ்ண பரமஹம்சரின் தரிசனமும் பாத தீஷையும் கிடைக்கப் பெற்றபின் அன்பின் தத்துவதையும் அவதாரத்தின் ரகசியத்தையும் அங்கிங்கெனாதபடி அகிலமெல்லாம் நிறைந்திருக்கும் இறையருள் பற்றியும் உணர்ந்து கொண்டார்.கற்றல் வேறு உணர்தல் வேறு! இரண்டுமே நரேந்திரருக்குச் சாத்தியமாயிற்று.

அகத் தூய்மையும் புறத் தூய்மையும் வாழ்வின் இரு கரைகளாக அமைத்து ‘அன்பே சிவம்! அன்பே நானும் அன்பே நீயும்’ என்கிற தத்துவமறிந்து காளி மாதாவின் அருள் பெற்று நிர்விகல்பம் என்கிற அத்வைத நிலை எய்தினார். இது அனைவராலும் முடியாதது!.இதனால் தான் வரலாற்றுச் சிறப்பு மிக்க சிகாகோவில் நடந்த உலக சர்வ சமய மகா சபையில் 1893 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அவரால் உரை நிகழ்த்த முடிந்தது.

‘சீமான்களே சீமாட்டிகளே’ என்று கேட்டே பழக்கப்பட்ட அமெரிக்க மக்கள்..  "அமெரிக்க சகோதரிகளே! சகோதரர்களே!"  என்று விவேகானந்தர் முழங்கிய போது மெய் சிலிர்த்தது.ஒரு பால சந்நியாசி. ஒளிவீசும் முகம். செந்தழலையே ஆடையாகப் பூண்டது போன்ற காவி உடை. கண்களின் தீஷ்யண்யப் பார்வையும் புத்திக் கூர்மையும் அறிவும் நிரம்பிய உரை.

பன் மொழிப் புலமை

விவேகானந்தரை உலக அரங்கில் ஓர் ஒப்பற்ற ஞானியாக, யோகியாக, இந்தியாவின் சனாதனப் பெருமைகளைத் தெளிவாகக் கூறும் மாபெரும் தூதுவராக, ஒரு உத்தம புருஷராக அடையாளம் காட்டியது.ஸ்ரீ ராம கிருஷ்ண பரம ஹம்சரின் கட்டளைகளை நிறைவேற்றிய இந்து தர்மத்தின்ன பிரதிநிதி தான் ஸ்வாமி விவேகானந்தர்.

அன்று மட்டும் இந்து மதத்தின் சனாதனப் பெருமைகளை, தர்மங்களை விவேகானந்தர் உலக அரங்கில் அரங்கேற்ற வில்லை என்றால் நமது பாரம்பரியம் பற்றிய உண்மைகள் உணரப்படாமலே போயிருக்கும். நாமும் மீளா உறக்கதில் ஆழ்ந்து போயிருப்போம்.ஆனால், இந்த நிலையை அடைய அவர் பட்ட சிரமங்கள் கஷ்டங்கக்ள் கொஞ்ச நஞ்மல்ல. பசியோடும் பட்டினியோடும், உண்ண உணவின்றி படுக்க இடமின்றி, காடு மேடுகளைச் சுற்றித் திரிந்து, வனவிலங்குகளின் இரையாகாமல் தப்பி, பாம்புகளுடனும் பல்லிகளுடனும் வாழ்ந்த கொடுமை தான் என்ன!?தீராத் தாகம், மற்றவர்களின் பிணி தீர்க்கும் ஆர்வம், லட்சிய வெறி – இது தான் விவேகானந்தரின் தாரக மந்திரம்!

வலி இன்றி வாழ்க்கை இல்லை!
விழிகள் மூடினால் வெற்றி இல்லை!
முயற்சி இன்றி மகிழ்ச்சி இல்லை!

இதனால் தான் விழி மூடாமல் முயற்சி குறையாமல் வலிகளுடன், "என் தாய் நாடு இப்படி அடிமைப் பட்டுக் கிடக்கிறதே!என் எண்ணற்ற சகோதரர்களும் சகோதரிகளும் பட்டினியால் பரிதவிக்கின்றார்களே!இந்து மதம் தன் பெருமை குன்றி நலிந்து கிடக்கிறதே!"என்று கண் துஞ்சாமல் ஸ்வாமி அழுத நாட்கள் பல.ஸ்ரீ ராம கிருஷ்ணரின் பிரதமச் சீடராகி உலகிற்கெலாம் அவரின் செய்திப் பரப்பிய ஞான தேசிகர் சுவாமி விவேகானந்தர்.

கீதாசாரியன் கிருஷ்ணர் இவரே!
ஆருயிருக்கெலாம் அன்பு காட்டச் சொன்ன வள்ளலார் இவரே!
அன்பென்று கொட்டு முரசே என்று முரசு கொட்டிய பாரதி இவரே!.
அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு என்ற வள்ளுவரும் இவரே!

செல்லாத நாடுகள் இல்லை.சந்திக்காத மகாராஜாக்களும் திவான்களும் இல்லை. இவருக்கு வரவேற்ப்புத் தராத சமஸ்தானங்கள் இல்லை. இவரைத் தங்கள் வீட்டிற்கு விருந்துண்ண அழைக்காத கோடீஸ்வரர்கள் இல்லை. என் மக்கள் பசியால் பரிதவிக்கும் போது எனக்குப் பட்டு மெத்தையும் விருந்தும் வேண்டாம் என்று புறக்கணித்த தியாகி சுவாமி விவேகானந்தர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா, நியூயார்க், சிகாகோ, லண்டன் போன்ற உலக நாடுகளின் அரங்கங்களில் இந்தியாவின் இந்து மத சனாதன தர்மங்களைப் பறைசாற்றிய ஞானி! இமாலயத்திலிருந்து குமரி முனை வரை இந்தியாவின் எல்லா இடங்களுக்கும் சுற்றுப் பயணம் செய்த யோகி! அப்படிக் கன்னியாகுமரிக்கு வந்திருந்தபோது அவர் அமர்ந்து தியானம் செய்த பாறையே விவேகானந்தர் பாறையாகி இன்று அங்கு நினைவு மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

எத்தனை எத்தனை ஸ்தாபனங்கள், எத்தனை எத்தனை மடங்கள் அன்னாரின் நினைவாக நம்மிடையே மௌன மொழியில் அவரின் பெருமைகளைப் பறைசாற்றிய வண்ணமிருக்கின்றன!இந்து மதத்தின் தொன்மையுடன் முஸ்லீம்களின் உடல் பலத்துடன் ஒரு புதிய பரிணாமத்தை உருவாக்க வேண்டும் என்பது ஸ்வாமிகளின் கனவு. தனக்குக் கிடைத்த பெருமைகளையும் நிதிகளையும் தன் நாட்டிற்காக அர்ப்பணித்த தியாகி இவர்.

ஏழை எளியவர்களைப் பார்த்து, "இப்படி இருப்பது அவர்கள் கர்மம் என்றால், அந்தத் துயர் நீக்ங்குவது நமது தர்மம்" என்றார்.இந்து மதம் ஒன்றே சமுதாயத்தை மேம்படுத்தும் என்ற கருத்தை நாடெங்கும் பரப்பினார்.

"ஓ இந்தியாவே விழித்தெழு! உனது ஆன்மிமீகத்தால் உலகை வெற்றி கொள்ளச் செய்!"

இது சுவாமி விவேகானந்தரின் அருள் வாக்கு.ஆனால், நாம் தான் இன்னமும் தூங்கிக் கொண்டிருக்கிறோம். திருப்பள்ளி எழுச்சி பாட ஆண்டாளோ மாணிக்கவாசகரோ வரப் போவதில்லை."பொழுது புலர்ந்ததது யாம் செய்த தவத்தால்" என்றான் பாரதி.

ஸ்வாமி விவேகானந்தரின் இந்த 150 ஆவது பிறந்த நாள் தினத்தில் "எழுமின் விழிமின்” என்கிற சுவாமிகளின் அருள் வாக்கினை நாம் நினைவு கூரற வேண்டியது அவசியம்!அவரின் கோட்பாடுகளை மதித்து அதன்படி அனைவரும் நடந்தால் சிவபிரானும் ஏசுவும் அல்லாவும் நபிகள் நாயகமும் மனம் குளிர்ந்து ஆசிகள் வழங்குவார்கள் என்பதில் ஐயமில்லை! முரண்பாடுகள் விலகும்.

"நதிகள் அநேகம்! ஆனால், கடல் ஒன்று தான்.
விண்மீன்கள் அநேகம்! வானம் ஒன்று தான்.
நாடுகள் அனேகம்! பூமி ஒன்று தான்.
இது தான் சர்வமத சமயம்!"

இதைத்தான் ஸ்வாமி விவேகானந்தர் விரும்பினார்.படித்தவற்றைவைகளை மனத்துள்ள பாடமாகப் பதித்தால் பாரத மாதா சிதைந்து போகாமல் சிரிப்புடன் காட்சி தருவாள்.

வாழ்க பாரதம்!வாழ்க ஸ்வாமி விவேகானந்தர் பண்பும் பெருமையும்!ஜெய் ஹோ !வாழ்க! வளர்க!

(விவேகானந்தர் 150ஆவது பிறந்த நாள் சிறப்பு மலரில் வெளியான கட்டுரை)

About The Author

3 Comments

  1. Geetha Subramanian

    சுதந்திர இந்தியாவின் வலிகளை அதற்காக போராடிய தேசபக்தர்களை அடையாளம் காட்டிய அழகான கட்டுரை
    அனைவரும் அவசியம் படிக்கவேண்டிய கட்டுரை

  2. roopahariharan

    An excellent article when great leaders are forgotten these days such inspiring articles revives ones memories.

Comments are closed.