அமானுஷ்யன் (12)

குறுந்தாடி அவருக்காகப் பொறுமையிழந்து காத்துக் கொண்டிருந்தான். அவன் சீக்கியரைப் போலத் தலைப்பாகை இட்டு மாறுவேடத்தில் இருந்தான். அவரை எப்போதும் அவன் அலுவலகத்தில் வந்து சந்தித்ததில்லை. ஆனால் இப்போதைய செய்தி மிக முக்கியமென்பதால் இரவு வரை காத்திருக்க அவனுக்கு நேரமில்லை. ஒரு பொதுத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஒரே ஒரு வார்த்தைதான் அவரிடம் சொல்லியிருந்தான். "அவசரம்"

அவன் குரலைக் கேட்ட அவர் அலுவலகத்துக்கு பதினோரு மணிக்கு வரச் சொன்னார்.

அவன் கடிகாரத்தைப் பார்த்தான். மணி பதினொன்றரை. அரசியல்வாதிகளுக்கும் நேரம் தவறாமை என்ற நல்ல பழக்கத்திற்கும் ஏனோ சம்பந்தமே இருப்பதில்லை. கிட்டத்தட்ட பன்னிரண்டு பேர் கைகளில் மனுக்களுடன் காத்திருந்தார்கள். அடியாட்கள், அன்னக்கைகள் என்று நாலைந்து பேரும் அங்கிருந்தனர்.

அவர் வந்த போது மணி பதினொன்று ஐம்பத்தைந்து. செயலர், இரண்டு அரசு அதிகாரிகளுடன் உள்ளே நுழைந்தவர் அவனைக் கண்டது போலவே காட்டிக் கொள்ளவில்லை. மற்றவர்கள் சல்யூட் அடிக்க அவர் கைகள் கூப்பி அவர்களுக்கு பணிவாக வணக்கம் தெரிவித்து விட்டு தனதறைக்குள் நுழைந்தார். ஆனால் முதலில் கூப்பிட்டனுப்பியது அவனைத்தான்.

அவன் உள்ளே நுழைந்த போது தன் செயலருக்கு ஏதோ சில ஆணைகள் பிறப்பித்துக் கொண்டிருந்த அவர் அவனை உட்கார சைகை காட்டி விட்டு செயலரிடம் போகும் போது கதவை சாத்திக் கொண்டு போகச் சொன்னார்.

கதவை சாத்திக் கொண்டு செயலர் போன பிறகு கேட்டார், "அப்படி என்ன தலை போகிற அவசரம்?"

"அவன் உயிரோடு இருக்கிறான்"

அவர் முகத்தில் இருந்து இரத்தம் வடிந்தது. "என்னது?"

"அவன் உயிரோடு இருக்கிறான்" என்று மீண்டும் சொன்ன அவன் தொடர்ந்தான். "என் ஆள் ஒருவன் அவனை நேரில் பார்த்திருக்கிறான்."

அவருக்கு அதை நம்ப முடியவில்லை. அவன் அன்று காலை தனக்கு வந்த ஃபோன்காலை விவரித்தான். பேச்சில்லாமல் திகைத்துப் போய் அமர்ந்திருந்த அவர் பேச முடிந்த போது வார்த்தைகள் பலவீனமாய் வந்தன. "அவன் எப்படி பிழைத்திருக்க முடியும்?"

"தெரியவில்லை."

"அது சரி, பார்த்த இடத்திலேயே அவனை சுட்டுத் தள்ளாமல் இருந்தது எதனாலாம்…?" அவர் குரல் பலம் பெற ஆரம்பித்தது. கோபத்தில் பொரிந்து தள்ளினார். "ஃபோனில் தகவல் தெரிவிக்க டவர் கிடைக்கவில்லை, சரி. பஸ்ஸை அங்கேயே நிறுத்தி இறங்கி அவனை சுட்டுத் தள்ளியிருக்கலாமே அந்த ஆள்? நீங்கள் கேட்கவில்லையா? அவனைப் பார்த்தவுடனே பயந்து போய் விட்டானா? இந்த மாதிரி பேடிகளை எல்லாம் ஏன் கட்டிக் கொண்டு அழுகிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை"

"சார், அவன் பேடி அல்ல. பல பேரைக் கொன்றவன் அவன். போலீசில் ஒரு தடவை மாட்டி சித்திரவதை அனுபவித்த போது கூட வாய் திறந்து யாரையும் காட்டிக் கொடுக்காதவன். அவன் அந்த அமானுஷ்யன் விஷயத்தில்தான் பயப்படுகிறான். அந்த பயத்திற்குக் காரணம் இல்லாமல் இல்லை. அந்த மலையுச்சியில் ஆறு பேர் துப்பாக்கியால் சுட்டு கிட்டத்தட்ட 15 குண்டுகளில் ஒரே ஒரு குண்டுதான் அவன் மேல் பாய்ந்திருக்கிறது. இத்தனைக்கும் அவனுக்கு அந்த மலையுச்சியில் நகர முடிந்த இடம் குறைவு. அப்படிப்பட்டவனைத் தனியாக தாக்கப் போவது புத்திசாலித்தனம் இல்லை என்று கூட சொல்லலாம்…. "

அவர் அங்கலாய்த்தார். "இப்படிப்பட்டவன் நம் பக்கம் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்!"

அதை அவன் காதில் போட்டுக் கொண்டதாகவே தெரியவில்லை. அவன் கவலை வேறாக இருந்தது. "அவன் உயிரோடு இருந்தால் நமக்கும் நம் திட்டத்திற்கும் ஆபத்து. நான் எங்கள் ஆட்கள் ஏழெட்டு பேரை உடனடியாக அவனைப் பார்த்த இடத்திற்கு போகச் சொல்லியிருக்கிறேன்… அவன் அங்கே இருந்தால் அவனை உயிரோடு அவர்கள் விட மாட்டார்கள்"

"நான் இப்போதுதான் அந்த ஆச்சார்யா கொலைக் கேஸிற்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டு வந்தேன். அதற்குள் இந்தப் பிரச்சினை வந்து விட்டது…. இத்தனை பேர் அவனுக்காக வலை வீசி தேடிக் கொண்டிருக்கும் போது அவன் ஏதோ ஒரு டீக்கடையில் சாவகாசமாய் டீ குடித்துக் கொண்டிருக்கிறான் என்றால் அவன் மனிதனே இல்லை. அவன் உங்கள் ஆட்கள் போகிற வரை அங்கேயே இருப்பானா?" அவர் குரலில் அவன் இன்னமும் அங்கேயே இருப்பான் என்ற நம்பிக்கை இருக்கவில்லை.

*************

அந்தப் பெண் தன்னுடைய விசிட்டிங் கார்டை அவனுக்குத் தந்தாள். "எப்பவாவது டெல்லி பக்கம் வந்தால் கண்டிப்பாக என்னை வந்து பாருங்கள்."

அவன் அந்த விசிட்டிங் கார்டைப் பார்த்தான். சஹானா என்பது அவள் பெயர் என்றும் அவள் பிரபல டிவி ஒன்றில் ரிப்போர்ட்டராக வேலை பார்க்கிறாள் என்பதும் தெரிந்தது. புன்னகையுடன் தலையசைத்தான். அந்த பஸ்ஸ¤ம், வேனும், லாரியும் கிளம்பிச் செல்ல ஆரம்பித்தன. அப்போதுதான் அவள் அங்கு வேறு எதுவும் வண்டிகள் இல்லாததைக் கவனித்தாள். "நீங்கள் அந்த பஸ்ஸில் வந்திருப்பவர் என்று நினைத்தேன். நீங்கள் இங்கேயே இருப்பவர்தானா?"

"இல்லை….." அதற்கு மேல் அவன் விவரிக்க முனையவில்லை.

அவள் குழப்பத்துடன் அவனைப் பார்த்தாள். அவன் ஒன்றும் சொல்லாததைப் பார்த்து தானாகச் சொன்னாள். "நீங்கள் டெல்லி பக்கம் போகிறவராக இருந்தால் காரில் ஏறிக் கொள்ளுங்கள். நான் உங்களை டிராப் செய்கிறேன்…"

அங்கு இனியும் தங்குவது ஆபத்து என்பதை நன்குணர்ந்த அவன் "உங்களுக்கு ஒன்றும் சிரமமில்லையே" என்றான்.

"இதில் என்ன சிரமம் இருக்கிறது…உங்கள் லக்கேஜ் எங்கேயிருக்கிறது?"

"லக்கேஜ் எதுவும் இல்லை"

"அப்படியானால் ஏறிக் கொள்ளுங்கள்" என்று அவள் காரின் பின் பக்கக் கதவைத் திறக்க அவன் தயக்கத்துடன் ஏறிக் கொண்டான். கார் கிளம்பியது.

அவன் அருகில் அமர்ந்திருந்த வயதான பெண்மணி உணர்ச்சியே இல்லாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அந்தச் சிறுவனும் முன் சீட்டில் மண்டியிட்டபடி பின்னால் திரும்பி அவனையே பார்த்தான். அவன் பார்வையில் சினேகம் இருந்தது. அவன் தாய் சொன்னாள். "வருண், சரியாய் சீட்டில் உட்கார்"

"நான் பின்னால் அங்கிள் உடன் உட்காரப் போகிறேன்" என்றான் அந்த சிறுவன்.

"பாட்டியும் அங்கிளும் சௌகரியமாய் உட்காரட்டும்…"

"பரவாயில்லை. வருவதானால் வரட்டும்" என்று அவன் சொல்ல வருண் தாயைப் பார்த்தான். அவள் தலையசைக்க வருண் கைகளை நீட்ட அவன் சிறுவனைத் தூக்கி தன்னருகில் அமர வைத்துக் கொண்டான். வருண் அவனை ஓட்டினாற்போல் உட்கார்ந்து அவனைப் பார்த்து புன்னகைக்க அவனும் புன்னகைத்தான். அவனுக்கு அந்த சிறுவனை மிகவும் பிடித்து விட்டது.

அவன் பின்னால் திரும்பிப் பார்த்தான். எந்த வாகனமும் அவர்களைப் பின் தொடர்வதாகத் தெரியவில்லை.

வருண் அவன் கைகளில் இருந்த சிராய்ப்புகளைப் பார்த்து சொன்னான். "அங்கிள் உங்கள் கையில் ரத்தம்.."

அப்போதுதான் சஹானா பின்னால் திரும்பி அவனுடைய சிராய்ப்புக் காயங்களைக் கவனித்தாள். மகன் காப்பாற்றப்பட்டவுடன் அவனுக்கு ஏதாவது காயம் பட்டிருக்கிறதா என்று அவன் தலையில் இருந்து கால் வரை ஆராய்ந்து பார்த்தவளுக்கு அவனைக் காப்பாற்றிய மனிதனுக்கு ஏதாவது ஆகியிருக்கலாம் என்ற எண்ணம் கூடத் தோன்றாதது ஒரு மாதிரியாக இருந்தது. "சாரி, நான் கவனிக்கவில்லை. இங்கேயே முதலுதவிப் பெட்டி இருக்கிறது…." என்றவள் காரை ஓரமாக நிறுத்தினாள்.

அவனுக்கு அந்த இடத்திலிருந்து எவ்வளவு வேகமாகப் போக முடியுமோ அவ்வளவு வேகமாகப் போய் விட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. "இதெல்லாம் பெரிய காயமில்லை. நீங்கள் காரை நிறுத்த வேண்டாம்" என்று சொல்லிப் பார்த்தான். அவள் கேட்பதாக இல்லை. அவள் நிதானமாக முதலுதவிப் பெட்டியின் சாவியைத் தேட ஆரம்பித்தாள்.

அவன் என்னேரமும் எதிரிகளை எதிர்பார்த்திருப்பதை அவளிடம் சொல்ல முடியாமல் தவித்தான். அவன் பார்வை பின் பக்கமாகவே இருந்தது……

********

மஹாவீர் ஜெயினும் ஆனந்தும் பேசிக் கொண்டிருந்த போது ஜெயினின் ஃபோன் அடித்தது. அழைத்தவர் சிட்டி போலீஸ் கமிஷனர். "சார், உங்கள் அடிஷனல் டைரக்டர் ஆச்சார்யாவைக் கொன்றவனைக் கைது செய்து விட்டோம்…."

அதிர்ந்து போன ஜெயின் கேட்டார். "யார் கொலையாளி? நீங்கள் அவனை எப்படிப் பிடித்தீர்கள்?"

"அந்தக் கொலையாளியைக் கைது செய்த விஷயம் பிரஸ்ஸ¤க்கும், டிவிக்கும் யாரோ தெரியப்படுத்தி விட்டதால் இதே கேள்வியை போலீஸ் அதிகாரிகளிடம் கேட்க நிருபர்கள் கூட்டம் அங்கே மொய்த்துக் கொண்டிருக்கிறது….நீங்கள் டிவியை ஆன் செய்தால் முழு விவரமும் தெரியும். ·ப்ளாஷ் நியூசாக காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள்….."

நன்றி தெரிவித்து விட்டு ஃபோனை வைத்த ஜெயின் ஆனந்தை அழைத்துக் கொண்டு அலுவலகத்தில் டிவி வைத்திருக்கும் ஹாலுக்கு விரைந்தார்.

(தொடரும்)

About The Author

1 Comment

  1. கோபி

    அண்ணா நல்லா இருக்கு.. சூப்பர். மச்சத்தையும் வேலைக்கு எழுதுங்கள்.. ஆவலாக காத்திருக்கிறேன். நன்றி

Comments are closed.