அப்படிப் போடு….!

நமக்குப் பிடிக்காதவர்களை எப்படி சமாளிப்பது என்பதைத்தான் உங்களுக்கு நான் இங்கே சொல்லப் போகிறேன். பொதுவாக நம் எல்லோருக்குமே ஏற்படும் அனுபவம்தான். ஏதாவது கல்யாணம், காது குத்து போன்ற நிகழ்ச்சிகளில் உறவினர்களைச் சந்திப்போம். பல உறவினர்களை இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் மட்டும்தான் சந்திப்போம். அப்படி ஒரு திருமணத்திற்குப் போனபோது நடந்த விஷயம்தான் இது.

நான் பெண் வீட்டு சார்பாகப் போயிருந்தேன். நிச்சயமாக பாச்சா என்ற பார்த்தசாரதியைச் சந்திக்கும் விதி எனக்கிருக்கிறது என்று தெரியும். எனக்கு அவர் ஏதோ ஏழெட்டு விட்ட சொந்தம்தான் . ஆனாலும் எந்த விசேஷமானாலும் அவர் தவறாது ஆஜராகி விடுவார். அவராக ஒவ்வொருவரிடமும் சென்று பிளேடு போடுவார். தனது அகட விகட சாமர்த்தியங்களை வெளிப்படுத்துவார்.

இந்த முறை அவரைப் பார்த்தபோது அவர் கையில் ஒரு சீட்டுக் கட்டோடு அலைந்து கொண்டிருந்தார். நாலு பேர் சேர்ந்திருக்கும் இடத்தில் சென்று தன் சீட்டுக் கட்டைக் காட்டி அவர்களைக் கூப்பிட்டுக் கொண்டிருந்தார். சரிதான்! இந்தமுறை சீட்டுக் கட்டில் ஏதோ புதிதாக வித்தை கற்றுக் கொண்டிருக்கிறார் போலிருக்கிறது என்று தோன்றியது.

அவரிடமிருந்து தப்பிக்க எவ்வளவோ முயன்றாலும் அவர் கழுகுப் பார்வைக்கு முன் நான் தோற்றுவிட்டேன். இருந்தாலும் இந்த மனுஷன் மூக்கை எப்படியும் அறுத்தே ஆக வேண்டும் என்ற வைராக்கியம் எனக்குள் எழுந்தது. அவரை சந்தித்த பின்னர் எங்கள் இருவருக்கும் நடந்த உரையாடலைத்தான் கீழே எழுதியிருக்கிறேன். இது பல சந்தர்ப்பங்களில் பாச்சா போன்றவர்களை சமாளிப்பதற்கான ‘கண் திறப்பானாக’ இருக்கட்டும்!

கையில் சீட்டுக் கட்டை வைத்துக் கொண்டு அவற்றை சரக்.. சரக்.. என்று கலைத்தவாறே என்னை நோக்கி வருகிறார் பாச்சா.

( பாச்சா! இந்த முறை உன் பாச்சா நிச்சயம் என்னிடம் பலிக்காது!)

”நீ கார்டு வித்தை பார்த்திருக்கிறாயா, இந்த வித்தை ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும். எங்கே, இந்த சீட்டுக் கட்டிலிருந்து ஒரு சீட்டை எடு"

"இல்லை. எனக்கு வேண்டாம்"

"பரவாயில்லை. ஒரே ஒரு சீட்டு எடு, எந்தக் கார்டு எடுத்தேன்னு நான் சொல்றேன்"

"நீங்க யாரிடம் சொல்வீங்க?"

"புரியலியா? நான் உன்னிடம்தான் நீ எந்த கார்ட் எடுத்தேன்னு கண்டுபிடுச்சு சொல்லிடுவேன். ஒரு சீட்டு எடு"

"எனக்குப் பிடிக்கிற எந்த கார்ட் வேணும்னாலுமா?"

" ஆமா! ஆமா!"

" எந்தக் கலர் வேணும்னாலுந்தானே?"

" ஆமாம்ப்பா, ஆமாம்!"

"எந்த ஜாதி வேணும்னாலும்?"

" ஆமா.. ஆமா. சீக்கிரம் எடு"

" அப்போ சரி! நான் ஏஸ் ஸ்பேட் எடுக்கறேன்"

"உஸ்ஸ்ஸ்… என்னப்பா நீ விஷயம் தெரியாம! சீட்டுக் கட்டுலேருந்து நீ கார்ட் எடுக்கணும்"

"இப்போ இந்த கட்டிலேருந்து எடுக்கணுமா? அப்படியா! இப்போ புரிஞ்சுடுத்து”

"எடுத்திட்டியா?"

"ஆமாம், ஆட்டின் மூணு எடுத்திருக்கேன். இது உங்களுக்கு முன்னாடியே தெரியுமா?"

"ஐயோ, ஐயோ, என்னப்பா , எங்கிட்ட என்ன கார்ட் எடுத்தேன்னு சொல்லித் தொலைக்காதே. அப்புறம் விளையாட்டே கெட்டுடும். சரி! இப்பவானும் சரியா ஒரு கார்ட் எடு. எந்தக் கார்டு எடுத்தேன்னு எங்கிட்ட சொல்லித் தொலைக்காதே"

”உம், சரி, எடுத்துட்டேன்"

"திருப்பி கட்டுலேயே அந்த கார்டை வை. வச்சுட்டியா?"

"வச்சுட்டேன்"

(சரக் சரக் என்று சீட்டுகளைக் கலைக்கிறார்)

"(முகத்தில் மலர்ச்சியுடன்) இந்த கார்டுதானே நீ எடுத்தது?"

"நான் சரியா கவனிக்கலியே!"

" கவனிக்கலியா? சரியாப் போச்சு. என்ன கார்ட் எடுத்தேன்னு கவனமாப் பாக்கணும்"

"ஓ! அப்படியா. கார்டைத் திருப்பி முன்பக்கம் என்னன்னு பாக்கணுமா.. சாரி, சாரி"

"பின்ன என்ன? இப்போ இன்னொரு கார்டு எடு. என்ன எடுத்திருக்கேன்னு பாத்து நினைவில வச்சுக்கோ. எங்கிட்ட சொல்லாதே"

”சரி! இப்போ சரியா எடுத்துட்டேன் "

(சரக்… சரக்… சீட்டு கலைக்கும் சப்தம்)

"சே, என்னப்பா.. உன்னோட பெரிய தொல்லை. சீட்டை மறுபடியும் உள்ள வச்சியா?"

"என்னது, மறுபடியும் வைக்கணுமா! அதை நான் எங்கிட்டேயேதானே வச்சுக்கிட்டிருக்கேன்"

"ஐயோ கடவுளே! சீட்டை மறுபடியும் வச்சாத்தானே நான் என்ன கார்டுன்னு சொல்ல முடியும்? இப்போ நன்னா கேட்டுக்கோ. சீட்டுக் கட்டிலேருந்து ஒரு கார்டு எடு- என்ன கார்டுனு நல்லாப் பாத்துக்கோ. மறுபடியும் திருப்பி கட்டுலேயே வச்சுடு. சரியா?"

"இப்போ நல்லா புரிஞ்சுடுத்து. நான் கூட நீங்க எப்படி செய்யப் போறீங்களோன்னு நினைச்சேன். நிஜமாவே நீங்க சாமர்த்தியக்காரர்தான்"

(மறுபடியும் சரக் சரக் சீட்டு கலைக்கும் சப்தம்.)

"உம்! இப்போ சொல்லு இந்தக் கார்டுதானே நீ எடுத்தது?"

(குறித்துக் கொள்ளுங்கள். இதுதான் நீங்கள் கவனிக்க வேண்டிய நேரம்!)

"இல்லை. இது நான் எடுத்த கார்டு இல்லை" (இது ஒரு பெரிய பொய்! ‘தன்னெஞ்சறிவது பொய்யற்க’ என்று திருவள்ளுவர் மனசிலே மணியடிப்பார். கவலைப்படாமல் "நீங்கள்தானே ‘பொய்மையும் வாய்மைக்கு நிகரானது’ என்றும் சொல்லியிருக்கிறீர்கள்
என்று சொல்லி அவர் வாயை அடைத்துவிடுங்கள்)

(பாச்சா முகத்திலே ஒரு திகைப்பு- கவலை ரேகைகள்)

"நீ எடுத்த கார்டு இல்லையா – நல்லா நினைவுபடுத்திக்கோ"

".. இல்லை.. இது நான் எடுத்த கார்டு இல்லை"

(அப்படிப் போடுங்கள் ஒரு போடு!)

நீ நினைச்ச கார்டு இல்லையா! எப்படித் தப்பாச்சு. இதை எங்க அப்பா, அம்மா, சித்தப்பா சினேகிதர்கள் எல்லார்கிட்டயும் செஞ்சிருக்கேனே. இப்ப மட்டும் எப்படி தப்பாகும்?. எங்கே மறுபடியும் ஒரு கார்டு எடு"

(மறுபடியும் ஒரு கார்டு. மறுபடியும் சரக் சரக். மறுபடியும் "இல்லை.. அந்தக் கார்டு இல்லை"

கவலைப்படாதிங்க அங்கிள். மறுபடியும் ட்ரை செஞ்சு பாருங்க_ நீங்க கொஞ்சம் பரபரப்பா இருந்திருப்பீங்கன்னு நினைக்கிறேன். நிதானமா ஒரு இடத்துக்குப் போய் அரை மணி நேரம் சிந்திச்சுப் பாருங்க. என்ன தப்புன்னு தெரிஞ்சுடும். அடுத்த தடவை சரி செஞ்சுக்கலாம்.

”சே, என்ன தப்பு, எல்லாம் சரியாத்தானே செய்தேன்” என்று முணுமுணுத்தவாறே சீட்டுக் கட்டை மறைத்துக் கொண்டு தளர் நடையுடன் பாச்சா சென்றதைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.

About The Author

4 Comments

  1. Rishi

    குருவே!
    கலக்குறீங்க குருவே! பாச்சா கிட்டேயே உங்க பாச்சா பலிச்சிடுச்சே…!

  2. Ganesh

    Enna escape??? you have wasted around half n hour with this guy on top of it you have wasted our time also by making this article. if u would have done correctly then u could saved ur time!!!!

Comments are closed.