அமானுஷ்யன்-120

துப்பாக்கியை அமானுஷ்யனை நோக்கி குறி வைத்த சலீம் அந்த நேரத்தில் அடைந்த பெருமிதத்தை வாழ்நாளில் வேறெப்போதும் பெற்றதில்லை. அமானுஷ்யனைப் போன்ற எதிரியை வீழ்த்துவது என்பது அவன் சாதித்த மற்றெல்லா சாதனைகளுக்கும் சிகரமாக அமையப் போகிறது. அவன் பின்னால் வந்த காலடித்தடத்தை அவன் பொருட்படுத்தவில்லை. தலிபான் அல்லது போலீஸ்காரர்களில் ஒருவராகத் தான் இருக்கும். வந்த ஆளைப் பார்ப்பதில் ஒரு வினாடி அவன் கவனத்தைத் திருப்பினாலும் அந்த கவனச் சிதறலில் அவன் அமானுஷ்யனைத் தவற விட்டு விடக்கூடும்.

ஆனால் சுடுவதற்கு முன்பு தன் மீது வேறொரு குண்டு பாயும் என்று அவன் சிறிது கூட நினைத்துப் பார்த்திருக்கவில்லை. கேசவதாஸின் துப்பாக்கியில் இருந்து கிளம்பிய ரவை ஒன்று அவன் தலையைத் துளைத்ததைத் தொடர்ந்து அடுத்து வந்த குண்டு அவன் கழுத்தையும் துளைத்தது. நம்ப முடியாமல் திகைத்தது அவன் மட்டுமல்ல அவன் துப்பாக்கிக் குண்டிற்கு இரையாக இருந்த அக்‌ஷயும் தான். சலீம் அப்படியே குப்புற சாய்ந்து கொண்டிருந்தான். அப்போதும் கூட சலீம் தன்னை சுட்டது யாரென்று அறிந்து கொள்ள ஆசைப்படவில்லை. அமானுஷ்யனையே பார்த்தபடி அவன் கீழே விழுந்தான். குப்புறக் கீழே விழுந்த போதிலும் அவன் முகம் மட்டும் அமானுஷ்யன் பக்கமே பக்கவாட்டில் திரும்பி இருந்தது.

அக்‌ஷய் திகைப்புடன் கேசவதாஸைப் பார்த்தான்.

கேசவதாஸ் கீழே விழுந்தவனைக் கவனமாகப் பார்த்து அவன் உயிர் போய்க் கொண்டிருக்கிறது என்பதை உறுதி செய்த பின்பே அக்‌ஷய் பக்கம் திருப்பினார். "நான் அவனை சுட்டிருக்காவிட்டால் அவன் உன்னை சுட்டிருப்பான்"

அக்‌ஷயிற்கு அவர் சொன்னது உண்மை என்பது புரிந்தது. எதையுமே வேகமாகக் கற்றுக் கொள்ள முடிந்த சலீம் இந்த இரண்டு நாட்களில் அக்‌ஷயைப் பின் தொடர்ந்த ஒவ்வொரு வினாடியும் அவனைப் பற்றி நிறைய தெரிந்து கொண்டே வந்திருக்கிறான். இது வரை ஒரு முறை கூட அவன் துப்பாக்கியை வீணாக்கவில்லை. கண்டிப்பாக சுட்டுக் கொன்று விட முடியும் என்று நூறு சதவீதம் உறுதியாகாமல் அவன் குறி பார்த்தவன் அல்ல. அப்படி இருக்கையில் அவன் இப்போது குறிபார்த்திருக்கிறான் என்றால் கேசவதாஸ் சொன்னது போல் சுட்டிருக்க வாய்ப்பு உண்டு.

அக்‌ஷயிற்கு ஏனோ சலீம் மீது ஒரு பச்சாதாபம் தோன்றியது. "எத்தனை திறமை இருந்தும் என்ன பயன்? எல்லாம் அழிவுக்குப் பயன்படுத்தப் போய் அழிந்தே போய் விட்டானே!"

அவனுடைய அந்த இரக்க எண்ணத்தை சலீமும் உணர்ந்தது போல் இருந்தது. மரணத்தின் விளிம்பில் அந்த கடைசி கணத்தில் அக்‌ஷயின் பச்சாதாபம் காண நேர்ந்த சலீம் கடைசியாக ஒரு முறை அதிசயித்தான். "என்ன மனிதனிவன்?". அந்த வியப்போடு அவன் உயிர் போயிற்று.

கேசவதாஸும் அக்‌ஷயின் எண்ணத்தைப் படிக்க முடிந்ததால் சலீமைப் போலவே வியந்து தான் போனார். கொல்ல வந்தவனைக் கூட அவனால் வெறுக்க முடியவில்லை, வருத்தம் தான் படுகிறான் என்று தெரிந்த போது அவர் மனதில் ஒரு எண்ணம் மேலோங்கியது. "இவனை சாக விட்டிருந்தால் ஏழேழு ஜென்மத்திற்கும் எனக்கு விமோசனம் கிடைத்திருக்காது".

கேசவதாஸின் இந்த திடீர் மனமாற்றத்திற்குக் காரணம் இருந்தது. அமானுஷ்யன் ஃபைலைப் படித்த போது நல்லவன் என்று உணர்ந்தாலும் அவர் மந்திரி வீரேந்திரநாத்தின் பகையைப் பெற்ற அவன் பக்கம் சாய விரும்பவில்லை. அவனுக்கும் மந்திரிக்கும் இடையே ஏதோ தனிப்பட்ட பகை என்று நினைத்தாரே ஒழிய வேறு விவரங்கள் அவர் அறிந்திருக்கவில்லை. அதிகார வர்க்கத்தைப் பகைத்துக் கொள்ளும் எண்ணம் இல்லாத அவர் வேறு வழியில்லாமல் மந்திரிக்கு எதிராக நடந்து கொள்ளும் எண்ணம் இல்லாதவராக இருந்தார். அவனால் தன் குடும்பத்திற்கு ஆபத்தும் வரலாம் என்ற பயமும் இருந்ததால் எப்படியாவது அவன் செத்து ஒழிந்தால் பிரச்னை இல்லை என்ற அபிப்பிராயமே இருந்தது. இந்த மனநிலை பிரதமர் அலுவலகம் செல்லும் வரை அவருக்கு இருந்தது.

பிரதமர் அலுவலகத்தில் ஆனந்த் வாயால் கேள்விப்பட்ட தகவல்கள் அவரை உண்மையிலேயே அதிர்ச்சி அடைய வைத்தன. தலிபான்கள் போன்ற தேசவிரோதிகளுடன் சேர்ந்து நாட்டில் பல இடங்களில் குண்டு வெடிக்கச் சதி செய்யத் துணிந்தவர் வீரேந்திரநாத் என்பதும், ஆரம்பத்தில் இருந்தே அதைத் தடுக்க முயன்று வந்தவன் அமானுஷ்யன் என்றும் அறிந்த போது அவன் மீது மிகப்பெரிய மரியாதை தோன்றியது. தனிப்பட்ட விரோதம் அல்ல அவன் குற்றம், அவனுடைய தேசப்பற்று தான் அவன் குற்றம் என்பதை உணர்ந்த போது அவர் தன் முந்தைய ‘கண்டும் காணாத நிலை’க்காக உண்மையிலேயே வெட்கப்பட்டார். இத்தனை வேலைகளையும் செய்த வீரேந்திரநாத் இந்த விஷயத்தில் உண்மைகளை மறைத்து அவரையும் ஏமாற்றி இருக்கிறார் என்பதால் கோபமும் பட்டார். அவருடைய தலைமையில் இருக்கும் போலீஸ் துறையையும் அவருக்கு கீழ் இருக்கும் அதிகாரிகளைக் கொண்டு வீரேந்திரநாத் இந்த நாச வேலைக்கு உபயோகப்படுத்தி வந்ததும் அவருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

தான் முன்பு காட்டிய அலட்சியத்திற்கு பிராயசித்தம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் திடமாக எழவே அவர் ஜம்முவிற்கு உடனடியாகக் கிளம்பினார். தன் எண்ணம் வீரேந்திரநாத்திற்கும், அவரிடம் விலை போயிருக்கும் மற்றவர்களுக்கும் தெரியாமல் இருக்கும்படி அவர்களிடம் கவனமாக புதிராகப் பேசினார். அவர் மனமெல்லாம் அமானுஷ்யனிற்கு எதுவும் ஆகியிருக்கக் கூடாது என்பதிலேயே இருந்தது. நல்ல வேளையாக சரியான சமயத்தில் வர முடிந்தது.

அவர் அக்‌ஷயிடம் சொன்னார். "இவன் சர்வதேச வாடகைக் கொலையாளி. இவனுக்காக வருத்தப்பட வேண்டியதில்லை".

அக்‌ஷய் அதற்கு பதிலேதும் சொல்லாமல் தக்க சமயத்தில் வந்து உதவியதற்கு கேசவதாஸிற்கு நன்றி தெரிவித்தான்.

ஆனந்த் வந்து பிரதமர் அலுவலகத்தில் சொன்னதைத் தெரிவித்த கேசவதாஸ் பிறகு லேசான குற்றவுணர்ச்சியுடன் சொன்னார். "நான் முதலில் உனக்கும், வீரேந்திரநாத்திற்கும் ஏதோ தனிப்பட்ட தகராறு, அதனால் தான் அவர் அப்படி நடந்து கொள்கிறார் என்று நினைத்து தவறு என்று தெரிந்தும் கண்டு கொள்ளாமல் இருந்தேன். ஆனால் உண்மை தெரிந்த பிறகு நான் இதைக் கூட செய்யா விட்டால் என்னையே நான் என்றைக்கும் மன்னிக்க முடியாது. இன்னும் அபாயம் முடிந்து விடவில்லை. சரி இனி அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம். வெளியே ஒரு கூட்டம் இருக்கிறது. வீரேந்திரநாத் வேறு இப்போது ஜம்முவிற்கு வந்து உன் பிணத்தைப் பார்க்க காத்திருக்கிறார். ."

அவர் சொன்னதை யோசித்த அக்‌ஷய் பிறகு புன்னகையுடன் சொன்னான். "அப்படியானால் அவர் ஆசையை நிறைவேற்றி விடுவோம். என்னைப் பிணமாக அவர் பார்க்கட்டும்…."

கேசவதாஸ் அவனைக் கேள்விக்குறியோடு பார்த்தார்.

அக்‌ஷய் புன்னகை மாறாமல் சொன்னான். "அவர் இங்கே வரட்டும்"

கேசவதாஸிற்குப் புரிந்தது. அவர் சொன்னார். "அதை நான் செய்கிறேன். வெளியே இருக்கும் கூட்டத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன். ஆனால் வீரேந்திரநாத்தை மட்டும் நீ தான் பார்த்துக் கொள்ள வேண்டும். அந்த ஆள் இறந்தால் தியாகி ஆகி விடுவார். உயிரோடு இருந்தால் என்ன ஆதாரம் கொடுத்தாலும் அதெல்லாம் எதிரிகள் உருவாக்கியது என்று திரும்பத் திரும்பச் சொல்லி உண்மையாக இருக்கலாமோ என்ற சந்தேகத்தை மக்களிடம் கிளப்பி விடுவார். அதனால் அவரிடம் மட்டும் கருணை காட்டி விடாதே."

சலீமிடம் காட்டிய அந்த கடைசி இரக்கம் வீரேந்திரநாத்திடம் காட்டினால் ஆபத்து என்று அவருக்கு சொல்லாமல் இருக்க முடியவில்லை. அக்‌ஷய் புரிந்தது என்று தலையாட்டினான். இருவருமாக அடுத்தது என்ன செய்வது என்று கலந்தாலோசித்து வேகமாக ஒரு முடிவுக்கு வந்தார்கள். இருவருமாக சேர்ந்து சலீமின் சடலத்தை பார்வையில் படாத ஒரு இடத்திற்கு மாற்றினார்கள்.

கேசவதாஸ் வேகமாக வெளியே போக அக்‌ஷய் சலீமின் உடலில் இருந்து சிந்திய இரத்த வெள்ளத்தில் படுத்துக் கொண்டான். மனதில் அண்ணனிடம் சொன்னான். "ஆனந்த், உன்னிடம் அந்த சாது சொன்ன காட்சியும் பலித்து விட்டது. நானும் உயிரோடு இருக்கிறேன். உனக்குத் திருப்தி தானே"

கேசவதாஸ் வெளியே வந்து புன்னகையுடன் தன்னிடம் முன்பு பேசிய சப் இன்ஸ்பெக்டரை அழைத்து சொன்னார். "அமானுஷ்யன் இறந்து விட்டான்".

சப் இன்ஸ்பெக்டர் முகம் பிரகாசமாகியது. "உண்மையாகவா சார்"

"ஆமாம். சலீம் அந்த வேலையை கச்சிதமாக முடித்து விட்டான். ஆனால் இனி நான் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன. நீங்கள் ஒரு ஆளும், அவர்களில் ஒரு ஆளும் மட்டும் உள்ளே வந்து பாருங்கள். பிறகு நானும் சலீமுமாக சேர்ந்து அமானுஷ்யன் பிணத்தை யாருக்கும் கிடைக்காத மாதிரி செய்து விடுகிறோம். நமக்கு நேரம் அதிகம் இல்லை. சீக்கிரம் வந்து பாருங்கள்"

சப் இன்ஸ்பெக்டர் சலீமிடம் போனில் பேசிய தலிபான் ஆளிடம் சென்று தகவலைச் சொல்ல அவன் முகத்திலும் மின்னல் வெளிச்சம். மற்றவர்களிடம் அப்படியே நிற்கச் சொல்லி விட்டு அவர்கள் இருவர் மட்டும் அமானுஷ்யன் பிணத்தைப் பார்க்க கேசவதாஸுடன் உள்ளே வந்தார்கள்.

இரத்த வெள்ளத்தில் கிடக்கும் அமானுஷ்யனைத் திருப்தியுடன் இருவரும் பார்த்தனர். "சைத்தான் ஒரு வழியாக ஒழிந்தான்" என்று தலிபான் ஆள் நிம்மதிப் பெருமூச்சு விட்டு சொன்னான். பிறகு நினைவு வந்தவனாகக் கேட்டான். "சலீம் எங்கே?"

கேசவதாஸ் சொன்னார். "அவன் சுவிட்சர்லாந்து போக விசா பற்றி மேலே பேசிக் கொண்டிருக்கிறான். அடுத்த வேலை அங்கேயா, இல்லை சுற்றுலா போகிறானா தெரியவில்லை. இவன் பிணத்தை அவன் திட்டப்படியே அப்புறப்படுத்தி விட்டு அடுத்த நிமிஷம் அவன் பறந்து விடுவான்"

சப் இன்ஸ்பெக்டர் சொன்னார். "மந்திரி சார் இவன் செத்தவுடனேயே தெரிவிக்கச் சொல்லி இருக்கிறார். நான் சொல்லி விடுகிறேன்"

முதல் ஆளாகச் சொல்லி பதவி உயர்வு வாங்கி விட அவர் துடித்தார். கேசவதாஸ் தலையாட்டி விட்டு சொன்னார். "நீங்கள் பேசி விட்டுக் கொடுங்கள். பிறகு நான் பேசுகிறேன்…."

மூவரும் வெளியே சென்றார்கள். போகும் போதே தலிபான் போன் செய்து தன் தலைவனிடம் தகவலைச் சொன்னான். அதே போல் சப் இன்ஸ்பெக்டர் மந்திரிக்குப் போன் செய்தார். "சார் அமானுஷ்யன் கதை முடிந்தது."

எத்தனை தான் ஆசைப்பட்டு அந்த செய்திக்காக வீரேந்திரநாத் காத்துக் கொண்டிருந்தாலும் அதைக் கேட்ட போது அவருக்கு ஏனோ உடனடியாக நம்ப முடியவில்லை. "நீங்கள் அவன் பிணத்தைப் பார்த்தீர்களா? அவன் எப்படி செத்தான். விவரமாகச் சொல்லுங்கள்"

"நான் கண்ணால் பார்த்து விட்டுத் தான் சொல்கிறேன். சலீம் தான் கொன்றான்….."

கேசவதாஸ் அதற்கு மேல் அந்த இன்ஸ்பெக்டரைப் பேச அனுமதிக்கவில்லை. செல்போனிற்காகக் கையை நீட்டினார்.

".இருங்கள் சார், கேசவதாஸ் சார் பேச வேண்டும் என்கிறார்…." என்று அந்த சப் இன்ஸ்பெக்டர் செல் போனை கேசவதாஸிடம் தர கேசவதாஸ் பரபரப்புடன் சொன்னார். "சார். சலீம் அவன் பிணம் யார் கையிலும் கிடைக்கக் கூடாது என்பதில் கண்டிப்பாக இருக்கிறான். அது தான் நல்லது என்று எனக்கும் தோன்றுகிறது. இங்கே செய்ய வேண்டிய வேலைகள் சில இருக்கின்றன. அதை அரைகுறையாய் முடித்தால் நாளைக்குத் தேவை இல்லாத பல கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டி வரும். அமானுஷ்யன் விவகாரம் பிரதமர் வரை போய் விட்டதால் கவனமாக எல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது. நீங்கள் அவன் பிணத்தைப் பார்க்க வேண்டுமா? இல்லை நாங்கள் அதை சலீம் சொன்னது போலவே அப்புறப்படுத்தி விடலாமா?"

வீரேந்திரநாத் அவசரமாகச் சொன்னார். "பொறுங்கள். நான் அவன் பிணத்தைப் பார்க்க வேண்டும். நானே நேரில் வருகிறேன்…. பிரதமருக்கு இவன் விவகாரம் எது வரையில் தெரியும்?"

"இங்கு வருகிறீர்கள் அல்லவா, நேரிலேயே சொல்கிறேனே. அதற்குள் முதல் வேலையாக இங்கே இருக்கிறவர்களை போகச் சொல்லி விடலாம் என்று பார்க்கிறேன். பொதுமக்களின் கவனத்தை அதிகம் கவர்ந்தால் கடைசியில் அமானுஷ்யன் பற்றியும் சலீம் பற்றியும் தேவையில்லாத பல கேள்விகள் எழலாம்"

"சரி சரி, அனுப்பி விடுங்கள். சும்மா அங்கே கூட்டம் சேர்த்த வேண்டாம். நான் உடனே புறப்பட்டு வருகிறேன். இடம் எங்கே என்று டிரைவரிடம் சரியாகச் சொல்லுங்கள். அவனிடம் போனைத் தருகிறேன்…"

அந்த டிரைவரிடம் வர வேண்டிய இடத்தை விவரித்து விட்டு கேசவதாஸ் சப் இன்ஸ்பெக்டரிடமும், தலிபானிடமும் சொன்னார். "இனி நாங்கள் இங்கே ஆக வேண்டியதைப் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் எல்லாரும் இந்த இடத்தை விட்டுப் போய் விடுங்கள். உளவுத் துறை ஆட்கள் மோப்பம் பிடித்து இங்கே வரும் போது நீங்கள் எல்லாம் இல்லாமல் இருப்பது நல்லது."

அடுத்த சில நிமிடங்களில் அங்கே கூடியிருந்த போலீசாரும், தலிபான்களும் அங்கிருந்து பறந்தார்கள்.

வீரேந்திரநாத் இதயத்தில் இருந்து மிகப் பெரிய பாரம் விலகி இருந்தது. அமானுஷ்யன் பிணத்தைப் பார்க்கச் சென்று கொண்டிருந்த போது தான் ராஜாராம் ரெட்டிக்குப் போன் செய்து தகவலைச் சொன்னார். ராஜாராம் ரெட்டியும் பெரும் நிம்மதி அடைந்தார். "கடைசியில் அமானுஷ்யனும் மனிதன் தான் என்பது நிரூபணம் ஆகி விட்டது பார்த்தீர்களா?".

வீரேந்திரநாத் மிகவும் மகிழ்ச்சியோடு ராஜாராம் ரெட்டியுடன் சிறிது நேரம் பேசி முடித்தார். அமானுஷ்யன் பிணத்தைப் பார்க்கப் போகும் போது முழுமையான போலீஸ் பந்தோபஸ்து வேண்டாம் என்று நினைத்தபடியால் கூட இரண்டு பாதுகாவலர்களை மட்டும் கூட்டிக் கொண்டு கிளம்பி இருந்தார். அவர் மனதில் இந்த நாட்டின் பிரதமராக முடிசூடியே ஆகி விட்டிருந்தது. அமானுஷ்யன் என்ற ஒரு தடை விலகினால் பின் எந்த தடையும் இல்லை என்றே நினைத்திருந்ததால் அவர் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தார்.

அந்த பாதி கட்டப்பட்டிருந்த கட்டிடத்தின் முன் அவர் கார் நிற்கையில் கேசவதாஸ் ஓடோடி வந்து அவரை வரவேற்றார். வீரேந்திரநாத்திற்கு அக்‌ஷயைக் காணும் வரை இருப்பு கொள்ளாத தவிப்பு இருந்ததால் வேகமாக காரிலிருந்து இறங்கி "எங்கே அவன்?" என்று கேட்டார்.

"நான்காவது மாடியில் சார்"

அவர் வேகமாக கேசவதாஸுடன் நடக்க அவருடைய பாதுகாவலர்களும் அவரைத் தொடர்ந்தார்கள். கேசவதாஸ் தயக்கத்துடன் வீரேந்திரநாத்தின் காதுகளில் சொன்னார். "சலீம் உங்கள் பாதுகாவலர்கள் கண்களில் படுவதை விரும்பவில்லை…."

"அவன் இன்னும் போகவில்லையா?"

"அமானுஷ்யன் பிணத்தை அப்புறப்படுத்தாமல் போக அவன் விரும்பவில்லை. நீங்கள் வராமலிருந்திருந்தால் அவன் தன் வேலையை முடித்துக் கொண்டு போய் இருப்பான். நீங்கள் வருவதாக சொல்லி இருந்ததால் தான் காத்துக் கொண்டிருக்கிறான்….இவர்கள் மூன்றாம் மாடி வரை வரட்டும். நான்காம் மாடிக்கு வராமல் இருந்தால் சரி…"

வீரேந்திரநாத் என்ன சொன்னாலும் ஒத்துக் கொள்ளும் மனநிலையில் இருந்ததால் சரியென்றே சொன்னார். மூன்றாம் மாடி வரை வந்து கீழேயே பாதுகாவலர்கள் நிற்க மந்திரி மட்டும் கேசவதாஸுடன் நான்காம் மாடிக்கு வந்தார். தரையில் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்த அமானுஷ்யனைப் பார்த்த போது அவர் அடைந்த நிம்மதி அலாதியானது. எத்தனையோ நாள் அவரை உறங்க விடாமல் செய்த சனியன் ஒழிந்தான் என்று நினைத்தவராக அவனை நெருங்கி அத்தனை வெறுப்பையும் சேர்த்து காலால் எட்டி உதைத்தார்.

அடுத்த கணம் ரத்த வெள்ளத்திலிருந்து ரத்தம் சொட்டச் சொட்ட அமானுஷ்யன் எழுந்தான். அவனுடைய மின்னல் வேக எழுச்சியைக் கண்ட அவரது அதிர்ச்சிக்கு எல்லையே இல்லை. அவர் வாய் விட்டுக் கத்த முனைவதற்குள் அமானுஷ்யன் அவரை செயலிழக்கச் செய்து விட்டான். கோமா நிலைக்குச் சென்று விட்ட வீரேந்திரநாத்தின் முகத்தில் கடைசி உணர்ச்சியான அதிர்ச்சி நிரந்தரமாகத் தங்கி விட்டது.

கேசவதாஸ் கண்ணசைக்க அக்‌ஷய் மறைவான இடத்திற்கு நகர்ந்தான். வீரேந்திரநாத்தை அப்படியே நிலத்தில் கிடத்தி விட்டு கேசவதாஸ் கீழே வந்து பாதுகாவலர்களிடம் சொன்னார். " திடீரென்று என்ன ஆயிற்று என்ற் தெரியவில்லை. மந்திரி அப்படியே மயக்கமாக விழுந்து விட்டார். படியேறியதாலோ என்னவோ தெரியவில்லை."

பாதுகாவலர்கள் மேலே விரைந்து வந்தனர். கோமாவில் கிடந்த வீரேந்திரநாத்தைப் பார்த்த போது அவர்கள் முகத்தில் பயம் பரவ ஆரம்பித்தது. அமானுஷ்யன் பிணத்தையும் அவர்கள் அங்கே பார்க்கவில்லை. இரத்தம் மட்டுமே தரையில் நிறைய இருந்தது. இதே ஜம்முவில் முன்பு ஒரு பாதுகாவலர் இப்படி கோமாவிற்கு சென்றதை முதலிலேயே அறிந்த அவர்களுக்கு இது தற்செயல் என்று தோன்றவில்லை. அவர்கள் கண்களில் தெரிந்த பயத்தைக் கவனித்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் கேசவதாஸ் ஆம்புலன்ஸிற்குப் போன் செய்தார்.

*********

ராஜாராம் ரெட்டிக்குத் தன் காதுகளை நம்ப முடியவில்லை. அவருக்குத் தகவல் தெரிவித்த நபரிடம் மீண்டும் ஒரு முறை சொல்லச் சொன்னார்.

"சார். மந்திரி வீரேந்திரநாத்திற்கு திடீர் என்று உடம்பு சரியில்லாமல் போய் விட்டது. இப்போது கோமாவில் இருக்கிறார்…."

தொடர்ந்த பேச்சைக் கேட்கும் மனநிலையில் ராஜாராம் ரெட்டி இல்லை. போன் இணைப்பைத் துண்டித்து விட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்தார். கனாட் ப்ளேஸ் பகுதியில் ஒரு வெடிகுண்டு வெடித்து ஏழு பேர் பலியான செய்தி உடனடிச் செய்தியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அதே சமயத்தில் நிறைய இடங்களில் இருந்த வெடிகுண்டுகளைக் கண்டுபிடித்து செயலிழக்கச் செய்து விட்டதாக செய்தியாளர் பரபரப்புடன் சொல்லிக் கொண்டிருந்தார். பத்து இடங்களில் வைத்த வெடிகுண்டுகளில் ஒன்பது கண்டுபிடிக்கப் பட்டு செயலிழக்கப்பட்டு விட்டது புரிந்தது.

வீரேந்திரநாத் கோமாவில் இருக்கிறார் என்றால் அமானுஷ்யன் இறந்திருக்க முடியாது. அவரை வரவழைக்க கேசவதாஸ் ஒரு பொய்யை அவிழ்த்து விட்டிருக்கிறார் என்பது புரிந்தது. தற்போதைய நிலவரத்தை ஜீரணிக்க ராஜாராம் ரெட்டிக்கு சில நிமிடங்கள் தேவைப்பட்டன. அவர் இதயத்தை ஏதோ ஒரு கனம் அழுத்த ஆரம்பித்தது.

‘அவர் ஒரு காலத்தில் நல்லவராக இருந்தார். அப்போது விதி அவருக்கு எதிராக இயங்கியது. இப்போது கெட்டவராக மாறி இருக்கிறார். இப்போதும் விதி அவருக்குப் பாதகமாகவே இயங்குகிறது……’ நினைக்க நினைக்க கனம் கூடியது. இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன் ஆச்சாரியா சொன்ன வார்த்தைகள் இப்போது அவர் காதில் எதிரொலித்தன. "தர்மம் தாமதமாக ஆனாலும் ஜெயிக்காமல் போகாது ரெட்டி. இப்படிப்பட்ட மனிதர்கள் இதற்கெல்லாம் தண்டனை பெறாமல் போக மாட்டார்கள்."

அடுத்த செய்தியாக வீரேந்திரநாத் நோய்வாய்ப்பட்டது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக ஆரம்பித்தது. செய்தியாளர் ஒருவர் சொல்லிக் கொண்டு இருந்தார். "….மந்திரி வீரேந்திரநாத் அவர்களுக்கும் ஜம்மு நகரத்திற்கும் ராசி சரியில்லை என்பதே பலருடைய கருத்தாக இருக்கிறது. சென்ற மாதம் அவர் இங்கு வந்த போது அவருடைய பாதுகாவலர் ஒருவரும் கோமாவிற்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது….."

அமைதியாக எழுந்து சென்று தன் மேசையின் அடியில் வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்த ராஜாராம் ரெட்டி அதைத் தன் நெற்றிப் பொட்டில் வைத்து அழுத்தினார்.

(அடுத்த வாரம் முடியும்)

About The Author

11 Comments

 1. madhu

  Amazing sttory.. Thanks for bringing a happy end… Ganesan Sir, we request you to come back with an another story very soon… A family story with suspense just like Manidharil ethanai nirangal 🙂 Thanks a lot for the wonderful story.. Akshay will be in our memories for a long time…

 2. Sundar

  ஆகா ப்ரமாதம். அமானுஷ்யனா கொக்கா. அந்த கேரக்டரைக் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தீட்டீங்க சார். சலீம் சாகற இடமும் அமானுஷ்யன் மனமும் தத்ரூபமாய் எழுதியிருக்கீங்க. பாராட்டுகள்.

 3. Veena

  Wow!!! Nice turning point 🙂 . கேசவதாஸ் செய்த மிகப்பெரிய நல்ல சாதனை இது தான் 🙂 சலீமின் கடைசிநேர எண்ணங்கள்… so nice to read 🙂 . வீரேந்திரநாத்தை கோமாவிற்கு அனுப்பியது…. அப்பாடி இப்போ தான் எங்களால் நிம்மதி பெருமூச்சி விட முடியுது 🙂 . ராஜாராம் ரெட்டி – இது வரை செய்த பாவத்தின் பலனை எதிர் நோக்க தைரியமில்லாத கோழை. அவரும் இந்த கதைக்கு இனி தேவை இல்லை தான் 🙂 . இனி ஜெயின் சார் சரியாகனும், அக்ஷைக்கு அழகான வாழ்க்கை வருணுடன், சஹானாவுடன் சேர்ந்து கிடைக்கணும் 🙂 . Now waiting for the jolly update [of course with romance too 🙂 🙂 ] ….

 4. Rajarajeswari

  அக்‌ஷய் சலீமின் உடலில் இருந்து சிந்திய இரத்த வெள்ளத்தில் படுத்துக் கொண்டான். மனதில் அண்ணனிடம் சொன்னான். ஆனந்த், உன்னிடம் அந்த சாது சொன்ன காட்சியும் பலித்து விட்டது. நானும் உயிரோடு இருக்கிறேன். உனக்குத் திருப்தி தானே”//

  நிம்மதி அடைந்த அருமையான இடம்… பாராட்டுக்கள்..”

 5. கோபி

  கணேசன் அண்ணா.. சூப்பர்.. முதலே இருந்து பாத்துட்டு வாரன்.. இந்த பாகம் .. எல்லாத்தயும் விட சூப்பர் அண்ணா.. நிசாச்சாரல் ஒவ்வொரு திங்களும் ஓப்பின் பண்ணுறதே அமானுஷ்யன் பாக்கத்தான்,,

 6. prince

  Thank you for a thrilling and fast suspense story.
  Perfect story to be made as a movie.
  Keep writing more such stories.

 7. கே.எஸ்.செண்பகவள்ளி

  அருமை! முடிவும் சிறப்பாக இருக்கும் என்று கணித்து விட்டேன். ஒவ்வொரு வரிகளிலும் நாற்காலியின் முனைக்கு கொண்டு வந்து விட்டீர்கள். என்னாகுமோ என்ற பரபரப்பு. வாழ்த்துகள்! கே.எஸ்.செண்பகவள்ளி, மலேசி

 8. devi

  ரெம்ப நல்லா இருக்கு. I wait for the weekly update from Sunday morning itself. sometime nillacharal gets update on sunday itself.
  The one and only thing I read first in Nillacharal is this story. I will read the other articles when i get time, but for this story I will make time. I am really going to miss this from next week onward. All your story narrations are wonderful. Try to come up with one another with your own style.
  Or atleast try to extend Amanushyan for 100 more weeks :-);

Comments are closed.