அமானுஷ்யன்-103

கேசவதாஸ் டிவியில் அமானுஷ்யனின் புகைப்படத்தைப் பார்த்தார். டில்லி புறநகர்ப்பகுதியில் வெடிகுண்டு வைத்த தீவிரவாதி, ஒரு கல்லூரியில் வெடிகுண்டு வைக்க முயன்று அவனைப் பிடிக்க வந்த போலீஸ்காரர்களைத் தாக்கி விட்டு தப்பி விட்டான் என்றும் அவனைப் பிடித்துத் தருபவர்களுக்கு ஒரு கோடி வரை பரிசு அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்கள். இத்தனை பெரிய தொகை சர்வதேச தீவிரவாதிகளைப் பிடித்துத் தருபவர்களுக்கு மட்டும் தான் பெரும்பாலும் அளிக்கப்படுகிறது. இவனிற்குப் போய் இப்படி அறிவித்தது அநியாயத்தின் உச்சம் என்று தோன்றியது. ஆனால் உண்மைக்கு இந்த தேசத்தில் பெரிய ஆதரவில்லை என்று அவர் அறிவார். அரசியல்வாதிகள் உண்மையைப் பொய் ஆக்குவதிலும், பொய்யை உண்மை ஆக்குவதிலும் வல்லவர்கள். அவர்கள் ஆளுங்கட்சியினராக இருந்தால் காவல் துறை கண்டிப்பாகத் துணை போயே ஆக வேண்டும். வேறு வழியில்லை.

அவனுடைய புகைப்படத்தைப் பார்க்கையில் அவருக்கு அந்த மந்திரியின் அவசரமும், பயமும் புரிந்தது. அதை நினைக்கையில் அமானுஷ்யன் மீது அவருக்கு உண்மையான மரியாதையும் தோன்றியது. என்ன சாமர்த்தியம் இருந்தால் இத்தனை பேருக்குத் தண்ணீர் காட்டி இருப்பான், அந்த மந்திரிக்குத் தீராத தலைவலியாக இருப்பான்? இவனைப் போல் சிலர் இருந்தால் தான் பயம் என்பது என்ன என்று அந்த மந்திரி போன்ற அதிகாரவர்க்கத்திற்குத் தெரியும் என்று எண்ணிய போது அவருக்கு திருப்தியாக இருந்தது. ஆனால் அதே நேரத்தில் தானே அவனுக்குப் பயந்து மனைவியையும் குடும்பத்தையும் வெளியூருக்கு அனுப்பி விட்டு உட்கார்ந்திருப்பது ஒரு மாதிரியாகத் தான் இருந்தது என்றாலும் தன்னை விடப் பல மடங்கு பலம் வாய்ந்தவர்களே அப்படி பயந்து சாகும் போது இது ஒரு பெரிய விஷயம் அல்ல என்ற ஒரு ஆறுதலும் வந்தது.

ஆனால் மனைவி மட்டும் போகும் போது அவரைக் கண்டபடி திட்டி விட்டுப் போனாள். "இப்படி யாருக்கோ பயந்து நான் அடிக்கடி போய் ஒளிய முடியாது. எனக்கு இங்கே ஆயிரம் வேலை இருக்கிறது. இதுவே கடைசி தடவை. இன்னொரு தடவை இப்படி அனுப்பாதீர்கள். அந்த ஆளைக் கண்டுபிடித்து சீக்கிரமே ஒழித்துக் கட்டுங்கள்."

அவருடைய செல்போன் பாடியது. எடுத்துப் பேசினார். மறுபக்கம் பேசியது உளவுத்துறை தலைமை அதிகாரி. அவர் மந்திரியையும், ராஜாராம் ரெட்டியையும் பார்த்துப் பேசியதையோ, சலீம் என்ற சர்வதேச வாடகைக் கொலையாளியைப் பற்றியோ கேசவதாஸிடம் தெரிவிக்காமல் அமானுஷ்யனைப் பற்றியே கவனமாகப் பேசினார்.

"….சார். அந்த தீவிரவாதி பற்றிய போட்டோவை இப்போது காட்டிக் கொண்டிருக்கிறீர்களே அவன் நிஜமாகவே தீவிரவாதி தானா?"

கேசவதாஸும் மிகுந்த கவனத்துடன் பேசினார். "உண்மையில் அந்த கேசை மற்றவர்கள் தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சொல்கிறதைப் பார்த்தால் அவன் தீவிரவாதி போலத் தான் இருக்கிறது. அவர்களிடம் ஆதாரமும் இருக்கிறது."

"ஆனால் அவன் அமானுஷ்யன் என்ற பட்டப்பெயரில் மும்பையில் இருந்த ஒரு நல்ல மனிதன். அவன் அப்பா ஒரு தாதாவாக இருந்தார். ஆனால் அவன் நேர் மாறாக இருந்தவன்…."

"ஆனால் எப்பேர்ப்பட்டவர்களும் ஒரு காலத்தில் மாறி விடுகிறார்கள் என்பதை நாம் பல தடவை பார்த்திருக்கிறோம்"

"வாஸ்தவம் தான்…."

"உங்களுக்கு அவனைப் பற்றி வேறு ஏதாவது தகவல் கிடைத்திருக்கிறதா?" கேசவதாஸ் ஆர்வத்துடன் கேட்டார். ஏதாவது கிடைத்திருந்து அவர் சொன்னால் அமானுஷ்யனைப் பற்றிய முடிச்சுகள் சிலவாவது விலகும் என்ற நப்பாசை அவருக்கு இருந்தது.

ஆனால் உளவுத் துறை அவருக்கு உதவவில்லை. "சொல்கிற மாதிரி எதுவும் கிடைக்கவில்லை"

உளவுத்துறை அதிகாரி அதிகம் பேசாமல் போனை வைத்து விட்டார். அவருக்கு இப்போதும் அந்த அமானுஷ்யன் மேல் எந்த சந்தேகமும் இல்லை. சலீம் போன்ற சர்வதேச வாடகைக் கொலையாளி வந்ததைக் கூட கண்டு கொள்ளாமல் அமானுஷ்யனைப் போன்றவன் மீது அதிகார வர்க்கம் பாய்வதில் அவருக்கு உடன்பாடு இல்லை. அதனால் தான் சம்பந்தப்பட்ட மந்திரியிடம் தகவலைச் சொன்னார். காவல்துறையின் தலைமை அதிகாரியிடமும் இப்போது பேசினார். இவர்களில் யாராவது ஒருவர் அவரைப் போலவே எண்ணி இருந்தால், இந்த விஷயத்தில் நாட்டின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தல் இருக்கிறது என்பதற்கு அவரிடம் வலுவான ஆதாரங்கள் இருந்திருந்தால், அவர் அடுத்ததாக பிரதமர் அலுவலகத்தைக் கண்டிப்பாக தொடர்பு கொண்டிருப்பார். ஆனால் மந்திரி, போலீஸ், சிபிஐ எல்லாமே ஒரே நிலையை மேற்கொள்ளும் போது அவர் மேற்கொண்டு செய்ய ஏதுமில்லை.

தன் பாதுகாப்பிற்காக எதற்கும் இருக்கட்டும் என்று நினைத்தவராய் மந்திரியிடம் நேரில் தெரிவித்ததை எழுத்திலும் எழுதி ‘மிக ரகசியம்-மந்திரி பார்வைக்கு மட்டும்’ என்று குறிப்பிட்டு அதை பிரத்தியேக நபர் மூலமாக அனுப்பத் தீர்மானித்தார். அவர் தெரிவித்திருக்கிறார் என்பதற்கு ஆதாரம் உண்டாக்கிக் கொண்டதுடன் அவர் அமானுஷ்யனை மறந்தார்.

ஆனால் கேசவதாஸிற்கோ இப்போதும் அமானுஷ்யன் குறித்த பல கேள்விகள் மனதில் எழுந்து குழப்பின. அவன் இந்த மந்திரியை எப்படி பகைத்துக் கொண்டான்? இந்த ரெட்டி எப்படி இதில் சம்பந்தப்படுகிறார்? அமானுஷ்யனை அவர்கள் அந்தக் கல்லூரியில் பிடித்து வைத்திருந்ததாகத் தோன்றியதே எப்படிப் பிடித்தார்கள்? எப்படி தப்ப விட்டார்கள்? அமானுஷ்யன் அடுத்ததாக அவரைத் தேடி வருவானா? இப்போது உளவுத்துறை அதிகாரி போன் செய்தது அவரை ஆழம் பார்க்கத்தான் என்று தோன்றினாலும் அவராவது அமானுஷ்யன் எந்த விதத்தில் மந்திரியோடு சம்பந்தப்படுகிறான் என்று அறிவாரா?…

******

ஆனந்தும் மகேந்திரனும் சேர்ந்து அக்‌ஷய் சொன்னது போல சமீபத்தில் ஏதாவது முக்கிய நாள் வருகிறதா என்று பல வழிகளில் இண்டர்நெட்டில் தேடினார்கள். மது சில மணி நேரங்களுக்கு முன்னால் நேரில் வராமல் ஒரு நம்பகமான ஆள் மூலம் அவர்களுக்கு கடிதம் அனுப்பி அக்‌ஷய் சொன்னதை அப்படியே எழுதி இருந்தான். அத்துடன் தன்னையும் சிலர் பின் தொடர்ந்து கண்காணிக்கிறார்கள் என்றும் அதனால் நேரில் வரவில்லை என்றும் தெரிவித்திருந்தான்.

சாரதாவை மதுராவில் உள்ள ஒரு பிருந்தாவன மடத்தில் ஒளித்து வைத்திருந்தார்கள். அங்கு நடக்கும் பஜனைகளில் தன்னை மறந்து அவள் ஈடுபட்டிருந்தாள். வருணையும், சஹானாவையும் பாதுகாக்கும் ஏற்பாடுகளை மது கவனித்துக் கொண்டான். அவர்களும் கண்காணிக்கப் பட்டார்களே ஒழிய பழையது போல கடத்தப்படும் சம்பவம் ஏதும் நிகழவில்லை. அல்லது அவர்கள் அப்படி நிகழாமல் பார்த்துக் கொண்டார்கள். மது ஏதாவது பொய் வழக்கில் அவர்களை சிக்க வைக்கக் கூடும் என்றும் சந்தேகத்துடன் எதிர்பார்த்தான். ஆனாலும் மீடியாவுடன் தேவையில்லாத விளம்பரம் வேண்டாம் என்று ரெட்டியும் மந்திரியும் நினைத்ததால் அந்தப் பயம் அவர்களுக்குத் தேவை இருந்திருக்கவில்லை.

ஆனந்தும் மகேந்திரனும் தங்கள் தேடலின் முடிவில் இரண்டு நாட்களை முதலில் தேர்ந்தெடுத்தார்கள். ஒன்று மறுநாள். அன்று ஆப்கானிஸ்தான் நாட்டின் ஜனாதிபதி டெல்லிக்கு வருகை தரவிருந்தார். இரண்டாவது நான்காம் நாள். காஷ்மீர் தனிநாடு கேட்டுப் போராடி இறந்த தடை செய்யப்பட்ட இயக்கம் ஒன்றின் தலைவனின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள். இரண்டுமே தீவிரவாதிகளின் வெடிகுண்டு நடவடிக்கைகளுக்கு காரணமாக இருக்க முடியும் என்றாலும் முதல் நாளை ஆனந்த் உடனடியாக ஒதுக்கி வைத்தான்.

"அவர் வரும் நாளில் இத்தனை இடங்களில் குண்டு வைப்பதற்கு முகாந்திரம் இல்லை. ஆச்சார்யா குறித்து வைத்திருக்கும் இடங்களில் பல ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி செல்லும் இடங்களுக்கு சம்பந்தமில்லாதவை"

அந்த நான்காம் நாளை மகேந்திரன் ஒதுக்கி வைத்தான். "அந்த ஆளின் மற்ற நினைவு நாளில் இங்கே எதுவும் நடக்கவில்லை. அப்படி இருக்கையில் இந்த மூன்றாம் நினைவு நாளில் மட்டும் ஏதாவது செய்ய எந்த பிரத்தியேக காரணமும் இல்லை"

இருவரும் நிறைய யோசித்தார்கள். வெடிகுண்டு வைக்க ஏதாவது ஒரு நாள் என்று அவர்கள் எடுத்துக் கொண்டிருந்தால் அவர்கள் எப்போதோ வைத்து விட்டிருக்க முடியும். அப்படி இல்லாமல் ஒரு குறிப்பிட்ட நாளுக்காகக் காத்திருக்க வேண்டுமென்றால் அது ஏதாவது ஒரு வகையில் பிரத்தியேக நாளாகத் தான் இருக்க வேண்டும். அது என்ன நாள்?

மகேந்திரன் மேலும் ஒரு மணி நேரம் தேடி ஓரிடத்தில் தங்கினான். "ஆனந்த், இந்த செய்தியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?"

ஆனந்தும் அந்த செய்தியைப் படித்தான். காஷ்மீர் பள்ளத்தாக்கில் சென்ற வருடம் நடந்த ஒரு துப்பாக்கிச் சூட்டில் தலிபான் தீவிரவாதிகள் தங்கி இருந்த ஓரிடத்தை வெடிகுண்டு வைத்து தகர்த்த செய்தி அது. அந்த தகர்ப்பில் தலிபான் முக்கியத் தலைவன் அப்துல் ரஹ்மான் என்பவன் படுகாயம் அடைந்தோ, மரணம் அடைந்தோ இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று செய்தி சொன்னது. ஆனால் உடல் கிடைக்கவில்லை. தலிபான் தரப்பில் அந்த மரணம் குறித்து மறுத்தோ, ஆமோதித்தோ எந்த விளக்கமும் இல்லை.

மகேந்திரன் சொன்னான். "….ஆனால் அந்த நாளுக்குப் பின் அப்துல் ரஹ்மானை யாரும் பார்த்ததாகத் தகவல் இல்லை. தீவிரவாதத்தில் தீப்பொறி பறக்க அடிக்கடி பேசும் அவன் அதற்குப் பிறகு பேசிய பேச்சு பற்றிய தகவல் கூட இல்லை. அவன் ஒரு வேளை நிஜமாகவே இறந்திருந்தால் நாளை மறு நாள் அவனுடைய முதலாவது நினைவு நாள்…."

ஆனந்த் யோசித்தான். அவன் உள்ளுணர்வு சொன்னது. "நாளை மறுநாள் தான் அவர்கள் தாக்கப்போகும் நாளாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. வெடிகுண்டு தாக்குதலில் இறந்த தங்கள் தலைவனுக்காக அவர்கள் அதே போல பல இடங்களில் வெடிகுண்டு வைத்துத் தாக்கி பழிவாங்க வாய்ப்பு இருக்கிறது"

"அந்த நாள் தான் அவர்கள் தாக்கப்போகும் நாள் மகேந்திரன்" என்று வாய்விட்டுச் சொன்னான்.

******

சலீம் டெல்லி விமானநிலையத்தை அடைந்த கணத்தில் இருந்து அந்த உணர்வு அவனுக்கு இருந்தது. அவன் கண்காணிக்கப்படுவது போன்ற உணர்வு. அவனுடைய தொழிலில் இந்த உள்ளுணர்வு மிக முக்கியம். அது தான் அவனுக்குப் பாதுகாப்பு. அது அவனிடம் வலிமையாக இருந்தது. எத்தனையோ முறை பிடிபடாமல் அவனைக் காப்பாற்றியுமிருக்கிறது. அவன் திரும்பியோ, சுற்றும் முற்றிலுமோ பார்க்க முனையவில்லை. அமைதியாக விமானத்தின் வரவுக்காக காத்திருந்தான். கண்களை மூடிக் கொண்டு அந்த உணர்வில் கவனம் செலுத்தினான். கண்காணிப்பது ஒரு நபரா, அல்லது ஒன்றிற்கும் மேற்பட்டவர்களா என்று தன் உள்ளுணர்வைக் கேட்டான். பலர் அல்ல என்று உள்ளுணர்வு சொல்லியது. ஒருவர் தான். அந்த ஒருவர் யார் என்று உடனடியாக அவனுக்குப் புரிந்தது. "அமானுஷ்யன்".

எவனைப் பின் தொடர்ந்து சென்று தவற விட்டானோ அவனே இப்போது இவனைப் பின் தொடர்ந்து வந்து கண்காணிக்கிறான். அவர்களுடைய பாத்திரங்கள் இப்போது எதிர்மாறாக மாறி விட்டன. டாக்சியில் இங்கு வந்து இறங்கும் வரை அந்த உணர்வு இல்லை, இங்கு வந்த பின் தான் அந்த உணர்வு வந்துள்ளது என்பதால் அவன் தனக்காக இங்கு முன்பே வந்து காத்திருக்கிறான் என்பது புரிந்தது. அவன் கண்டிப்பாக ஜம்மு செல்வான் என்று யூகித்தே வந்தது போல்….

அந்த நேரத்தில் ஜம்மு செல்லும் விமானம் வந்து விட்டதாக விமான நிலைய அறிவிப்பாளர் ஒலிபெருக்கியில் அறிவித்தார். சலீம் என்ன செய்வது என்று யோசித்தான்….

(தொடரும்)

About The Author

1 Comment

  1. Sundar

    அமானுஷ்யன் பிரமாதமான விறுவிறுப்பாக போகிறான். அடுத்த திங்களுக்காக காத்திருப்பது தான் கஷ்டம்.

Comments are closed.